தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் இராசேந்திரசோழன் அவர்கள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். அஸ்வகோஷ் என்கிற பெயரிலும் நிறைய எழுதி இருக்கிறார்.
1945 டிசம்பர்
17இல்,
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆசிரியராகத் தன்னுடைய பணியைத் தொடங்கிய இராசேந்திரசோழன் அவர்கள்
ஏராளமான
சிறுகதைகள் எழுதினார். 1970ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ மாவட்ட அளவில் சிறப்பிதழ்கள் வெளியிட்டு, அது சார்ந்த சிறுகதைப் போட்டிகளும் நடத்தி வந்த நேரத்தில், தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டதில் இவருடைய கதை முதல் பரிசு பெற்று வெளியானது. படைப்பிலக்கியத்தின் ஊடே மார்க்சியக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டார். மதுரையிலிருந்து செம்மலர் வெளிவரத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அஸ்வகோஷ் என்ற பெயரில் அதில் நிறைய கதைகளை எழுதினார். கூடவே கசடதபற, கணையாழி, அஃக் இதழ்களிலும் எழுதினார்.
தீக்கதிர்,
செம்மலரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாய் நேரடி சமூக செயல்பாடுகள், இயக்கங்கள் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். இரண்டாண்டு காலம் சென்னைத் தோழர்களுடன் இணைந்து ‘பிரச்சனை’, ‘உதயம்’ இதழ்களை நடத்தி அதில் நிறைய எழுதினார்.
கூடவே
நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு,
தில்லி
தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை ‘செஞ்சுடர் கலாமன்றம்’ என்கிற பெயரில் தொடங்கி, நகரங்களிலும், சிற்றூர் புறங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
‘அறிவை சனநாயகப்படுத்துவதொன்றே
அதிகாரத்தை முறியடிக்கும்’ என்கிற கோட்பாட்டை புனைவுசாரா தன் எழுத்தின் இலக்காகக் கொண்டுள்ள இவர், இந்த
நோக்கில்
மார்க்சியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில்
எழுதிய
“கடவுள்
என்பது என்ன?” “சொர்க்கம் எங்கே இருக்கிறது?” என்கிற
நூல்களும்,
பின்நவீனத்துவக் கோட்பாட்டை விமர்சித்து எழுதிய “பின் நவீனத்துவம் - பித்தும் தெளிவும்”
என்கிற நூலும் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களில் ஒருவர். இவரது
‘மொழிக்கொள்கை’
என்ற நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.
ஒரு
மனிதன் தான் வாழும் காலத்தில் எவ்வளவு மனிதர்களை நேசித்தான், எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான் வாழ்வின் சாரம் என்று தன்னுடைய பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதனையே மையமாகக் கொண்டே அவரின் படைப்புகள் அமைந்திருக்கின்றன.
மண்மொழி என்ற இதழை நடத்தியுள்ளார். இவரது இலக்கியப் பணியை பாராட்டும் விதமாக, புதுவை சீனு. தமிழ்மணி, முனைவர். பா.இரவிக்குமார், முனைவர். இரா. செங்கொடி, முனைவர் வி. செல்வப்பெருமாள் ஆகிய நால்வர் குழு, நட்புக் குயில்கள் என்ற அமைப்பின் பெயரில் ‘பன்முகப் படைப்பாளி இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்) - வாழ்வு - படைப்பு - செயல்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு தொகுப்பு நூல்களை கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.
“படைப்பு என்பது ஒரு இசைக்கோவை போல எனக்குள் நிகழ்கிறது. அக்கோவையில் தொடக்கம், முடிவு, ஏற்ற இறக்கங்கள், இடைநிகழ்வுகள் எல்லாம் ஒரே சீராக இறுதியாக்கப்பட்ட உருவ அமைதியில் இருக்கவேண்டும் என மனது விரும்புகிறது. இதனாலேயே ஒவ்வொரு படைப்பும் அதன் போக்கில் தன்னளவில் ஒரு வரைபடத்தை உருவாக்கிக் கொள்கிறது” என்று படைப்பு பற்றிச் சொல்கிறார் இராசேந்திரசோழன் அவர்கள்.
இவரது
பல சிறுகதைகள் பல மாணவர்களால் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசிக்கிறார். மகன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார். தற்போது சென்னையிலும் மயிலத்திலுமாக வசித்து வருகிறார்.
வெளிவந்துள்ள நூல்கள்
புனைவிலக்கியம்
இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
(சிறகுகள் முளைத்து (1988), 21வது அம்சம்,
பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம் (1997) மூன்றும்)
இராசேந்திரசோழன் சிறுகதைகள்
(பறிமுதல் 1979, எட்டு கதைகள் 1984, தற்செயல் 1994
மற்றும் பல சிறுகதைகளை உள்ளடக்கியது)
பதியம் நாவல்
காவலர் இல்லம் நாவல்
நாடகம்
தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
அஸ்வகோஷ் நாடகங்கள்
அரங்க ஆட்டம்
(மேற்கத்திய இந்திய நாடகம் -இயக்குதல் கோட்பாடு
தமிழ் நாடகம் இவற்றை உள்ளடக்கியது)
கட்டுரைகள்
கருத்தியல் மதம் சாதி பெண்
மண் மொழி மனிதம் நீதி
மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி
தமிழகம் தேசம் மொழி சாதி
பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்
மொழிக் கொள்கை
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை
இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்
அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்
திராவிடம் மார்க்சியம் தமிழ்த் தேசியம்
பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்
தலித்தியம் - நோக்கும் போக்கும்
தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்
தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்
தத்துவம்
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?
பின் நவீனத்துவம் -பித்தும் தெளிவும்
மார்க்சிய மெய்யியல் (கடவுள் என்பது என்ன? 1995
சொர்க்கம் எங்கே இருக்கிறது? 2006 இரண்டும் இணைந்தது)
தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
பொதுவுடைமையும் தமிழர்களும்
அறிவியல்
அணுசக்தி மர்மம்
அணு ஆற்றலும் மானுட வாழ்வும்
அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்