தொகுப்பு : ஆர்த்தி மோகன்பாபு
”எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்னும் கவித்துவ வரிகளால் மட்டுமில்லாமல் கடைத்தேற்ற வழியாய் மாறும்போது வேறுபாடுகளை களை எடுக்கும் காலம் உருவாகும்” என்ற நம்பிக்கை விதையை முற்போக்கு எழுத்தின் வழியே தனக்கே உரிய பாணியில் நம்முள் விதைக்கிறார் எழுத்தாளர் அல்லி உதயன்.
வீ. உதயகுமார் எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அல்லி உதயன் மா. வீரபத்திரன். உண்ணாமலை அம்மாள் அவர்களின் மூத்த மகனாவார். மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் வசித்து வருகிறார்.
1960 களில் தினத்தந்தியின் கன்னித்தீவில் இருந்து வாசிப்புப் பயணத்தைத் துவங்கியவர் அல்லி உதயன். தனது பதிமூன்றாவது வயதிலேயே நூலகம் அழைத்துச் சென்ற தந்தை வீரபத்திரன்தான் தனது எழுத்தின் ஆதார சுருதி என்று குறிப்பிடுகிறார் உதயன். மாணவப் பருவத்தில் 1970 களில் “மலைக்குடிசை மர்மம்” என்ற கதையை அசடிப்பதற்காக மதுரை சென்று, வின்சண்ட் மச்சாது என்ற மனிதரால் பாதுகாக்கப்பட்டு, தேனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டதும் அல்லி உதயன் அவர்களின் முதல் இலக்கியப் பயணம் எனலாம்.
இரண்டாம் வகுப்பு வரையே படித்த தந்தையின் டிரங்குப் பெட்டியில் இருந்துதான் மார்க்ஸ், டால்ட்ஸ்டாய், கார்க்கி, சதக் ஹசன் மாண்ட்டோ என பல எழுத்தாளர்கள் தனக்கு அறிமுகமானதைக் குறிப்பிடுகிறார் அல்லி உதயன். அங்கு துவங்கிய வாசிப்பு புதுமைப்பித்தன் முதல் கோணங்கி வரை நீண்டிருக்கிறது.
பெரும்பாலான படைப்பிலக்கியவாதிகளைப் போலவே அல்லி உதயனின் முதலில் பிரவகித்தவை – கவிதைகள்தான். “இந்தப் புல் என்ன விலை” எனும் இவரது முதல் கவிதையை ஒழுங்கு செய்து, செம்மலர் இதழில் பிரசுரமாகக் காரணமாக இருந்தவர் – தோழர் தி.வரதராசன். அல்லி உதயன் அவர்களின் முதல் சிறுகதை எழுத்தாளர் பொன் விஜயன் நடத்திய “புதிய நம்பிக்கை” இதழில் வெளிவந்தது. துவக்க கால சிறுகதையில் இருந்து எல்லா சிறுகதைகளும் பிரசுரமானவுடன் அவற்றை வாசித்து, அஞ்சலட்டை எழுதி பாராட்டும் ப. ரத்தினம் அவர்கள் தனது இலக்கிய பயணத்தில் மிக முக்கியமானவர் என்று குறிப்பிடுகிறார் அல்லி உதயன்.
சிறு வயது முதல் தான் வாழ்ந்து வளர்ந்த சூழல், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சுற்றியிருக்கும் யதார்த்த மக்களின் நிலையைக் கொண்டே சிறுகதைகளை எழுதத் துவங்கினார். “படைப்பு என்பது அகமனத் தூண்டுதலில் எழுத வேண்டும். எளிய மனநிலையில் இருந்தால் மட்டுமே மனநிறைவோடு எழுத இயலும்” என்று பாமர மக்களைப் பற்றிய படைப்புகளை எழுதிக் கொண்டிருந்தவர், தமுஎகச வில் இணைந்த பின்னர் அவ்வாறு எழுத வேண்டியதன் அவசியத்தை ஆழமாக உணர்ந்து கொண்டார்.
உண்ணாமலை பதிப்பகம் துவங்கி, அப்போது எழுதிக் கொண்டிருந்த பல எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து கவிதை, சிறுகதைத் தொகுப்புகளை பதிப்பாளராக இருந்து வெளியிட்டார். பிழிவு தொகுப்பையும் சேர்த்து எட்டு நூல்களை இவரது பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சைக்கிளில் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று மாசாலா மற்றும் மாவுப்பொருட்கள் தயாரித்து விற்கும் வேலையைச் செய்து வந்த அல்லி உதயன், தற்போது தேனி அருகிலிருக்கும் அரண்மனைப்புதூரில் அரிசி மற்றும் கால்நடைத் தீவனங்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேனி மாவட்ட அளவில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாநில குழு உறுப்பினராக பொறுப்புகள் வகித்துள்ளார் தற்போது மாவட்ட குழு உறுப்பினராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அல்லி உதயன் அவர்கள் 1970 களில் இருந்து
நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ”பிழிவு” சிறுகதைத்
தொகுப்பிற்குப் பிறகு 2018 வரை வேறு தொகுப்புகளை
வெளியிடவில்லை. 2018 ஆம் ஆண்டு “அல்லிஉதயன் கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
வெளிவந்துள்ள நூல்கள்
1) கறை படிந்த வைகறைகள் (கவிதை தொகுப்பு - 1980) குன்றக்குடி அடிகளார் வெளியிட்டது
2) பிழிவு (சிறுகதைத்தொகுப்பு - 1988)
3) அல்லி உதயன் கதைகள் (2018)
பரிசுகள்
1)
சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி நடத்திய கவிதைப் போட்டி (1976)
2)
தமுஎகச மாநில குறுநாவல் போட்டி (1993)
3)
சாவி வார இதழ் நடத்திய வைரவரிச் சிறுகதைப் போட்டி (1995)
4)
DYFI இளைஞர் முழக்கம் நடத்திய சிறுகதைப் போட்டி(1998)
5)
பட்டுக்கோட்டை தமுஎகச நடத்திய சிறுகதைப் போட்டி
6) செம்மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி
விருதுகள்
*
ஆதித்தனார் விருது
* மருதிருவர் விருது
*
தென்தேன் தமிழ்ச்சங்க விருது
*
பாக்கியா பள்ளி விருது
*
தேனி பட்டர்ஃபிளை விருது
*
முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்ற விருது
*
உரத்த சிந்தனை விருது