May 14, 2021

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

 தொகுப்பு: சக்தி பகதூர் 

           காலம் காலமாக சாதி மதம் என்னும் கட்டமைப்பிற்குள் சிக்கி வெறியூட்டப்பட எந்த ஒரு மனிதனும் ஏதேனும் ஒரு சின்ன தருணத்தில் அவன் மனிதனாக மாறுகிறான். மறுபடியும் அவனிடம் உள்ள மனிதத் தன்மை போய் அவனுக்கு ஊட்டப்பட்ட கருத்தெல்லாம் அவனுக்குள் வந்து, சக மனிதனை வெறுப்பவனாக மாறுகிறான். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவன் மனிதனாக மாறும் அந்த சிறிய தருணங்களைத்தான் அதிகப் படுத்த வேண்டும்.


            நம்முடைய கலை இலக்கியம் எல்லாம் இதைத்தான் செய்ய வேண்டும். இந்த மனிதப் பிறவி என்பதில் அதிகப் பட்சம் மனிதத் தன்மையுடன் நாம் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு உங்களுக்கு ஆடத் தெரிந்தால் ஆடிச் சொல்ல வேண்டும். பாடத் தெரிந்தால் பாடிச் சொல்ல வேண்டும். எழுதத் தெரிந்தால் எழுதி சொல்ல வேண்டும். இதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயல்பாட்டினை இரத்தின சுருக்கமாக கூறும் தோழர் ஆதவன் தீட்சண்யா, தற்போது தமுஎகச வின் பொதுச் செயலாளராக உள்ளார்.

            எஸ்.எம்.இரவிச் சந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட தோழர் ஆதவன் அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தவர். இவரது தந்தை அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி.- ஆசிரியராகவும் கால்நடை உதவியாளராகவும் பணிபுரிந்து 1967 இல்  வெளியேறியவர். ஆதவன் அவர்களின் தாயார் ஈச்சம்பாடி என்ற அவரது சிற்றூரிலிருந்து முதன்முதலாக பள்ளிக்கூடம் சென்றவர். அதனாலேயே அவருக்கு பள்ளிக்கூடத்தாள் என்ற பட்டப்பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறார்.

    1984ல் தொலை தொடர்பு தறையில் மத்திய அரசு பணிக்கு வந்த பிறகு…. ஆதவன் என்னும் புனைப் பெயரில் எழுத ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் ஓசூர் ஆதவன் என்றே அறியப் பட்டவர் தன்னுடைய மகள் பிறப்பிற்கு பிறகு தீட்சண்யா என்ற அவரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு ஆதவன் தீட்சண்யா எனும் பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார்.

            கையெழுத்து பிரதிகளில் எழுதத் துவங்கிய காலம் துவங்கி இன்றுவரை அவருடைய எழுத்துகள் எல்லாமே அதிகார படிநிலையை தகர்த்தெரியும் சம்மட்டிகளாகவே உள்ளன.சில இடங்களில் சமத்துவம் என்னும் சொல்லே ஒரு மோசடியான சொல்லாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு என்று குறிப்பிடும் தோழர் ஆதவன், எழுத்துப் பணியுடன் நின்று விடாமல் தொழிற்சங்க பணியிலும் நீண்டகாலம் களப்பணி ஆற்றியவர். அரூரை சொந்த ஊராக கொண்ட தோழர் டெலிபோன் துறையில் தருமபுரி மாவட்ட தொழிற்சங்க தலைவராக பணியாற்றினார்.

எழுத்தாளன் என்பவன் எழுதுதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்க கூடாது. முற்போக்கு என்பது வெறுமனே எதிர்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது மட்டுமல்லஒரு சமூகத்துனுடைய சூழலைப் புரிந்து கொண்டு, இந்த சமூகம் ஒரு பத்தாண்டுகள் கழித்து என்னவாக இருக்க வேண்டும். அல்லது அடுத்த தலைமுறை என்னவாக இருக்க வேண்டும். என்று முன்கூட்டி யோசித்துஅதற்கான ஒரு தீர்வை ஆக்கப் பூர்வமாக முன் வைப்பதும் முற்போக்குதான். என்ற கருத்தில் நின்று சமூக மாற்றத்திற்காக களப் பணியும் எழுத்துப் பணியையும் சமமாக மதித்து மேற்கொண்டு வரும் தோழர் ஆதவனின் படைப்புகள் எப்போதுமே தனித் தன்மையானவை.

            புதிய நாடுகளையும் விநோதமான கதா பாத்திரங்களையும் படைப்பதில் புனைவுலகத்தில் தனித்து நிற்கிறார். உதாரணத்திற்கு மீசை என்பது வெறும் மயிர் லிபரல் தேசத்து கதைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

            தமிழ்ச் சிற்றிதழ் உலகில் காத்திரமான படைப்புகளை ஆதவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தபுது விசைஇதழ் செய்து வந்தது.

            சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

இதுவரை வெளியான அவரது நூல்கள்

கவிதை தொகுப்புகள்

புறத்திருந்து

பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்

தந்துகி

ஆதவன் தீட்சண்யா கவிதைகள்

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் 

சிறுகதைகள்

எழுதவேண்டிய நாட் குறிப்பின் கடைசிப் பக்கங்கள்.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை

ஆதவன் தீட்சண்யா சிறு கதைகள்

நீங்கள் சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்

கட்டுரைகள்

இட ஒதுக்கீடல்ல மறு பங்கீடு

ஆகாயத்தில் எறிந்த கல்

ஓசூர் எனப்படுவது யாதெனில்

இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங்க சாமி

எஞ்சிய சொல்

தூர்ந்த மனங்களை தோண்டும் வேலை

நாவல்

மீசை என்பது வெறும் மயிர்

நேர்கால்

நான் ஒரு மநு விரோதி

இணைய இணைப்புகள்