Jun 16, 2021

எழுத்தாளர் ஜனநேசன்

தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்

            வாசிப்பு இல்லாமல் மனிதனும் மனிதமும் வளராதுஎன்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் இயற்பெயர் இரா. வீரராகவன் என்பதாகும். சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி. திரு. தி.மா. இராஜகோபாலன் - திருமதி. சுருளியம்மாள் இணையருக்கு மகனாக 8-4-1956 இல் பிறந்த ஜனநேசன் அவர்கள் ஆண்டிபட்டியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

            கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, நூலகராக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியிலும் பின் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலும் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளார்.

            சிறு வயதிலிருந்தே தாத்தாவிடமும் அம்மாவிடமும் கேட்ட கதைகள் மூலமே எழுதும் ஆர்வத்தைப் பெற்றதாக தெரிவிக்கும் அவர், நூல்கள் வாசிப்பதைத் தொடர்ந்த தன் செயல்முறையாகக் கொண்டவர். இலக்கியம்தான் மனிதர்களை இயக்கி அவர்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது என்பதில் உறுதியோடு இருப்பவர்.

            தொடக்கத்தில் தந்தையார் வீட்டில் வாங்கிப்போடும் ஜெயபேரிகை, ஜெயக்கொடி, கடிதம், தென்றல் போன்ற பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தவர், பின்பு கல்லூரி காலத்தில் ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்கள் மூலம் புதுமைப்பித்தன், மு.. ஆகியோரின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். தொடர் வாசிப்பும், வாழ்க்கைச் சூழலும், வாழ்வில் எதிர்கொண்ட இன்னல்களும் அவரை ஒரு எழுத்தாளராக பரிணமிக்க வைத்துள்ளன.

            என் படைப்புகளில் நான் சொல்ல விரும்புவதெல்லாம் அன்பு... அன்பு... அன்பு...’ என்று தன் படைப்புகளின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

            இவருடைய முதல் கதைசுழல் காற்று’ 1985 இல் செம்மலர் இதழின் சிறுகதை போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்வாகி, 1986 இல் செம்மலர் இதழில் வெளிவந்தது. அப்போது அரசுப் பணியில் இருந்ததால், தன்னுடைய தகப்பனார் திரு. இராஜகோபாலன் பெயரில் அந்தக் கதையை எழுதியிருந்தார்.  தொடர்ந்து நடமாடும் கோயில் நம்பி என்ற புனை பெயரிலும் எழுதினார். பிறகு, ஜனநேசன் என்ற பெயரில் எழுதியசுமைதாங்கிஎன்ற கவிதைபாக்யாஇதழில் 1988 இல் வெளிவந்தது. மக்களை வாசிப்பதும் நேசிப்பதுமே தன் இயல்பாக இருந்தபடியால், அதற்குப் பொருத்தமான ஜனநேசன் என்ற பெயரிலேயே 1988 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார்.

            எழுத்தாளர்கள் கே. முத்தையா, .குமரேசன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு இயங்கினார்.  தமுஎகசவில் உறுப்பினராகி, கிளை செயலாளர், மாவட்ட இணை செயலாளர் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் பங்களித்திருக்கிறார்.

            இவருடைய கவிதைகள் பாரதிதாசன் பல்கலைக்கழகம், கும்பகோணம் அரசு தன்னாட்சிக் கல்லூரி, புதுக்கோட்டை மாமன்னர் தன்னாட்சிக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல தன்னாட்சிக் கல்லூரிகளில் இவரது சிறுகதைகள் எம்.ஃபில். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

            இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆர்.வி.கர்ணன் தெலுங்கானா  மாநிலத்தில் ஆட்சியராகப் பணிபுரிகிறார். இளைய மகன் ஆர்.வி. நிருபன் பாரதி லண்டனில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

            130 ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ஜனநேசன் அவர்கள் மனைவி விஜயலட்சுமி அவர்களுடன் தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

வரிசை

ஆளுமை

வாஞ்சை

கண்களை விற்று

புத்திக் கொள்முதல்

காரணம் அறிகிலார்

கவிதைத் தொகுப்பு

ஆலிவ் இலைகளேந்தி

சூரியனைக் கிள்ளி

மஞ்சள் சிலுவை

புதினங்கள்

பயணம்

வேடிக்கை மனிதரோ...

கட்டுரைத் தொகுப்பு

கி.ரா.வின் காயிதங்கள்

கந்தர்வன் படைப்புலகம்

கே.எம். - வாழ்வும் பணியும்

இந்திய இலக்கிய சிற்பிகள் - கந்தர்வன்

பரிசுகளும் விருதுகளும்

1.          தமுஎகச பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் நினைவு சிறுகதை போட்டி

2.          வே. சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி

3.          ஜெயந்தன் நினைவு சிறுகதைப் போட்டியில் கவர்னரிடம் விருது

4.          இலக்கியச் சிந்தனை விருது - காத்திருப்பு சிறுகதைக்காக (2019)

இணைய இணைப்புகள்