தொகுப்பு: ரா. ராம்குமார்
“ஆசிரியர் என்பவர் பார்க்கப்பட
வேண்டியவரே தவிர, கேட்கப்பட வேண்டியவர் அல்ல. ஆசிரியர்கள் கல்வி கற்றுத் தரும் முறை மாற்றப்பட வேண்டும். இவர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள்.
மாறாக, அவனை சைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள்
மாற வேண்டும்” என கூறும் பேராசிரியர்.ச. மாடசாமி ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வகுப்பறை,
தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மனித உரிமைக் கல்வி எனப் பல தளங்களில் பணியாற்றியவர்.
கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருக்கும்
வடுகப்பட்டி எனும் கிராமத்தில் 1947ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இணையரின் பெயர்
லைலாதேவி. இவர்களுக்கு கார்த்தீபன், ரிஷிவந்தன் என இரு மகன்களும் சங்கீதா என ஒரு
மகளும் உள்ளனர். தனது பள்ளிப் படிப்பை வடுகப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும்
வழியில் உள்ள போர்டு ஹை ஸ்கூலில் படித்தார். பள்ளி வாழ்க்கை அவ்வளவு இனிமையாக
அமையாமல் போனது. அதற்கு பள்ளியும் குடும்பச் சூழலும் காரணமாய் இருந்தது. கதைப் புத்தக வாசிப்பு, எழுதுவது, பின் எழுதியதை நண்பர் முத்துவேலிடம் பகிர்ந்து கொள்வதே அப்போது இவருக்கு
கிடைத்த ஆறுதல்.
எட்டாவது படிக்கும் போது டாக்டர் மு.வ.வின்
லட்சிய எழுத்துக்களில் ஏற்பட்ட பரிச்சயம் அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.
பற்றிக் கொள்ள ஏதும் இல்லாமல் சென்ற அவரது வாழ்க்கைப் பயணத்தில்
இது முதல் திருப்பமாக அமைந்தது.
விருதுநகர்
செந்தில்குமார் நாடார் கல்லூரியில் இளங்கலை பட்டத்தை இயற்பியலில் முடித்தார். அதுவரை
தடுமாற்றத்துடன் கடந்த படிப்பு மதுரை தியாகராஜர் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் படித்த
போது இயல்பாக ஈடுபாட்டோடு படிக்க முடிந்தது. அப்போது தான் தீபம், கணையாழி, ஞானரதம்
போன்ற இலக்கிய பத்திரிக்கைகளை தேடி தேடிப் படித்தார். 1970இல் மதுரைப் பல்கலைக்கழக
மாணவர் கருத்தரங்கில் ‘கபிலர் பாடல்களில் மாந்தர் மனப்
பண்பாடு’ என்ற தலைப்பில் வாசித்த கட்டுரையை பேராசிரியர்
அ.ச.ஞானசம்பந்தன் மிகவும் பாராட்டினார். இதுவே அவர் எழுத்துக்கு கிடைத்த முதல்
அங்கீகாரம்.
முதுகலை படித்து முடித்ததும் அருப்புக்கோட்டை
கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு அவரது முதல் வகுப்பு முடித்த போது
மாணவர்கள் கைத்தட்டி பாராட்டினர். உடனடியாக பிரின்சிபால் அழைத்து “பாழாக்கிட்டிங்களே” என்று கோபமாக கூறிய அந்த வார்த்தையே இவருக்கு கிடைத்த முதல் கெளரவமாக
கருதுகிறார். மாணவர்களிடம் தள்ளி இருந்தால் தான் அவர்கள் ஆசிரியர்களை மதிப்பார்கள்
என்ற எண்ணம் மேலோங்கி இருந்த போதும் அவர் மாணவர்களுடன் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது, விவாதங்களில் அவர்களைப் பங்கேற்க வைப்பது,
மாணவர்களுடன் நெருக்கமாக உறவாடுவது என்பதை ஆழமாக, நம்பி
செயல்படுத்தியவர்.
1973இல் கோடை வகுப்பிற்க்காக, அண்ணாமலை
பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, ‘ஆக்டோபஸும் நீர்ப்பூக்களும்’ என்ற புதுக்கவிதை நூல் எழுதிய தமிழவனை
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் ஏற்பட்ட நட்பின் மூலம் மார்க்சிய
கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது. கல்லூரியில் முதல் வருடத்திலேயே நிறைய
மெமோக்கள் கொடுத்ததும் கல்லூரியில் இருந்தே நீக்கும் முயற்சியும் நடந்தது.
சஸ்பென்ஷன், இன்கிரிமென்ட் வெட்டு, எச்சரிக்கை, டெர்மினேஷன் என பல போராட்டங்களுடன்தான்
ஆசிரியர் பயணம் தொடர்ந்தது.
புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கான அமைப்பாக 1975ஆம் ஆண்டில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர்
மன்றம் ‘மூட்டா’ (Madurai University Teachers
Association) உருவானது.
பேராசிரியர் ராஜூ இவருக்கு மூட்டா அமைப்பில் நிர்வாகியாகவும் மூட்டா
ஜர்னலின் மண்டல ஆசிரியராகவும் பொறுப்புத் தந்து ஊக்குவித்தார். இதற்கு பின்
வகுப்பறைகளில் மேலும் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது.
தொடக்கத்தில் ஆசிரியர் பங்கேற்பும், போகப் போக மாணவர் பங்கேற்பும் என்பதுதான்
நகரும் வகுப்பறைக்கு அழகு என்பதை மூட்டா இயக்கம் மூலம் அறிந்து கொண்டார்.
கல்லூரி ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் வராத
காரணத்தையொட்டி 1977 டிசம்பரில் அரசாங்கத்தில் இருந்து நேரடி ஊதியம் வேண்டும் என
கேட்டு தனியார் கல்லூரி ஆசிரியர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். அதற்காக
சிறையும் சென்றார். இவர் கைது செய்யப்பட்டதை பொறுக்காமல் மறியல் செய்த
இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களுக்காக
மாணவர்களும் சிறை சென்றது அவரின் மறக்க முடியாத ஒரு அனுபவமாக கூறுகிறார். இதன்
பின்னரும் மாணவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.
1990 இல் உருவான
அறிவொளி இயக்கத்தில் இணைந்த பிறகு அதன் பல ஆக்கபூர்வமான பரிசோதனைகளின் மூலம் புதிய
புரிதல் ஏற்பட்டது. கற்பித்தல் சார்ந்து பல்வேறு மாற்றுக் கருத்துக்களுக்கும் இந்த
அறிவொளி அனுபவங்கள் காரணமாக இருந்தன. அதுவரை அறியாத மக்கள்,
அவர்களின் மொழி, வாழ்வியல் என்று பல புதிய கோணங்களையும் அவருக்கு உணர்த்தியது.
இவர் 2004ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இது
வரை கல்வி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் பல நூல்கள் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய முதல் நூல் ‘பாம்பாட்டி சித்தர்’. சித்தர் பாடல்களிலுள்ள சாதிய எதிர்ப்புணர்வு இவரை சிறு வயதிலேயே
கவர்ந்தது. சித்தர் பாடல்களில் இவர் செய்த முதல் ஆராய்ச்சியின் வெளிப்பாடாக வந்த
நூல் இது.
தன் பணி ஓய்வு வரை பழகிய எளிய கிராமத்து மாணவர்களிடம் பெற்ற கல்லூரி
அனுபவங்களின் தொகுப்பாக ‘எனக்குரிய இடம் எங்கே’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவரை
பாதித்தது இரண்டு விசயங்களே, ஒன்று வகுப்பறை மற்றொன்று அறிவொளி. இந்த இரண்டும்
தந்த அனுபவங்களின் சாரமாக எழுதிய நூல் ‘ஆளுக்கொரு கிணறு’. இதே போன்று அறிவொளி இயக்கத்தின் செயல்பாட்டுக்காக அருப்புக்கோட்டை
மக்களுடன் பழகிய போது அவர்களின் மொழி, பேச்சு, விடுகதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு
அவை அனைத்தையும் தொகுத்து எழுதப்பட்ட நூல் தான் ‘சொலவடைகளும்
சொன்னவர்களும்’.
முப்பதாண்டு அருப்புக்கோட்டை கல்லூரியில் தமிழ் பேராசிரியர், மூன்று ஆண்டுகள் நெல்லை பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்குனர், மூட்டா அமைப்பில் வசித்த பொறுப்புகள், அறிவொளி இயக்கச் செயற்பாட்டாளர், கல்வி மற்றும் பண்பாடு குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் என பரந்து பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது வரையிலும் கல்வி சார்ந்தும் சமூகம் சார்ந்தும் தொடர்ந்து களத்திலும், கருத்தியலிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
வெளிவந்துள்ள நூல்கள்
கட்டுரைகள்
பாம்பாட்டி சித்தர்
தமிழர் திருமணம்
அன்று முதல்... இன்று வரை
தெரு விளக்கும்
மரத்தடியும்
பொதுவுடைமை
இலக்கியம் - பார்வையும் பயணமும்
ஆளுக்கொரு கிணறு
சொலவடைகளும்
சொன்னவர்களும்
என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா
பூமரப் பெண்
இணைந்து எழுதிய
நூல்கள்
குழந்தை உரிமைகள்
(மனித உரிமைக் கல்வி பாடத்திற்காக முனைவர் இ.தேவசகாயம் உடன் எழுதியது)
மனித உரிமைகள்(மனித
உரிமைக் கல்வி பாடத்திற்காக முனைவர் இ.தேவசகாயம் உடன் எழுதியது)
மிருதுவாய் ஒரு
நெருப்பு: ரோஸா பார்க்ஸ் (ச. மாடசாமி, மா. லைலா தேவி இணைந்து எழுதிய வாழ்க்கை
வரலாறு நூல்)
இந்தியக் கல்வியின்
இருண்ட காலம்? – தேசிய கல்விக்
கொள்கை குறித்த கட்டுரைகள் (பல எழுத்தாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்)
சிறுவர் மற்றும்
கல்வி நூல்கள்
வெளிச்சம் உறுதி
குழந்தைகளின் நூறு
மொழிகள்
அன்பென்பது ஒரு
தந்திரம் அல்ல
ஏமாளியும் திருடனும்
ஆசிரிய முகமூடி
அகற்றி
எனக்குரிய இடம்
எங்கே
சுண்டெலிக் கதைகள்
முதலைக் கதைகள்
நாய் வால் சங்கிலிக்
கதைகள் முயல்குட்டியும் போலிசுகாரரும் ஓசைக் கதைகள்
போயிட்டு வாங்க சார்
கடலும் கிழவனும்
வித்தியாசம்தான்
அழகு