தொகுப்பு: பா.கலைச்செல்வி
"தனக்காக மட்டும் வாழும் சுயநல வாழ்க்கை அர்த்தமற்றது. பொது சமூகத்திற்காக வாழ வேண்டும். அதில் எப்பொழுதும் புலம்பல் அற்ற ஒரு மகிழ்ச்சி இருக்கும். "என்று கூறும் எழுத்தாளர் ஜீவசிந்தன் அவர்கள் 13.07.1959 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகிலுள்ள அரிமண்டபம் எனும் சிறிய கிராமத்தில் கோவிந்தசாமி- ஜெகநாதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வரதராசன்.
விருப்பம் இல்லாவிட்டாலும் அரசு போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் பணியை ஏற்றார். ஏற்ற பணியை செம்மையுடன் ஆற்றினார். தொழிற்சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.
இத்தனை பணிச்சுமைக்கு இடையேயும் புத்தக வாசிப்பை தொடர்ந்தார். இவர் வாழ்ந்த கிராமத்தில் இருந்த கோடாங்கிகளும், குறிசொல்லிகளுமே தன்னை எழுத தூண்டியதாக கூறும் இவர், இது போன்ற மூடநம்பிக்கைகளை கண்டு மனம் சங்கடப்பட்டு அது தொடர்பான கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறார். இவர் எழுதிய "காவுகள்", "உயிருக்கு உயிர்" என்னும் இரண்டு சிறுகதைகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மாநில மாநாட்டு சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய "வானம் பார்த்த மனசிலே" என்னும் சிறுகதை செம்மலர் நடத்திய சிறுகதை போட்டியில் பிரசுரத்தேர்வும், "நீர் விளையாட்டு" என்னும் சிறுகதை போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் பிரசுர தேர்வும் பெற்றது.
இதுவரை இவர் எழுதிய 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூலான "நிலமெல்லாம் முள் மரங்கள்" நூல் 2018 அக்டோபரில் வெளியானது. இந்நூல் சாமானியனின் அத்தனை சங்கடங்களையும் அலசும் அழகிய படைப்பு. மூடநம்பிக்கைகள், ஜாதி, விவசாயத்தை இழந்த கிராமம், வறுமையின் கொடுமை என பல கருத்தாழமிக்க சிந்தனைகள் அடங்கிய சிறுகதைகள் கொண்ட நூல் இது.
தன்னுள் எழும் மேம்பட்ட புரிதலை சமூகத்திற்கு கடத்தும் பெரும் பணியாற்றும் எழுத்தாளர்களில் ஒருவராகவே தொழர் ஜீவசிந்தன் விளங்குகிறார்.
இவரது மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் அனைவருமே வாசிப்பும் எழுத்தும் தங்கள் வாழ்வின் பயனாக கருதுகின்றனர். அரசுப் பணியில் இருந்துகொண்டே வாசிப்பு, எழுத்து, தமுஎகச பணி என்று அனைத்தையும் திறம்பட செய்ய முடிந்ததற்கு எனது மனைவியே காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார். இவரின் இல்லம் புத்தகாலயமாகவே காட்சியளிக்கிறது.
காரைக்குடியில் வசித்து வரும் இவர் அங்கு வாரம்தோறும் ஒரு எழுத்தாளரின் படைப்பைக் கொண்டு இலக்கிய சந்திப்பு நடத்தி வருகிறார். மேலும் யூடியூப் சேனலில் "நான் ஒரு கதை சொல்வேன்" என்ற தலைப்பில் பல படைப்பாளர்களின் கதைகளையும் வாசித்து கூறியிருக்கிறார்.
அரசியல், வரலாறு, பொருளாதாரம், இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் இவருடைய வாசிப்புத் தளம் உள்ளது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் படைப்பிலும் ஒன்றையாவது வாசித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். "மரபை விட சிறந்தது ஒன்றுமில்லை என்று பெரும்பகுதி தமிழ் பண்டிதர்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியவில்லை. அப்படி கறாராக பேசுவோர் பெரும்பாலும் அவைகளை தாண்டி வராதவர்களாகவே இருப்பார்கள். நவீன இலக்கிய வாசிப்பும், புரிதலும் அவர்களுக்கு சங்கடமாகவே இருக்கும்" என்றும் கூறுகிறார்.
"சமூகத்திலும் எழுத்துலகிலும் பெண்கள் இன்னும் ஆணுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது, ஜாதியற்ற மதமற்ற இலக்கை நோக்கி சமூகம் நகர வேண்டும் என்பது என் விருப்பம், அது கைகூடும் வரை மத நல்லிணக்கத்திற்காக நாம் பாடுபட வேண்டும்" என்றும் கூறுகிறார்.
தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவராகவும் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
வெளிவந்துள்ள நூல்
நிலமெல்லாம் முள் மரங்கள் (சிறுகதைத் தொகுப்பு)
பெற்ற பரிசுகள்
- விருதுகள்
1. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மாநில மாநாட்டு சிறுகதைப் போட்டிகளில் இரண்டு முறை இரண்டாம் பரிசு.
2. செம்மலர் சிறுகதைப் போட்டியில் பிரசுரத் தேர்வு.
3. போடி மாலன் நினைவு
சிறுகதைப் போட்டியில் பிரசுரத் தேர்வு.