தொகுப்பு : கு. ஹேமலதா
'உழைப்பு
மற்றும் கல்வியே சமூகத்தை உயர்த்தும்' என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் எழுத்தாளர் கே.எஸ்.கே.நடேசன் அவர்கள் தேனியை
சேர்ந்தவர்.
எழுத்தாளர் கே.எஸ்.கே.
நடேசன் அவர்கள் 18.5.1954 அன்று தேனியில் பிறந்தார். பெற்றோர் கே.எஸ்.கந்தசாமி -
க.சுந்தரம்மாள். மனைவி ராஜபுஷ்பம், மகன் வள்ளிராஜன் தேனியில் மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டு மகள்கள்
சங்கீதா ஆனந்த் மற்றும் ஜெயப்ரியா அய்யனார்.
தேனி மேலப்பேட்டை இந்து
நாடார் உறவின்முறை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்றவர். இவரது
மூத்த சகோதரர் மருத்தும் பயின்றவர். தந்தையின் தொழிலைத் தொடர்வதற்காக குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் குடும்பத் தொழிலான பஞ்சு
வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் எழுத்தாளர் நடேசன்.
படிப்பின் மீது கொண்ட ஆசையாலும், திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்ததாலும், ஈடுபாடு காரணாமாக தொலைநிலைக் கல்வி மூலம் பொலிடிகல் சயின்ஸ் பயின்றார். ஆனால்
அதுவும் வியாபாரத்தின் காரணங்களால் தொடரமுடியாமல் போனது.
பள்ளிப்பருவத்திலேயே
பழந்தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு தன் வாசிப்பு பயணத்தை ஆரம்பித்தவர். அவரது
பள்ளி தமிழாசிரியர் முத்துக்குமாரவேல் அவர்களின் வழிகாட்டலில் தன் இலக்கிய
ஆர்வத்தை மேலும் மெருகூட்டினார். 1991-92 இல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
அதன் பின் அவரது வாசிப்புத்தளம் விரிவடைந்து, ஒரு எழுத்தாளராக பரிணமித்தார். இவர் ஒரு மேடை மற்றும்
பட்டிமன்ற பேச்சாளரும் கூட. பழந்தமிழ் இலக்கியங்களின்
மேற்கோள்களோடு அமையும் இவரது உரைகள் இன்றி தேனி மாவட்டத்தின் இலக்கிய மேடைகள் நிறைவடைவதில்லை.
பல சிற்றிதழ்களுக்கு தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும்,
திருக்குறள் விளக்கவுரையை கதையாகவும் எழுதியுள்ளார்.
அவரது முதல் நூலான ’பருத்திப்பழம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. தன் தந்தையின் வாழ்க்கை
வரலாற்றையும் அவர் அனுபவித்த சாதி பாகுபாடு இடர்களையும் வெளிப்படுத்தும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்திருந்தது.
நடேசன் அவர்களின் முதல்
நாவல் ”சின்னத்தாய் காவியம்” 2020 இல்
வெளிவந்தது. ஒடுக்கப்பட்ட சாதியாக கருதப்பட்ட நாடார் சமூகத்தின் வாழ்க்கை,
கலாச்சாரம், வலிகளை பதிவு செய்திருக்கிறது இந்நாவல்.
தமுஎகச மாவட்ட துணைத்
தலைவராக சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். இப்பொழுது தேனி நகர தமுஎகச கிளைத்
தலைவராக பொறுப்பில் உள்ளார். இவை தவிர தேனி மாவட்ட திருக்குறள் பேரவை தலைவராகவும்,
முல்லை பெரியார் முத்தமிழ் மன்ற தலைவராகவும்,
தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
வெளிவந்த நூல்கள்
1.பருத்திப்பழம்
(கட்டுரை)
2. சின்னத்தாய்
காவியம் (நாவல்)
பெற்ற விருது
சி.பா. ஆதித்தனார்
நினைவுப் பரிசாக 'இலக்கிய தென்றல்' விருது