Jun 11, 2021

எழுத்தாளர் கந்தர்வன்

தொகுப்பு - சு. இளவரசி

            தமிழ் இலக்கிய உலகின் காத்திரமான படைப்புகளுக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் கந்தர்வன் அவர்கள், வானம் பார்த்த பூமியை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிக்கல் எனும் கிராமத்தில் பிறந்தார். காந்தியவாதியும், சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான  கணேசன் இவருடைய தந்தை. தாய் – கனகம்மாள். 03-02-1944 அன்று மகனாகப் பிறந்த கந்தர்வன் அவர்களின் இயற்பெயர் நாகலிங்கம்.

            தனது சிறுவயதிலேயே மளிகைக் கடை விற்பனை ஊழியர்ஜவுளிக் கடை உதவியாளர், ஓட்டல் தொழிலாளி, பால்பண்ணை மேற்பார்வையாளர் என்று பல வேலைகளையும் பார்த்து, படிக்கும் ஆர்வம் மேலெழ, நிறைய தடைகளை மீறி படித்து, தனது 24ஆம் வயதில் அரசுப் பணிக்கு வந்தார். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பல்லாண்டுகள் பணிக்குப் பிறகு, மாவட்டக் கருவூல அதிகாரியாக (T.O.) பணியாற்றி ஓய்வு பெற்றார். கருவூல ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில அளவில் போராட்டக்காலங்களில் அனைவராலும் அறியப்பட்டவர். அதனாலேயே 19 மாதகாலப் பணியிடை நீக்கம், 6 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, ஓயாத பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பழிவாங்குதல்களுக்கு ஆளானவர்                                

            அரசு கருவூலக் கணக்குத்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1983 இல் புதுக்கோட்டைக்கு வேலை மாறுதலில் வந்து தமுஎச மாவட்டத் தலைவர், பிறகு மாநிலத் துணைத்தலைவர் என்று இறுதி வரை இயங்கியவர். "லா..ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல்" மற்றும் "வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு" என்ற இரண்டு கட்டுரைகளும் கந்தர்வனின் முதல் இரண்டு முக்கிய கட்டுரைகள். கண்ணதாசன் இதழில் வெளிவந்து பெருவாரியாக பேசப்பட்ட கட்டுரைகளும் கூட. கண்ணதாசன் இதழின் ஆசிரியர் இராம. கண்ணப்பனின் ஆலோசனையினால், அப்பொழுது தான் வாசித்துக் கொண்டிருந்த திருலோக சீதாராமின் "கந்தர்வ கானம்" நூலில் வந்த 'கந்தர்வன்' என்ற பெயரை தனது புனைபெயராக வைத்துக்கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றியவர்.

            போராட்டக் காலங்களில் கவிதை மொழியில் காத்திரமாய் பேசுவார். இவரது திட்டமிட்ட செயல்பாடுகளும் வழிகாட்டுதல்களும் அரசு ஊழியர்ஆசிரியர் போராட்டப் பிரளயத்தைக் கிளறிவிடும்.

            கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான "கண்ணதாசனில்" இலக்கிய விமர்சனம் எழுதியதன் மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்ல பிரவேசித்தவர். பின்னர் சிறுகதைகள், கவிதைகள் என தன் படைப்பாற்றலை பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை கொண்டவர் .

            தாமரை, சுபமங்களா , சிகரம், செம்மலர், விகடன் என்று எல்லாவகை  இதழ்களிலு எழுதிக் கொண்டேயிருந்தார். தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், ‘புதிய புத்தகம் பேசுதுஇதழிலும் இலக்கிய நூல்களைப் பற்றிய அறிமுகம்/விமர்சனம் எழுதினார்.

            பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். புழங்குமொழியில், நேரடி சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன், கேட்கும் சராசரி மனிதர்களைச் சிந்திக்கவைத்தார்; சிரிக்கவும் வைப்பார்.

            "கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு, கோவிலுக்குப் போனா சிங்காரிச்சிட்டு போகலாம். சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா?" என்று, தனது கவிதைகளை விமர்சிப்பவருக்கு பதிலளிப்பார். கவியரங்கங்களே இலக்கிய உலகில் அவரை அழுந்த கால்பதிக்க வைத்த களம். பாதிக்கப்பட்ட மக்களின் துயரப்பட்ட பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி கவிதைகளாகவும் களத்தில் கற்ற அனுபவங்களை கதைகளாகவும் வடிக்கத் தெரிந்த கந்தர்வனின் "கயிறு" கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

            அவர் கவிஞர் என்றே பெயர் பெற்றாலும், தேர்ந்த சிறுகதைகள் பல படைத்தவர். அவரின் கவிதைகளுக்குள்ளும் கதைகள் ஒழிந்தே கிடந்தன. "சனிப்பிணம்" எனும் சிறுகதையே அவரின் முதல் சிறுகதை. அந்த சிறுகதை 1970 இல் தாமரையில் வந்தது. அதற்கு பின்னால் எழுதிய 'மைதானத்து மரங்கள்' எனும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள்இலக்கியச் சிந்தனையில் அந்த மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார். அந்தக் கதை பல தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கிறது, சில வருடங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு  தமிழ் துணைப்பாடத்திலும், இடம் பெற்றது. அவரின் "தண்ணீர்" என்ற சிறுகதை இன்றைய ஒன்பதாம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

            அவரது சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களுக்குச் சிலர் ஆய்வுசெய்து வருகிறார்கள். காலஞ்சென்ற எழுத்தாளர் இதயகீதன் கந்தர்வன் படைப்புகளை தனது எம்.ஃபில் ஆய்விற்காக தேர்ந்தெடுத்து , அந்த ஆய்வை 'பழைய சோறும் பாதாம் கீரும்,' என்ற புத்தகமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

            இவரது "சாசனம்" சிறுகதை என்.எஃப்.டி.சி (இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக)த்தின் நிதி உதவியோடு தமிழின் புகழ்வாய்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களால் படமாக்கப்பட்டு 28-7-2006 அன்று வெளியிடப்பட்டது. அரவிந்த் சாமி, கௌதமி, சபீதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் அதில் நடித்திருந்தார்கள்.

            கேள்விகள்“ ,“விசாரணைபோன்ற பல நாடகங்களையும் எழுதி, இயக்கி புதுக்கோட்டை தோழர்களைக்கொண்டு வீதிகளில் எடுத்துச்சென்றவர். எழுச்சிமிக்க நாடகங்கள் பலவற்றை மேடையேற்றியிருக்கிறார். ஜேக்டீ எனும் அரசுஊழியர்-ஆசிரியர் போராட்டத்திற்காக, இவர் எழுதிய கதைக்கு கவிஞர் நா.முத்துநிலவன் வசனம் எழுத, அந்த நாடகம் செம்மலரில் வந்தது.

            நமது அனுபவங்களை உரசி பார்க்கும் கதைகளுக்குச் சொந்தக்காரர் கந்தர்வன். 'சீவன்' எனும் புகழ்பெற்ற இவரது கதை அறிவொளி இயக்கத்தால்  சிறு நூலாக வெளியிடப்பட்டு அதன் பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. எழுத்தாளர் ஜனநேசன், சாகித்ய அகாடமிக்காக 'கந்தர்வன் படைப்புலகம்என்னும் நூலை வெளியட்டார். அந்த நூலிற்கு கந்தர்வன் அவர்களின் மூத்த மகள் மைதிலி முன்னுரை எழுதியுள்ளார். 'எழுத்துக்கலைஞன் கந்தர்வன்' என்ற கந்தர்வனின் கடிதங்கள், முன்னுரை - அணிந்துரைகள், நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை கொண்ட தொகுப்பு நூலை எழுத்தாளர் மு. முருகேஷ் வெளியிட்டிருக்கிறார்.

            இராமநாதபுரத்து மனிதரான இவர், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார். தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் பணி மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அலைக்கலைக்கப்பட்டு இறுதிக்காலத்தில்  மூத்த மகள் மைதிலி மற்றும் இளைய மகள் சாருமதியின் அன்பிற்கிணங்க தென்சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள மகள்களின் வீட்டில்  தனது இணையர் சந்திராதேவியோடு வாசம் புரிந்தார்.

            கந்தர்வனின் "காவடி" எனும் குறுநாவல் சுபமங்களாவில் வெளிவந்திருந்தது. தன் வாழ்நாளில் சாரமான ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டார் கந்தர்வன். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் உடல்நலம் குன்றியிருந்தார். அந்நிலையிலும்  வாசிப்பும், எழுத்தும் அவரின் நிமிடங்களை நகர்த்தியது. தன் இறுதிகாலத்திலும் ஒரு நாவல் எழுதிக்கொண்டு இருப்பதாக தோழர்களிடம் பகிர்ந்திருக்கிறார். தன் நினைவலைகளில் மோதுகின்ற தனது சிறுவயது அனுபவங்களையும், கிராமத்து வாழ்வின் நினைவுகளையும் தனது எழுத்துகளில் பொதித்திட நினைக்கையில், அந்த பெருநாவலின் முனைப்பு நிறைவேறாமலே போனது, அதை முடிக்கும் முன்பே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டார் கந்தர்வன். 22-04-2004 அன்று காலமானார்.

            சென்னை த.மு...வின் 'கூட்டாஞ்சோறு ' இதழில் எழுதியிருந்த சிறுகதைதான் அவர் இறுதியாக எழுதிய கதை. அவர் மறைந்த போது ஆனந்தவிகடனும், செம்மலர் இதழும் அவர் கதைகளை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாக "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி" தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால், புதுக்கோட்டையில் 4 ஆண்டுகள் நடத்தப்பட்டன. முதல் நினைவு விழா 07-07-07அன்று ஜெயகாந்தன் கலந்து கொள்ள கருத்தரங்கம், கலை-இரவு என முழுநாள் நிகழ்வாக, சிறப்பாக நடந்தது. அடுத்தடுத்த விழாக்களில் பிரபஞ்சன், நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டதும் குறிப்பிடத் தகுந்தது.

            கந்தர்வனின் உடல்நிலையை அவரது நிழல்போல பின் தொடர்ந்து நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்துக் கொண்டிருந்தவர் அவரது துணைவியார் சந்திரா தேவி அம்மையார். கந்தர்வன் மறைவுக்குப் பின், மகள்கள் வீட்டில் சென்னையில் வாழ்ந்த சந்திரா அம்மையார் கடந்த 14-08-2020 அன்று காலமானார்.

            கலை இலக்கிய இரவுகளில், இயக்க கவியரங்குகளில் கம்பீரமாக ஒலித்த கந்தர்வ கானம் நிரந்தரமாக உறைந்து கிடக்கும் நூல்களின் மூலம் நம்மிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். அவரின் படைப்புகள் பல தலைமுறைகள் கடந்தாலும், என்றும் பேசப்படும். முற்போக்கு விதைகளை ஆழ ஊன்றும் படைப்புகளை நம்மிடையே கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்

கவிதைகள்

கிழிசல்கள்

மீசைகள்

சிறைகள் (இவை மூன்றும் சிவகங்கை அன்னம் வெளியீடுகள்)

கந்தர்வன் கவிதைகள் (தொகுப்பு நூல்)

சிறுகதைகள்

சாசனம்

பூவுக்கு கீழே

கொம்பன்

ஒவ்வொரு கல்லாய்

அப்பாவும் அம்மாவும் (இவை அனைத்தும் சிவகங்கை அன்னம் பதிப்பகம்)

கந்தர்வன் கதைகள் (தொகுப்பு நூல்)

இணைய இணைப்புகள்