Jun 19, 2021

எழுத்தாளர் மயிலை பாலு

 தொகுப்பு: பிரியா ஜெயகாந்த்

“அச்சம் கொள்ளாதே, அறிவால் தேடு, எதற்காகவும் உன் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதே” என்று கூறும் மயிலை பாலு என்று அனைவராலும் அறியப்படும் சா. மு. பாலசுப்ரமணியன் அவர்கள் 1949 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் கடலூர் மாவட்டம் கீரப்பாளயம் அருகில் உள்ள சாக்காங்குடி என்ற ஊரில் பிறந்தார். முத்து மற்றும் தனம் இவரது பெற்றோர். அவரது இணையர் பெயர் ஆர். உஷாராணி. அவரது இரண்டு மகள்கள் மகாலட்சுமி மற்றும் தனலட்சுமி.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி. ஓ. எல் - கீழ்த்திசை மொழி தமிழ் இளநிலைப் பட்டமும்,  எம். ஏ தமிழ் முதுநிலைப் பட்டமும் பெற்றவர் (1969 -1974).

ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பு எழுத்தாளர், செய்தி வாசிப்பாளர், மேடை பேச்சாளர், வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர், சமூகப் போராளி என பன்முகத் தன்மை கொண்டவர்.

1991 ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்காக தமிழ்ப் பாடல்கள் கேசட்டில் தோழர் இரா. தெ. முத்து பரிந்துரையில் முதன் முதலில் “மயிலை பாலு” என்று தன் பெயரை  பதிவிட்டார். அதன் பிறகு அந்தப் பெயரிலேயே மொழியாக்கங்களும் தீக்கதிர் கட்டுரைகளும் நூல்களும்  வெளிவரத் தொடங்கின.

1985 இல் தீக்கதிர் நாளிதழில் செய்தியாளர் பணியில் சேர்ந்து 2017 இல் சென்னை பதிப்பின் செய்தி ஆசிரியர் வரை பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய செய்திப்பிரிவில் செய்தி வாசிப்பவர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் (NRT) அவசரத்தேவை (Casual) பணிக்காக1983 இல் தேர்வு செய்யப்பட்டு 2021 மே மாதம் வரை பணியாற்றியவர்.

தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரின் அவசரத்தேவை (Casual) பணிக்காக 1991ல் தேர்வு செய்யப்பட்டு 2020 மார்ச்வரை பணியாற்றியவர்.

சாக்காங்குடி கிராமத்தில் 5 ஆம் வகுப்பு பயிலும் போது வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்குமேடை காட்சி நாடகங்களில் நடித்து பிரபலம் ஆனவர். நடத்தாத பாடத்தில் தேர்வு வினாக்கள் கேட்ட ஆசிரியருக்கு எதிராக 9 ஆம் வகுப்பிலேயே நண்பர்களுடன் இணைந்து வகுப்புப் புறக்கணிப்பு செய்து வெற்றி பெற்றது அவரது முதல் போராட்ட அனுபவம். பள்ளிப் பாடங்களில் சுத்தமாக பிடிக்காமல் இருந்த சமூகவியல், பின்னாளில் அவரது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியது.

பள்ளிப் பருவத்தில் விரும்பிப்படித்த கண்ணன் மற்றும் கல்கண்டு வார இதழ்களும், காமிக்ஸ் புத்தகங்களும் அவரது வாசிப்பின் துவக்கமாக இருந்தன. மு. வ. புதினங்கள், தீபம் ந. பார்த்தசாரதி புதினங்கள் அவருக்கு அதிகம் பிடித்தவை. ஜெயகாந்தன் கதைகளையும், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இதழை அதில் வரும் படங்களுக்காகவும், தினமணி இதழை ஏ. என். சிவராமன் கட்டுரைக்காகவும்  படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கல்லூரிக் காலங்களில் செவ்வியல் இலக்கியங்கள், காப்பியங்கள், காவியங்கள் போன்றவற்றின் வாசிப்பு அதிகமாக இருந்தது. பின்னர் சோவியத் மொழியாக்க இலக்கியங்கள் மற்றும் அரசியல் ஈடுபாடு காரணமாக சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை இலக்கிய நூல்களின் வாசிப்பு அதிகரித்தது.

ஐ.மா.பா, ஆர்.உமாநாத், கே. முத்தையா, அருணன் போன்றோரின் எழுத்துக்கள் மீதான வாஞ்சை அவரை அரசியல் பெட்டிச்செய்திகள் மற்றும் கட்டுரைகள் எழுதத் தூண்டியது. நூலாக்கத்திற்கு அவரை தூண்டியதில் பேருதவியாக இருந்தவர்  அலைகள் வெளியீட்டகத்தின் பெ.நா. சிவம் அவர்கள்.  “அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்” என்ற ஆனந்த் டெல்டும்ப்டேயின் நூலினை மொழியாக்கம் செய்யும் வாய்ப்பினை முதன் முதலில் அவர்தான் அளித்தார். அதன் நீட்சிதான் “நள்ளிரவில் சுதந்திரம்” உள்ளிட்ட பிற நூல்கள். “நள்ளிரவில் சுதந்திரம்” அவரை ஏராளமானவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரது பெயருக்கு முகவரியாகவும் அமைந்தது. சமூக அரசியல் ரீதியாக அவரது படைப்புகளில் அவர் மனதுக்கு நெருக்கமானது “நின்று கெடுத்த நீதி: வெண்மணிப் படுகொலை வழக்குகள் தீர்ப்புகள்” என்ற படைப்பு.

அவரது முதல் பிரசுரம் 1990 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழுக்கு எழுதிய சென்னை கோட்டூர்புரம் கோளரங்கம் பற்றிய கட்டுரை. கோளரங்கம் திறப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பிய அந்த கட்டுரையின் விளைவாக உடனடியாக கோளரங்கம் திறக்கப்பட்டது. அது  ஊடகப்பணியில் அவரது தேடலுக்குக் கிடைத்த அங்கீகாரம்.  ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற நூலுக்காக சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல் என்ற வகைமையில் பெற்ற திருப்பூர் தமிழ்ச்சங்க விருது அவரது முதல் விருது

தீக்கதிர் பணியின்போது அரசியல் சார்ந்த பல நூறு கட்டுரைகள், மொழியாக்கங்கள் எழுதியவர். அவற்றில், தீக்கதிர் வண்ணக்கதிர் பகுதியில் "என்னதான் சொல்கிறார் வள்ளுவர்?"  ஆய்வு நோக்கில் 133 வாரங்கள் எழுதப்பட்ட கட்டுரைகள், சங்கப் புலவர்களில் கபிலர் தொடங்கி பல புகழ்பெற்ற புலவர்கள் வரை சுமார் 50 கட்டுரைகள், தமிழின் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களும் புனைபெயர்களும் பற்றிய தகவல் தொகுப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

1983 ஆம் வருடம் த மு எ க ச வின் உறுப்பினராக சேர்ந்தார். மாநிலத் துணைத் தலைவராகப் பணியாற்றி, தற்பொழுது மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.

த மு எ க ச உறுப்பினராக சென்னையில் நடந்த திரைப்பட நூற்றாண்டு விழாவை திரைக் கலைஞர் ரோகினி மற்றும் பிற உறுப்பினர்களின் ஆலோசனையுடன் முன்னின்று நடத்தியவர். விந்தன் நூற்றாண்டை ஒட்டி விந்தன் பிறந்த ஊரான நாவலூருக்கு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் தோழர்கள் செல்வன், கருணாமூர்த்தி முயற்சியில் நடைபெற்ற தொடக்க விழா,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற விந்தன் நூற்றாண்டு விழா, மதுராந்தகத்தில் நடைபெற்ற நிறைவு விழா ஆகியவற்றை நடத்தியவர். தூத்துக்குடியில் நடைபெற்ற “தமிழகத்தில் பண்பாடு” குறித்த ஆய்வரங்கில் தாய் மொழி வழி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான கட்டுரை எழுதி மாநாட்டில் உரை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக, 'ஆவின்' நிறுவனத்தின் தற்காலிகப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் கோரி பத்து நாட்கள் உண்ணா விரதமும் 23 நாட்கள் சிறைக் காவலிலும் இருந்து பத்து ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தியவர். அதன் மூலம் பணித்தடை இல்லாமல் ஆயிரத்து நூறு பணியாளர்கள் மீண்டும் வேலைபெற்றனர். திருநங்கையர் பற்றிய புரிதலை ஏற்படுத்த மாநில அளவில் புரிந்துணர்வு முகாம் நடத்தியவர்.

ஊடகவியலாளராக, சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தில் (MUJ) பொதுச்செயலாளராக இருந்தபோது, 2001 இல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதன் பின்னணியாக பத்திரிகையார்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசைக் கண்டித்து 2001 ஆகஸ்ட் 15 அன்று பத்திரிகைத் துறையினரின் ஒரு நாள் தர்ணா போராட்டத்தை  சேப்பாக்கம் பகுதியில் தோழர்கள் பொன்தனசேகரன், பகவான்சிங், எஸ். ரங்கராஜன் ஆகியோருடன் தலைமையேற்று நடத்தியவர்.

சந்தன கடத்தல் வீரப்பனோடு தொடர்புபடுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை 'பொடாசட்டத்தில் கைது செய்ய முயற்சி செய்த போது அதற்கு எதிரான போராட்டங்களை வடிவமைத்ததில் பங்கு கொண்டவர்.

தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை விடுவிக்கக் கோரி நக்கீரன் பிரகாஷ் முன்முயற்சியுடன்  உழைப்பாளர் சிலை அருகே நடந்த பத்திரிகையாளர்களின் சாலை மறியல் போராட்டத்திற்குத்  தலைமை ஏற்றவர்.

படைப்பு முயற்சிகளில் இருக்கும் புதியவர்களுக்கு அவர் கூற விரும்பும் செய்தி:  “சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும். சமகால சிக்கல்களை பதிவு செய்வதோடு அவற்றுக்கான அக புற சூழல்களை வலைப் பின்னல்களாக இணைப்பதன் மூலம் வாசகர்களுக்கு புதிய திறப்பை தர வேண்டும். ஒற்றைப் படைப்பாயினும் மக்களிடம் உலா வர வேண்டும்”.

வெளி வந்துள்ள நூல்கள்

மொழிபெயர்ப்பு நூல்கள்

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் (கட்டுரை)

கவுரி லங்கேஷ் சிந்தனைக்கு மரணமில்லை (கட்டுரை)

நள்ளிரவில் சுதந்திரம் (வரலாற்று நூல்)

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - தொகுதி 8 (வரலாற்று நூல்)

வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் (வரலாற்று ஆய்வு நூல்)

நின்று கெடுத்த நீதி – வெண்மணிப் படுகொலை வழக்குகள் தீர்ப்புகள் (வரலாற்று ஆவணம்)

இளமையின் கீதம் (நாவல்)

சூறாவளி (நாவல்)

கட்டுரைகள்

குறுந்தொகை – அறிமுக அகல் விளக்கு

புகழ்மிக்க புறநானூற்றுத் தொடர்கள்

வெண்மணி 50 – அணையா நெருப்பு

இலக்கியத்தில் நடிப்பு

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருத்துவ இணையரின் இலக்கியத் தேடல்

பெற்ற விருதுகள், பரிசுகள்

திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (சிறந்த மொழிப்பெயர்ப்பு – நூல்: நள்ளிரவில் சுதந்திரம்)

பாரதியார் பேரவை – தமிழ்நாடு கலை இலக்கிய பேரவை விருது (சிறந்த மொழிபெயர்ப்பு – நூல்: இளமையின் கீதம்)

நல்லி திசை எட்டும் மொழியாக்க காலாண்டிதழ் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது (மொழியாக்கத்திற்கு)

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது

இணைய இணைப்புகள்