Jun 14, 2021

எழுத்தாளர் இதயகீதன்

 தொகுத்தவர் : .சுமையா தஸ்னீம்

            "ஒரு மார்க்சியவாதி என்பவன் எல்லோரையும் கோர்ப்பவன். எல்லோரையும் சங்கமிக்கச் செய்பவன். சரியான பாதையை நோக்கி நடத்திச் செல்பவன்." என்று கூறும் கவிஞர் இதயகீதனின் இயற்பெயர் செ. வனராசா. 12.04.1960 இல் தேனி மாவட்டத்திலுள்ள வருஷநாடு அருகில் உள்ள  வாலிப்பாறை என்ற உள்காட்டு கிராமத்தில் பெ.செல்லாண்டி - செ.வீரம்மாள் இணையர்களின் மகனாகப் பிறந்தவர்.


            பள்ளி வயதில் பெரியாரியக்கத் தாக்கம் பெற்றிருந்த இதயகீதன், ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் தம் தமிழாசிரியர் செல்லத்துரை அவர்களாலும், தம் வாசிப்பாலும் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தம் வாழ்க்கை, செயல், இயக்கச் செயல்பாடு அனைத்திலும் அக்கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையே முதன்மையான பணியாகக் கொண்டிருந்தார்.  எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், செயல்பாட்டாளர், அமைப்பாளர், ஆய்வாளர் போன்ற பன்முக ஆற்றல் பெற்றவர் தோழர் இதயகீதன். ஆசிரியர் இயக்கத்திலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும் மாநில அளவில் முன்னணிப் பொறுப்பு வகித்தார்.

            கள்ளர் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிக்குச் சேர்ந்து, தொலை நிலைக் கல்வியின் வழியாக இரண்டு எம்.. பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக கவிஞர் கந்தர்வன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வு உள்ளடக்கத்தைபழைய சோறும், பாதாம் கீரும்எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

            ”வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத்தாக்கம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

            1986 முதல் அக்னிக்குஞ்சு என்ற இலக்கிய இதழை நடத்தினார். அதன் ஆசிரியராக இருந்து எண்ணற்ற இளம் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கினார். இதயகீதன், வனராசா, அறிவன், ரதி மணாளன் போன்ற பெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும், அரசியல் விமர்சனங்களையும் எழுதி வந்தார். பொருளாதார, பணிச் சூழல்களால் அவ்வப்போது நின்று, நின்று ’அக்னிக்குஞ்சு’ வெளிவந்தாலும், கந்தரவன், ஜெயகாந்தன் போன்ற பல இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. தன் தாய்தந்தையின் முதல் எழுத்துகளை இணைத்துசெவீ என்ற பதிப்பகத்தை நடத்தி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். பல இளம் படைப்பாளிகளின் நூல்களை அச்சேற்றினார்.

             ஆசிரியராக இருந்து, விருப்ப ஓய்வு பெற்று மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் பொன்னுராசு அவர்களின் தொடர்பால் மருத்துவத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், ஹோமியோபதி மருத்துவத்தைக் கற்று, சிகிச்சை அளித்து வந்தார்.

    தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். அந்த அமைப்பின் மாநில மாநாடு ஒன்றினை தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொறுபேற்று நடத்தினார்.

                    ஜெயா தொலைக்காட்சி முன்பு ஜெ.ஜெ.டிவி எனும் பெயரில் துவங்கப்பட்ட போது, பேராசிரியர் பெரியார் தாசன் அவர்களை நடுவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பேச்சரங்கத்தில் சில நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 

            தமிழ் மொழி, இனம், நாடு குறித்தும் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார். ஈழத்தில் நடைபெற்ற இன ஒழிப்புப் போரின் போது (2008 - 2009) தமிழ் ஓர்மையை ஏற்படுத்த பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்தார்.  கல்வி வளர்ச்சி பாதுகாப்பு சங்கத்தை உருவாக்கி கல்விக்காகப் பாடுபட்டார். தேனி வையை தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட  பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஆலோசகராக விளங்கினார்.  தேனி மாவட்டத்தின் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து கலை இலக்கியச் செயல்பாடுகளையும் செயல்பாட்டார்களையும் வளர்க்கும் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

            தேனி , மதுரை மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற இளைஞர்களை அடையாளம் கண்டு அமைப்பாய்த் திரட்டி படைப்பாளிகளாகவும் மாற்றினார்.  ஊர் தோறும் எழுத்தாளர் சங்க கிளைகளை உருவாக்கினார். எழுத்தாளர் இதயகீதன் படைப்புகளைப் படைத்தார் என்பதை விட படைப்பாளிகளையே படைத்தார்.

            2013 ஆம் ஆண்டு நவம்பர்  7 அன்று வாகன விபத்தில் மறைந்தார். தாம் நேசித்த ரஷ்யப் புரட்சி நாளிலே மறைந்து வரலாறுமாகிவிட்டார். அப்போது முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  த.மு.எ.க.ச.வில் கிளைச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர்  என 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினராக மட்டும் 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

            தேனி மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவராகச் செயல்பட்டார். முப்பத்து மூன்று ஆண்டு செயல்பாடுகளில் எண்ணற்ற கலை இரவுகளையும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார். பாரதி புத்தகாலயத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

                இவரின் இணையர் வன.ரதிகா மற்றும் இரு மகன்கள் வ.ர. இளம் பரிதி, வ.ர.புதிய பரிதி.

 வெளிவந்துள்ள நூல்கள்

1. நூற்றாண்டிலும் வாழும் ஜீவா (கட்டுரை)

2. பழைய சோறும் பாதாம் கீரும்  (கட்டுரை)

3. வைரமுத்து திரைப்பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் (கட்டுரை)

4. வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத்தாக்கம் (கட்டுரை)

5. மார்க்சியம்ஓர் அறிமுகம் (கட்டுரை) – இதயகீதன் அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது ஆய்வேட்டிலிருந்து இப்பகுதி தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.

இணைய இணைப்புகள்