தொகுப்பு : கு.ஹேமலதா
அ.வீராசாமி என்ற
இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் விடியல் வீரா அவர்கள் 17.3.1960 அன்று தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் பிறந்தவர். பெற்றோர்
மு. அண்ணாமலை - பேச்சியம்மாள். விடியல் வீரா அவர்கள் கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், சொற்பொழிவாளர்
என்று பன்முகங்களைக் கொண்டவர்.
மின்னியல் பட்டயப்
பொறியாளரான இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப்
பொறியாளராக பணியாற்றி தற்போது பணி ஓய்வில் இருக்கிறார்.
மனைவி வீ.தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். அனைவரும் பொறியாளர்கள். மகன்
வீ.ஜெயக்கார்த்திகேயன், மகள்கள் வீ.ஜெயந்தீஸ்வரி, வீ.ஜெயப்பிரியதர்சினி.
தன்னுடைய 41 வது வயதில் எழுதத் துவங்கிய இவர் 2004 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக
இணைந்தார். தேனி மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் எழுத்தாளர்களான தேனி சீருடையான், அல்லி உதயன், ம.காமுத்துரை போன்றவர்களிடம் ஏற்பட்ட பழக்கம்,
இவருடைய இலக்கிய
ஆர்வமும்,
எழுத வேண்டும் என்ற உத்வேககத்திற்கும் காரணமாக அமைந்தது என்று குறிப்பிடுகிறார். இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைக்கும் விருப்பத்துடன் தொடர்ந்து செயல்படுபவர்.
இவர் 2006 இல்
தனது முதல் நூலான 'விடியல்' என்ற
கவிதை தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து 'பகுத்தறிவு' என்று சிறுகதை தொகுப்பும், 'இளைஞர்கள் உருவாக்கும் இனிய தேசம்'
என்ற நாவலும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல வார,
மாத இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. பல அமைப்புகள் தொகுத்து
வெளியிட்ட கவிதைத் தொகுப்பு நூல்களில் இவரது
கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
தமுஎகச தேனி கிளைச் செயலாளராகவும்,
தேனி மாவட்ட துணைச் செயலாளராகவும்,
மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
வெளிவந்துள்ள நூல்கள்
விடியல் - கவிதை தொகுப்பு (2006)
பகுத்தறிவு - சிறுகதை நூல் (2013)
இளைஞர்கள் உருவாக்கும் இனிய தேசம் - நாவல்
(2014)
தடைகளை தகர்த்திடு - சிறுகதை தொகுப்பு
பெற்ற பரிசுகள், விருதுகள்
1.வையைத் தமிழ்ச் சங்கம், தேனி சங்கத்தமிழ் அறக்கட்டளை வழங்கிய 'கவிச்சுடர்'
2.தேனி டிராமாலயா கல்ச்சுரல் ஆர்ட்ஸ்,முல்லை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கிய 'கலை இலக்கிய சேவை' விருது மற்றும் 'இயல் இசை நாடக வேந்தர்'சான்றிதழ்
3.சென்னையின் 'நம் உரத்த சிந்தனை அமைப்பு' வழங்கிய 'எழுத்துச் செம்மல்'
4.கோவை இறைத் தமிழ் மன்றம் வழங்கிய 'காவியப் பாவலர்' விருது
5.எழுத்தாளர் இதயநிலவன் அவர்கள் இயக்கிய 'எனில்' குறும்படத்தில் நடித்ததற்காக பெற்ற பாராட்டுச் சான்றிதழ்
6.தேனி லயன்ஸ் கிளப் வழங்கிய சிறந்த பொறியாளருக்கான 'மகாகவி பாரதியார் விருது'
7.மதுரை கனல் பூக்கள் பத்திரிகை வழங்கிய 'சிறந்த கவிஞர்' விருது
8.உதகை மலைச்சாரல் தமிழ் கவிஞர் சங்கம் வழங்கிய 'தமிழ் நம்பி'
9.தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்கம் வழங்கிய 'இலக்கிய சேவை விருது'
10.சென்னை சோலைப் பதிப்பகம் வழங்கிய 'கவித்தென்றல்', 'சிறுகதைச் செம்மல்' விருது
11.கோவை இறைத்தமிழ் மன்றம் வழங்கிய 'செந்தமிழ் முத்து'
12.கோவை வசந்த வாசல் கவிமன்றம் வழங்கிய 'தமிழ்கவி முரசு'