தொகுப்பு : மேனகா சிவக்குமார்
”இயற்கையின் சம நிலை குலைதல் தான் இயற்கை சீற்றங்களுக்கும் புதிதாக எழும்புகிற தொற்று நோய்களுக்கும் ஒரு காரணியாக இருக்கிறது. பறவையின் எச்சத்தில் பூக்கும் - ஒரு காடு” என்று கூறும் சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்கள், எழுத்து, கதைசொல்லி, ஆவணப்பட இயக்குனர், சூழலியல் செயற்பாட்டாளர், பேச்சாளர் என பன்முக ஆளுமையாளராக உள்ளார்.
கோவையில் 1961 ம் வருடம் செப்டம்பர் மாதம் 23ம் நாள் வள்ளியம்மாள், கந்தசாமி அவர்களின் தலைமகனாக பிறந்தார். உடன்பிறந்தோர் நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள். மனைவி அமுதா, ஒரு மகன் (மதன் மோகன்), ஒரு மகள் (சுப சந்தியா) என இரு குழந்தைகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
பொருளாதார பின்புலம் அற்ற குடும்ப சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளி கல்வியை முடித்து கொண்டு, கடைசல் எந்திரம் என சொல்லப்படும் லேத் பட்டறையில் வேலை பார்த்தார். பள்ளிக்குச் சென்று கற்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்துகொண்டே இருந்ததால் அதை ஈடு செய்ய சிறு சிறு புத்தகங்கள், மாத, வார சஞ்சிகைகளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். அந்த தொடர் வாசிப்பு தான் அவருள் இருந்த எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்தது என்று கூறுகிறார்.
ஆரம்பத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதியவர் 1982 இல் கோவையில் இருந்து திருப்பூருக்கு இடம் பெயர்கிறார். அவரது முதல் கவிதை நூல் சுவடுகள் என்ற பெயரில் 1983 இல் வெளிவருகிறது. 30 சிறு கவிதைகள் கொண்ட தொகுப்புக்கு விலை 75 பைசா. ஆரம்ப காலத்தில் இவர் எழுதியவை அனைத்தும் வாழ்வியல் மற்றும் சமூகம் சார்ந்த கவிதைகள்.
இவர் திருப்பூர் வந்தபோது அழகிய கிராமமாக இருந்து, பெரிய ஏற்றுமதி தொழில் நகரமாக உருமாறியதை உடன் இருந்து பார்த்தவர். ஒரு கட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை வேலையிலிருந்து விலகி சைக்கிள் கடை வைக்கிறார். ஆனால் முதல் நாள் பார்த்த இயற்கை அடுத்த நாள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் செயற்கையாக உருமாற்றம் அடைந்ததையும், அதன் காரணமாக காஞ்சிமாநதி என்று சங்ககாலத்தில் பெயர் பெற்ற நொய்யலாறு சாயப்பட்டறை கழிவுகளால் பொலிவு இழந்ததையும் பார்த்து இந்த நகரை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று அவர் சிந்தித்ததன் விளைவுதான் ”பின்னல் நகரம்” என்ற கவிதைத் தொகுப்பு. 1990 களின் இறுதியில் நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதலின் விளைவாக சுற்றுச்சூழல் வீழ்ச்சியை தமிழில் முதலில் பேசிய நூல் இதுதான்.
அதன்பின் கடந்த 20 வருடங்களாக பள்ளி கல்லூரிகளில் குழந்தைகள் மாணவ மாணவியருக்கு இயற்கை சார்ந்த புரிதலை கொண்டு சேர்த்துக் கொண்டுள்ளார். பசுமை இலக்கியம் எனப்படும் இயற்கை சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஐந்து ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலான போது, ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கோவை சதாசிவம் அவர்களின் “பறவைகள் பலவிதம்” என்னும் கட்டுரை முதல்பாடமாக அமைந்திருந்தது.
1978 ஆம் வருடம் முதற்கொண்டு தமுஎகசவின் உறுப்பினராகத் தொடரும் கோவை சதாசிவம் அவர்கள், தமுஎகச மட்டுமல்லாமல் பல பசுமை இயக்கங்கள் சூழல் சார்ந்த சிந்திப்பும், பங்களிப்பும்,அது சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்.
கோவை சதாசிவம் அவர்களின் பூச்சிகளின் தேசம், ஆதியில் யானைகள் இருந்தன, உயிர்ப்புதையல், சில்லுக்கோடு, தவளை (நெறிக்கப்பட்ட குரல்), நம்ம கழுதை நல்ல கழுதை போன்ற நூல்கள் தனித்த கவனம் பெற்று பள்ளி, கல்லூரி பாடங்களிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்துள்ள படைப்புகள்
கவிதை நூல்கள்
1. சுவடுகள்
2. இனிவரும்
சந்திப்பில்
3. பின்னல்
நகரம்
4. வேரடி
மண்
5. திசைகள்
தேடி
6. இரை
7. அறைக்குள்
வந்த வெளி
8. சமூகப் போராளி ( பி.ஆர்) வாழ்வியல் நூல்
குழந்தை இலக்கியம்
1. கொஞ்சும்
மொழி கேட்போம்.
2. சில்லுக் கோடு
பசுமை இலக்கியம்
1. உயிர்ப்
புதையல்
2. ஊர்ப்புறத்து
பறவைகள்
3. பூச்சிகளின்
தேசம்
4. இறகுதிர்
காலம்
5. மயிலு
6.பல்லி ஒரு
அறிவியல் பார்வை
7. நம்ம கழுதை
நல்ல கழுதை
8. ஆதியில்
யானைகள் இருந்தன
9. தவளைகள்
- நெரிக்கப்பட்ட குரல்
10. உயிர் இனிது அன்பு செய்தல் நன்று
11. மரப்பேச்சி
12. கழுதைப்புலி ஒரு கனகத்தோட்டி
13.பறவையின்
எச்சத்தில் பூக்கும் ஒரு காடு
தொல்லியல்
1. காலம் நடந்த பெருவழி - கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம்
ஆவணப்படங்கள்
1. மண்
(சாயக்கழிவு குறித்த குறும்படம்)
2. மயிலு
(ஆவணப்படம்)
3. சிட்டு
( குருவிகளைத்
தொலைத்த மனிதர்களின் கதை)
4. புகலிடம்
தேடி (குறும்படம்)
5. நல்லாறு (ஆவணப்படம்)
பெற்ற விருதுகள்
1. வேரடிமண்
- கவிதை நூலுக்கு த.மு.எ.ச.விருது
2. இரை
- கவிதை நூலுக்கு தேவமகள் இலக்கிய அறக்கட்டளையின் விருது .
3. அறைக்குள்
வந்தவெளி - கவிதைநூலுக்கு இலக்கியவட்டம் விருது
4. உயிர்ப்புதையல்
- கட்டுரை நூலுக்கு நொய்யல் இலக்கிய விருது
5. இறகுதிர்
காலம் - கட்டுரை நூலுக்கு பீமராஜாஇலக்கிய விருது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரையாளர் விருது
6. 2019- ஆம் ஆண்டுக்கான " நம்மாழ்வார் விருது.
7. 2019-ஆம்
ஆண்டின் விகடன் விருது (சிறந்த செயல்பாட்டாளருக்கான விருது)