தொகுப்பு : மு தனஞ்செழியன்
பதினாறு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு ஆசிரியர் தனக்கோட்டி - த. தனம்மாள் அவர்களுக்கும் 27/07/1965 பிறந்தவர் பவா. செல்லதுரை. இவரது
சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். அங்குள்ள
சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில்
ஐந்து முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார். திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் பி. காம் பட்டப் படிப்பு
பயின்றார்.
திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு
நடைபெற்றது. அங்கு கே.வி.ஷைலஜா அவர்களோடு ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு, காதலாக மலர்ந்து, இருவரும் 10/05/1994 இல் திருமணம்
செய்து கொண்டனர். கே. வி. ஷைலஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக உள்ளார். மகன் வம்சி, மகள் மானசா
இருவருமே வாசிப்பில் ஆர்வமுடையவர்கள். கலை, இலக்கிய, குறும்பட முயற்சிகளில்
ஈடுபட்டு வருகிறார்கள். வம்சி எழுத்தாளர் அஸ்வகோஷ் (இராசேந்திரசோழன்) குறித்த ஆவணப்படம் ஒன்றினை
இயக்கியுள்ளார். மகள் மானசா இரா. நடராஜனின் 'ஆயிஷா'வை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பவா அவர்களின் முதல் பிரசுரம் ‘உறவுகள் பேசுகிறது'
– எனும் நாவல். தீபஜோதி பதிப்பகம் மூலம் 1986 ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே பத்தாயிரம் பிரதிகள்
விற்ற பெருமை பெற்ற நூல் இது.
நண்பர்களும், வாசகர்களும் இவரை அழைக்கும் ”பவா” என்ற பெயரே இலக்கியத்திலும் நிலைத்துவிட்டது. பவா தமிழ்
இலக்கிய உலகில் தனது வாழ்க்கையின் முழுநீள அனுபவத்தில் முக்கால் பங்குக்கு மேலாக
இலக்கியப் பணியைச் செய்து வருகிறார். சிறந்த கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், கதைச் சொல்லி, இலக்கிய விமர்சகர், நடிகர், பதிப்பாளர், இலக்கிய இரவுகளை உருவாக்கியவர்களில் ஒருவர் என பன்முக ஆளுமையாகத் திகழும் பவா
அவர்கள் மின்சாரத் துறையில் ஒரு அலுவலராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய ஒவ்வொரு நூலிலும் பரிச்சயமான சமகால
மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுகிறார். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பவாவின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு
வரவேற்புப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் தன்னை ஈர்த்த அத்தனை எழுத்தாளர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அவர்களின் கதைகளை கடத்திச் செல்லும் ஒரு கருவியாகவே தற்போதைய இணைய உலகில்
திகழ்கிறார்.
இன்றைய தமிழ் வெளி உலகம் பவா. செல்லதுரையை பெரிதும் அறிந்திருப்பது ஒரு ’கதைசொல்லி’யாகவே. குவார்டிஸ் பல்சமய உரையாடல் மையத்தில்
வெள்ளிக்கிழமை சாயங்காலம் கதை சொல்வது தொடங்கியது. இதன்
தொடக்கப் புள்ளியாக பவாவின் நண்பர் ஜே.பி இருந்திருக்கிறார். ஒரு இயல்பான
உரையாடலின்போது. இந்த கதை சொல்லும் நிகழ்வு
தொடங்குகிறது. இதுவரையிலும்
தமிழில் இருக்கக்கூடிய ஐம்பது எழுத்தாளர்களின் இருநூறு-
முன்னூறு சிறுகதைகளையும்,
நாவல்களையும் சொல்லியுள்ளார். தனது கணீர் குரலில் மூலம் கதைகளை நயம்படச் சொல்லி, கதை கேட்க வருபவர்களை புத்தகங்களைத் தேடி வாசிக்கவும் தூண்டுகிறார்.
”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” இவருடைய மிகச்சிறந்த சிறுகதை
நூல். இந்நூலில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை தோழர் கருப்பு கருணா அவர்கள் குறும்படமாகவும்
இயக்கினார். ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” எனும் சிறுகதைத் தொகுப்பு ஒரு
மாறுபட்ட முயற்சி. லத்தீன் அமெரிக்கக் கதைகளின் மொழிபெயர்ப்புகளும், தமிழ்ச் சிறுகதைகளும் கலந்து
தொகுக்கப்பட்ட நூல்.
பவாவும், கருப்பு கருணாவும்
திருவண்ணாமலையில்
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து 1990 இல் நடத்திய தீவிரமான களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக்
கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நூற்றுக்கும் மேலாக இருக்கும்.
தமிழ் இலக்கிய உலகில் ஜெயமோகனின் முதல் சிறுகதை
நூலினை பதிப்பித்தது இவர்தான். ஜெயமோகனின்
எழுத்துக்களை ரசிப்பதாகவும், அவரின்
அரசியல் கருத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபடுவதாகவும் ஒவ்வொரு உரையாடலின் போதும் வெளிப்படுத்துகிறார். தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணசித்திர நடிகராக அறியப்படுகிறார்.
ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி”
எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது.
பவாவின் பலமே அவரது நட்பு வட்டம்தான். தன்னுடைய இலக்கிய
உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை
பவாவைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும். சல சலத்து ஓடும் இலக்கிய
நதியாக பவா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டே, இயங்கிக் கொண்டிருக்கிறார்.
வெளிவந்துள்ள நூல்கள்
கவிதை
1) எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
சிறுகதைத் தொகுப்பு
1) நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - 2008
2) டொமினிக் 2016
3) நீர் மற்றும் கோழி - 2017
கட்டுரைகள்
1)
19, டி.
எம். சாரோனிலிருந்து 2011
2)
எல்லா நாளும் கார்த்திகை –
2013
3)
நிலம் –
2014
4) பஷீரின்
அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல - 2016
5) பங்குக்கறியும்
பின்னிரவுகளும் 2018
6) மேய்ப்பர்கள்
2020
நாவல்
1) உறவுகள் பேசுகிறது -. - 1989
தொகுத்த புத்தகங்கள்
1)
கந்தர்வன் கதைகள் – 2012
2)
ஸ்பானிய
சிறகுகளும், வீரவாளும்
3) சிறகிசைத்த காலம் – 2013
பிற மொழிகளில்
பவா
மலையாளம்
சிறுகதை தொகுப்பு:
1.
நட்சத்திரங்கள்
ஒளிக்குந்ந கற்ப பாத்ரம் - மலையாளத்தில்
திரு.ஸ்டான்லி
2.
டொமினிக் - மலையாளத்தில் Dr.K வெங்கடாசலம்
3.
தேன் - மலையாளத்தில் : பால்
சக்கரியா
கட்டுரை
1)
எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் Dr.T.N ரகுராம்
ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும்
கட்டுரைகள்
1) Dominic - ENGLISH : sidhraj ponraj
2) Ruins of the Night - ENGLISH : Janaki Venkatraman
3)
From 19 DM Saron - ENGLISH : P.Ramgopal
4) Shepherd - ENGLISH : Dr.K subramaniyan
5) Shared Meat and Late Nights – ENGLISH Dr. Priyalakshmi -2021
தெலுங்கு
சிறுகதை
1) நக்ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் - தெலுங்கு: ஜில்லா பாலாஜி
நடித்துள்ள திரைப்படங்கள்
1) ஜோக்கர் -2016
2) பேரன்பு -2019
3) குடிமகன் – 2019
4) அமிபா – 2019
5) சைக்கோ -2020
6) வால்டர் – 2020
7) யாதும் ஊரே யாவரும்கேளிர் – 2020
8) செந்நாய்
- 2020
9) வெள்ளை
யானை – 2021
பெற்ற விருதுகள்,
பரிசுகள்
1) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
2) தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது - எல்லா நாளும் கார்த்திகை
3) நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
4)
சிறந்த நடிகருக்கான விருது
2021 - செந்நாய்