Jun 22, 2021

எழுத்தாளர் யாழ் எஸ். இராகவன்

 தொகுப்பு கா.ப.ஷமீம் உசேன்

             வாசித்தலே சுவாசித்தல் இலக்கியத்திற்கு முக்கிய தேவை வாசிப்பு. அது இல்லாமல் கதை, கட்டுரை, கவிதை எதையும் திறம்பட எழுத முடியாது. நாம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஆகிவிட்டோம் என்றால் நம்முடைய பேச்சில் ஆற்றல் வந்துவிடும் என்று கூறும் யாழ்‌  இராகவன் கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர் என்று பன்முகங்கள் கொண்டவர்.

             26.4.1979 ஆம் ஆண்டு மதுரையில் தந்தை சுந்தர சீனிவாசன் தாய் சகுந்தலா இவர்களுக்கு மகனாக பிறந்தார் யாழ் இராகவன். இவருடைய இயற்பெயர் சு. இராகவன். இவருடைய மனைவி வித்யா கோவையில் பிறந்தவர் இசை ஆசிரியையாக உள்ளார். இரண்டு பெண் குழந்தைகள் ஹரித்ரா, ப்ராப்தி.

             இசை மேலுள்ள விருப்பத்தாலும் சங்க இலக்கியத்தில் ஆதி இசைக்கருவியாக வரும் யாழை தன்னுடைய பெயருடன் இணைத்து யாழ் இராகவன் என்று மெருகேற்றி இருக்கிறார். தன்னுடைய நண்பர்கள் அவரை யாழ் என்று அழைப்பது இனிதாக காதில் ஒலிக்கிறது என்கிறார்.

             மதுரை தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் படிக்கும் பொழுது சீனியர் மாணவர்கள் அனைவரும் கையில் புத்தகங்களுடன் இருக்கும் அழகால்  ஈர்க்கப்பட்டு, அந்த கல்லூரியில் உள்ள 5 லட்சம் புத்தகங்களை கொண்ட நூலகத்திற்குள் நுழைந்திருக்கிறார் யாழ் ராகவன். கவிக்கோ அப்துல் ரகுமான், இறையன்பு, எஸ்.ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் என்று அவரது வாசிப்பு ஆழமானதாகவும், நீளமானதாகவும் வளர்ந்திருக்கிறது. வாசிப்பு துவங்கியது முதல் இப்போதுவரை அவர் ஏராளமான புத்தகங்களை வாசித்திருந்தாலும், பல எழுத்தாளர்களை ரசித்திருந்தாலும், கவிக்கோ அப்துர் ரகுமான் அவர்களை இலக்கிய உலகின் பிதாமகன் என்கிறார். அவருடைய கவிதைகள் இலக்கிய உலகில் நுழைபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார். எளியவரும் புரிந்து கொள்ளும்படியான நடையில் ஆழமான அர்த்தம் பொதிந்திருக்கும் என்கிறார் யாழ் ராகவன்.

             செந்தமிழ்க் கல்லூரியில் பி., எம்., எம்.பில் என்று கல்வி பயின்று, ரோசிலின் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

             கல்லூரிக் காலங்களில் தமுஎகசவின் தொடர்பு ஏற்பட்டு, இலக்கியக் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். தோழர் தமிழ்ச்செல்வன், அருணன், ஸ்ரீதர் இவர்களே எழுதவும், எழுதியதை பிரசுரிக்கவும் உதவியுள்ளனர். அவருடைய முதல் கவிதை நூறு கவிதைகளில் முதல் கவிதையாக இடம்பெற்றது. தொடர்ந்து எழுதுவதற்கு ஸ்ரீதர் அவர்கள் தூண்டுகோலாக இருந்தார். த.மு.எ.க.ச மதுரைக்கிளை வெளியிட்ட "கனவாற்றின் கரைகள்" புனல்"ஆகிய நூல்களில் கவிதைகள் வெளிவந்தன.

             யாழ் ராகவன் அவர்களின் படைப்புகள் கணையாழி, இனிய உதயம், தினமணி, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களிலும், புக் டே, படைப்பு, வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

             த.மு.எ.க.ச, நம் உரத்த சிந்தனை, அன்றில், புது எழில் வாசகர் வட்டம், தேனி தமிழ் சங்கம் போன்ற இலக்கிய அமைப்புகளோடு இணைந்து இயங்கி வருகிறார். மேலூர் தனியார் பள்ளியொன்றில் நான்கு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி விட்டு, புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியில் இரண்டாண்டுகளும், மதுரை செவன்த் டே பள்ளியில் இரண்டாண்டு ஆசிரியராகவும் பணி புரிந்தார். தற்போது தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியிலுள்ள எஸ்.யூ.எம். அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார்.

                       அவருடைய  முதல் நூல் அப்பாவின் சாய்வு நாற்காலி என்னும் கவிதைத் தொகுப்பு. இரண்டாவதாக வெளிவந்த குறும் புதினம் ரெட்டை வால் குருவி பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பாட நூலாக உள்ளது.

             பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார். ஒவ்வொருவரின் தனித்தன்மையை வெளிப்படுத்த யூடியூப் மற்றும் முகநூல் பெரும் உதவியாக இருக்கிறது என்று கூறும் அவர் அதில் நிறைய பதிவுகளை தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளார்.

 வெளிவந்த நூல்கள்


அப்பாவின் சாய்வு நாற்காலி -(கவிதைத் தொகுப்பு ) 2015

ரெட்டைவால்குருவி  - (குறுநாவல்) 2020


பெற்ற பரிசுகள், விருதுகள்

1)       கவியரசு கண்ணதாசன் விருது வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்

2)       நம் உரத்த சிந்தனை விருது, சென்னை

3)       அசோகமித்ரன் விருது, தேனி

4)       கல்கி ஆசிரியர் நடத்திய கவிதைப் போட்டியில் தேநீர் பதிப்பகம் வாலாஜாபேட்டை  தந்த பரிசு

5)       11ஆண்டுகளாக சக்தி 12ஆம் வகுப்பு மாணவர்களின் 100% தேர்ச்சிக்காக பொறியியல் கல்லூரி கோவை உள்ளிட்ட பல விருதுகள்.

இணைய இணைப்புகள்