Jun 2, 2021

எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன்

 தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்

            தன்னுடைய பாரதி - காலமும் கருத்தும்என்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற நூலுக்காக 1992 இல் நடைபெற்ற பாராட்டு விழாவில் காலம்தான் கவிஞனை உருவாக்குகிறது. கவிஞன் காலத்தை உருவாக்குகிறான்.  தமிழ் உள்ள வரை பாரதி வாழ்வான். பாரதி உள்ள வரை என்னுடைய இந்த நூலும் வாழும். அதன் மூலம் இந்த ரகுநாதனும் வாழ்வான்என்று ஏற்புரை வழங்கிய தொ.மு.சிதம்பர ரகுநாதன் அவர்கள், அவர் மறைந்த இருபதாண்டைக் கடந்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

            தன்னுடைய படைப்புகளின் வழியே மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுத்த திரு. தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் அக்டோபர் 20, 1923இல் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினரின் இரண்டாம் மகனாகப் பிறந்தவர்.

            சிறுகதை, நாவல், விமர்சனம், ஆய்வு, மொழி பெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு என பல துறைகளில் தன் எழுத்துப் பணிகளைச் செய்த அவருடைய முதல் சிறுகதை பிரசண்ட விகடனில்’ 1941இல் வெளிவந்தது.

            1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார். சில காலம் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது.

            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தினமணி, முல்லை, சக்தி, சோவியத் நாடு போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவிலும் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

            1954 முதல் 1956 வரை சாந்தி என்கிற முற்போக்கு மாத இதழை நடத்தினார். டேனியல் செல்வராஜ், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற இளம் எழுத்தாளர்களை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தி பெருமை சாந்திஇதழுக்கு உண்டு. பொருளாதார நெருக்கடி காரணமாக இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.

            இவருடைய முதல் புதினம் புயல்’ 1945 இல் வெளிவந்தது.  1948 இல் வெளிவந்த இலக்கிய விமர்சனம் என்ற நூல் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

            தனக்கு சரி என்று தோன்றியதை எந்தவித சமரசமும் இன்றி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக எழுதியவர் தொ.மு.சி. அவர்கள்.  அவருடைய நீயும் நானும்சிறுகதை வெளிவந்தபோது, பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட தொ.மு.சி. அவர்கள் அவற்றிற்கு தன்னுடைய பதில்களைப் பதிவு செய்திருந்த போதும், பிற்காலத்தில் அந்தக் கதையை அப்படி எழுதியிருக்க வேண்டாம் என்று தானே சுயவிமர்சனம் செய்துகொண்டவர்.

            1951இல் இவர் எழுதி வெளிவந்த பஞ்சும் பசியும்என்ற புதினம் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வறுமை நிலையினையும் இன்னல்களையும் தெளிவாக எடுத்தியம்பியது. இந்தப் புதினம் கமில் சுவலமில்என்பவரால் செக் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அன்றைய நாளில் ஐம்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை யானது. அயல்மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் இதுவே. 

            சோவியத் நாடு பதிப்பகத்தில் பணி புரியும்போது நிறைய ரஷ்யப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவர் மொழி பெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின்’. திருச்சிற்றம்பல கவிராயர் என்ற புனை பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

            புதுமைப்பித்தன் இவருடைய நண்பர். புதுமைப்பித்தன் மறைவிற்குப் பிறகு அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கினார். புதுமைப்பித்தன் வரலாறு என்று அவரின் வாழ்க்கை வரலாற்று நூலினையும் எழுதியுள்ளார்.

            பாரதி - காலமும் கருத்தும் என்ற நூலுக்கு 1983 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.  பாரதியைப் பற்றிய ஒரு சிறந்த ஆய்வு நூலாக இன்றளவும் இந்த நூல் இருக்கின்றது. பாரதியைப் பற்றி அவருடைய மனைவி செல்லம்மாள் பாரதி மற்றும் பாரதியுடன் காசியில் தங்கியிருந்த நாராயணசாமி ஐயங்கார் ஆகியோர் எழுதிய சில தகவல்களைத் தவறு என்று பல்வேறு ஆதாரங்களுடன் இந்த நூலில் எழுதியிருப்பது அவரின் ஆழமான இலக்கியப் புலமைக்கும் நுட்பமான அறிவுக்கும் சான்றாகும்.

            இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான் புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். இவரின் அப்பா தொண்டைமான் முத்தையா சிறந்த ஓவியர்; புகைப்படக் கவிஞர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் பெரும் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.  பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தார். இவருடைய வழிகாட்டி ஆசிரியர் . சீனிவாச ராகவன் அவர்கள். 

     பாலுறவு தொடர்பாக அன்றைக்கு இருந்த பழைய வரைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அவர் எழுதிய முதலிரவுஎன்ற நாவல் பரபரப்பாக விற்பனை ஆனபோதிலும் அன்றைய ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது.

            இவரது இளங்கோ அடிகள் யார்என்ற ஆய்வு நூல் முக்கியத்துவம் வாய்ந்த நூலாகும். ‘இளங்கோ அடிகள் மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு தன வணிகச் செட்டியார்என்று பல்வேறு ஆதாரங்களுடன் அந்தப் புத்தகத்தில் நிறுவியுள்ளார்.

            வாழ்க்கை என்பது முடிவற்றது. வாழ்க்கையில் சுபம் முற்றிற்றுஎன்று வழிபடும் காலமே கிடையாது. அது முற்றுப்பெறாத விஷயம். அப்படி இருக்கும்போது இளம் எழுத்தாளர்கள் ஏன் வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சி இவற்றைப் பற்றியே எழுதவேண்டும்? சாதாரண மன நெகிழ்ச்சியை வைத்துக்கொண்டு மனோதர்மம் என்ற இழை அறுந்துவிடாமல் கதை பின்னலாமே!’ என்று இலக்கிய விமர்சனம்நூலில் எழுதியுள்ள தொ.மு.சி. அவர்கள் 31-12-2001 அன்று பாளையங்கோட்டையில் மறைந்தாலும், தன் படைப்புகள் வழியே முடிவுறா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

படைப்புகள்

சிறுகதை தொகுப்புகள்

நீயும் நானும்

ஷணப்பித்தம்

சேற்றிலே மலர்ந்த செந்தாமரை

ரகுநாதன் கதைகள்

கவிதை தொகுப்புகள்

ரகுநாதன் கவிதைகள்

கவியரங்கக் கவிதைகள்

காவியப் பரிசு

திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கவித்துறை அந்தாதி

புதினங்கள்

புயல்

பஞ்சும் பசியும்

முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடை செய்யப்பட்டது)

கன்னிகா

நாடகம்

சிலை பேசிற்று

மருது பாண்டியன்

வாழ்க்கை வரலாறு

புதுமைப்பித்தன் வரலாறு

ஆய்வு நூல்கள்

இளங்கோ அடிகள் யார்?

இலக்கிய விமர்சனம்

அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

சமுதாய இலக்கியம்

பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்

பாரதி - சில பார்வைகள்

பாரதியும் ஷெல்லியும்

பாரதி - காலமும் கருத்தும்

புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத் தனங்களும்

விடுதலை வீரர்கள் ஐவர்

மொழி பெயர்ப்பு நூல்கள்

இதயத்தின் கட்டளை

சந்திப்பு

சோவியத் நாட்டுக் கவிதைகள்

தந்தையின் காதலி

தாய் (மாக்சிம் கார்க்கி)

நான் இருவர்

லெனின் கவிதாஞ்சலி

பரிசுகள், விருதுகள்

சாகித்திய அகாதமி விருது - 1983

சோவியத் லேண்ட் நேரு விருது

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை பரிசு

பாரதி விருது

இணைய இணைப்புகள்