தொகுப்பு பு.கி.புவனேஸ்வரி தேவி
"மனித மனத்திரைகள் அதிர அதிர தெருக்களில் நின்று பறை முழக்குபவன்" என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்பவர் தோழர் கருப்பு கருணா. பறை முழக்கத்தின் மேல் அதீதமான ஈடுபாடு கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இசையாக இருந்த பறையிசையை நம் ஆதித் தமிழரின் இசை என்று இவ்வுலகிற்கு பறைசாற்றியதில் தோழர் கருணாவிற்கு முக்கிய பங்கு உண்டு. மார்க்சியப் பாதையில், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு தன் இலக்குகளையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டவர் கருப்பு கருணா.
இவர் திருவண்ணாமலையில் 1963 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் நாள் தேவகி - சீத்தாபதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தோழர் கருணாவின் இணையர் பெயர் அ.செல்வி. இவர்களுக்கு செ.க. சொர்ணமுகி என்ற மகளும், செ.க. கௌசிகன் என்ற மகனும் உள்ளனர். ”தங்களுக்கான பொழுதுகளை எனக்காக பலியிட்டுக் கொண்டிருக்கும் சக மனுஷி செல்வி மற்றும் பிள்ளைகள்" என்று தன் குடும்பம் பற்றி, அவரது நூலின் முன்னுரையில் தோழர் கருணா குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயது முதலே சினிமா வசனங்களை சரளமாகப் பேசுவது, பாடல்கள் பாடுவது என கலையின் மீது அவருக்கு தனி ஆர்வம் இருந்து வந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயில ஆசைப்பட்டார். ஆனால் அவர் தந்தை திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் தமிழிலக்கியம் பயில சேர்த்து விட்டார். அதன் பின் தோழருக்கு படிப்பை விட கலை இலக்கியத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியது.
கல்லூரியின் பேரவைத் தேர்தலில் மாணவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருப்பு கருணா. கல்லூரியில் சக தோழர்களால் கருப்பு சூரியன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். பவா செல்லதுரை அவர்களால் நாடகத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட கருணா, தோழர்களின் நெருக்கத்தால் அரசியல் புரிதல் ஆழமானது. கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை திசை மாறியது. மார்க்சியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திமுக வில் இருந்து விலகி மார்க்சிய அமைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டார். அப்போதுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்தார்.
1987 இல் தோழர் காளிதாசன் தலைமையில் இயங்கிய "நிதர்சனா" என்ற நாடகக் குழுவில் தோழர் கருணா முக்கிய நடிகராக இருந்தார். அறிவொளி இயக்க களப் பணிகளில் முதன்மையான நபராக பணியாற்றி பல நாடகக் குழுக்களை உருவாக்கினார். முதன் முறையாக 1988 இல் அறிவொளி இயக்கம் இரண்டு களப் பயணங்களை நடத்தியது. அதில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற களப்பயணத்தில் தோழரின் பங்கு மிக மிக முக்கியமானது.
1990 இல் தீட்சண்யா என்ற நாடகக் குழு ஒன்றை உருவாக்கி முற்போக்கு நாடக செயல்பாடுகளை முன்னெடுத்து நடத்தி வந்தார். அத்தோடு தீட்சண்யா என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும் நடத்தி வந்தார். சிலகாலம் "நம் தினமதி " என்ற உள்ளூர் நாளிதழில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். ஒருவருடம் PRO ஆக சேத்துப்பட்டில் பணியாற்றினார். 2011 ஆம் வருடத்திலிருந்து தமுஎகச அமைப்பில் தன்னை முழு நேர ஊழியராக ஈடுபடுத்திக் கொண்டார்.
பல நாடகங்களை இயக்கி, நடித்தவர் தோழர் கருப்பு கருணா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்கள் எழுதிய "ஏழுமலை ஜமா" என்ற சிறுகதையை 2011 இல் குறும்படமாக இயக்கி அதில் மிக பெரிய வெற்றியும் கண்டார். அந்த குறும்படம் பல விருதுகளைப் பெற்றது. ஒரு இலக்கியப் படைப்பை படமாக்குவதற்கான முன் மாதிரி குறும்படமாக அது அமைந்திருந்தது.
எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கத்தில் "கண்டத்தைச் சொல்கிறேன்" என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
கருப்பு கருணாவின் இயக்கத்தில் இரண்டு ஆவணப்படங்கள் தயாரிப்பில் இருந்தன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகளைத் தொடர இயலாமல் அவை வெளியாகவில்லை. தமிழக இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரான ஐ.மாயாண்டி பாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "ஏறுனா ரயிலு இறங்கினா ஜெயிலு" என்கிற தலைப்பிலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வாழ்க்கையை "மேழி" என்ற தலைப்பிலும் இயக்கிக் கொண்டிருந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அடையாளமாகத் திகழும் "கலை இலக்கிய இரவு" எனும் நிகழ்வு பொது மேடைகளில் விடிய விடிய நிகழ்வதற்கு காரணமானவர்களில் தோழர் கருணாவும் ஒருவர்.
தமுஎகச திரை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இயங்கிவந்தார். புதுவை பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆண்டு தோறும் சர்வதேச ஆவண குறும்பட விழாக்களையும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உலகத் திரைப்பட விழாக்களையும் திறம்பட ஒருங்கிணைத்ததில் தோழர் கருணாவின் பணி மிகச் சிறப்பானது.
உலகத் திரைப்படங்கள் குறித்த நூலான "பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்" என்ற நூலை எழுதியுள்ளார் கருப்பு கருணா. "ஒரு நாடகக் கலைஞனாக, குறும்பட இயக்குநராக, இயக்கத் தோழனாக, மிளிர்ந்த கருணா இந்நூலின் வழி ஓர் எழுத்தாளனாக, கதை சொல்லியாக புதிய பரிணாமம் பெறுகிறார். இத்தொகுப்பில் கருணா தான் பார்த்த திரைப்படங்களின் கதைகளைச் சொல்லியிருக்கும் விதம் மனம் கொள்ளத்தக்க வகையில் உணர்வுப் பூர்வமாக விரிந்துள்ளது” என்று இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
புக் டே இணைய இதழில் ஏராளமான நூல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவந்தார். சமூக ஊடகங்களில் பாசிச, மதவெறி சக்திகளின் சிம்ம சொப்பனமாக கருப்பு கருணாவின் பதிவுகளும், செயல்பாடுகளும் அமைந்திருந்தன. திருவண்ணாமலை நகர் சார்ந்த பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணா. அண்ணாமலையார் கோவிலை தொல்லியல் துறை கையகப் படுத்த முயற்சி செய்த போது நடத்தப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டம், பவழக்குன்று மலை ஆக்கிரமிப்பில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம், கிரிவலப் பாதைகளில் காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டம் போன்றவை உதாரணங்கள்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரும், அமைப்பின் முழுநேர ஊழியருமான தோழர் கருப்பு கருணா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக 21-12-2020 திங்களன்று இயற்கை எய்தினார்.
சிறந்த எழுத்தாளர், ஆழ்ந்த விமர்சகர், நாடகக் கலைஞர், மேடைப் பேச்சாளர், பத்திரிகை செய்தியாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஒரு ஆளுமை கருப்பு கருணா.
வெளிவந்த படைப்புகள்
”ஏழுமலை ஜமா” குறும்படம்
பொடாம்கின் கப்பலும், போக்கிரித் திருடனும் – கட்டுரை நூல்
பெற்ற விருதுகள், பரிசுகள்
தானம் அறக்கட்டளை விருது – மதுரை
ஈரோடு திருமதி ரத்தினம் கண்ணுச்சாமி விருது, ஈரோடு
அரிமா குறும்பட விருது திருப்பூர்
தமுஎகச மாநில குறும்பட விருது
தாரகை இதழின் செவாலியே சிவாஜி கணேசன் விருது
அம்பேத்கர் ஒளி விருது
கலை இலக்கிய ஆளுமை
கேள் விருது