தொகுப்பு: எம்.ராதிகா விஜய்பாபு
கவிஞர் ஆர் நீலா அவர்கள்
கவிதை கட்டுரை மற்றும் சிறுகதை என பல்வேறு தளங்களில் ஆளுமை படைத்த பெண்ணிய
எழுத்தாளர்.
வாழ்க்கை - ஒருமுறை அதை
நாம் எவ்வாறு வாழ்கிறோம் நம் மரணம் தருவாயில் அல்லது முதிர்ந்த வயதில் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்
பொழுது நம்மால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் பயன் பெற்றவர்கள் அதிகமாக இருக்க
வேண்டும் என்ற மேம்பட்ட கருத்தை உடையவர்.
"இன்றைய பெண்களின்
நிலை கற்காலத்தை விட கொடுமையாக இருக்கிறது அறிவியல் முன்னேற்றமும் கற்ற கல்வியும்
தப்பை எப்படி நுணுக்கமாக செய்வது என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆண்
சம்பாதிக்கப் பிறந்தவன் என்பதும் பெண் சமைக்கப் பிறந்தவள் என்றும் சமூகம்
வைத்திருக்கும் வேறுபாட்டை நாம் களைய வேண்டும்" என்ற
தீவிர பெண்ணிய சிந்தனையாளர்.
தஞ்சை மாவட்டம் விரியன்
கோட்டையைச் சேர்ந்தவர். பெற்றோர்கள் கோவிந்தசாமி - பழனியம்மாள். இணையரின் பெயர் துரை அரங்கசாமி. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். சிறுதானிய
சிற்றுண்டி மற்றும் மாடித்தோட்ட பயிற்சியாளராக உள்ளார்.
பள்ளிக்காலத்தில் நாளிதழ்கள்,
வார, மாத இதழ்கள் தொடங்கி கைக்கு எட்டுவதை எல்லாம் வாசிக்க துடிக்கும் மாணவியாகி, பின் வயதுக்கு மீறி அதிக பக்கங்கள் கொண்ட
பெரிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தால் பள்ளியில் அனைவராலும் அறியப்படும் வகையில்
விளங்கினார். அனைத்து ஆண்டும் பள்ளியி நடத்தப்பட்ட கட்டுரைப்
போட்டியில் முதலிடம் பிடித்து பிரபலமாகத் திகழ்ந்தார்.
அவரது வாசிப்பிற்கு உறுதுணையாக
அவரது அம்மாவும் தமிழாசிரியர்
பன்னீர்செல்வம் அவர்களும் இருந்திருக்கிறார்கள்.
தாய் வீட்டில் அம்மா ஊக்கப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு பின் கணவன் உறுதுணையாக
இருப்பதினால் சுதந்திரமாக இலக்கியப் பணிகளில் ஈடுபட முடிவதாக குறிப்பிடுகிறார்.
தான் படிக்கும்
கதைகளின் வழியே அந்தந்த இடங்களில் உலா வருவது போலவும்,
ஜெயகாந்தனின் சிறுகதைகளை படிக்கும் பொழுது சில
கதாபாத்திரங்களை நிஜத்திலும் தனக்குள்ளும் தேடுவதாக உணர்வதாலும் இலக்கிய வாசிப்பு ஆழமானதாக மாறுகிறது என்கிறார்
எழுத்தாளர் நீலா.
1991
இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் புரட்சியை ஏற்படுத்திய அறிவொளி இயக்கம் பற்றி தன்
முதல் கவிதையை எழுதினார். தனது முதல் கட்டுரை தொகுப்பான பாமர தரிசனம் நூலில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில்
பகுதியில் உள்ள ஓர் கிராமத்தில் பொட்டல்
பிரசவம் பற்றி எழுதியதன் மூலம் அப்பிரச்சனை ஊடகங்கள் வழியாகப் பரவி தீர்வை தேடித் தந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்கத்தின் பல பொறுப்புகளில் பணியாற்றிய
பொழுது, சமூக
நல்லிணக்கத்தை உருவாக்கும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கோபல்லபுரத்து மக்கள், வேள்பாரி, சுளுந்தீ போன்று ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை சமூகத்தை கண்முன்னே காட்டிய படைப்புகளைப் போல தென் தஞ்சை பகுதி மக்களின் வரலாற்றை எழுதவேண்டும் என்று அவரது விருப்பமாக இருக்கிறது.
வெளிவந்துள்ள நூல்கள்
* வீணையல்ல
நான் உனக்கு
* அலையும்
குரல்கள் (கவிதை தொகுப்பு)
* சக்கரவாகப்
பறவைகள் (சிறுகதை தொகுப்பு)
* கற்றது
சிறையளவு (கட்டுரை தொகுப்பு)
* பாமர
தரிசனம் (கட்டுரை தொகுப்பு)
பரிசுகள், விருதுகள்
* மாநில அளவில் மூன்று முறை சிறுகதைகளுக்கு பரிசு பெற்ற பெருமைக்குரியவர்.
* விகடன் முத்திரை
கவிதைகளில் சில கவிதைகள் இடம் பெற்று இருக்கிறது.
* 2004 இல்
புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறந்த பெண்மணி என்று மாவட்ட ஆட்சியரிடம் விருது
பெற்றிருக்கிறார்.