Jun 3, 2021

எழுத்தாளர் இரா. தங்கப்பாண்டியன்

தொகுப்பு: தேனி சீருடையான்

           மண்வளம் என்பது வாழ்வியல், மானுடவியல், இலக்கியவியல் வகமைகளின் தொகுப்பே. அந்தத் தொகுப்பில் தனித்துத் தெரியும் மலையடிச்சுனை இரா.தங்கப்பாண்டியன்.

            1970 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள் வைகை கருக்கொண்டிருக்கும் வருசநாட்டு மலையடிவாரத்தில் உள்ளகடமலைக்குண்டுவில் இவர் பிறந்தார். ராமகிருஷ்ணன் - பார்வதி தம்பதியருக்கு இரண்டாவது மகன். அன்புமிக்க சுற்றமும் அறிவாற்றல் மிக்க நட்பு வட்டாரமும் இவரின் மனோவியல் கருத்தோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

            மாணவப் பருவத்தில் இவருக்குக் கிடைத்த நல்லாசிரியர்கள் இவர் இலக்கியத்தில் முகம் பதித்து, சமூகச் சிந்தனையில் தடம் பதித்து நடக்கக் காரணமானார்கள். குறிப்பாக ஆசிரியப் பெருந்தகை சுதந்திரன், இலக்கிய ஆளுமை கவிஞர் வெண்மணி இவரின் இலக்கிய வழித்தடத்தைச் செப்பனிட்டவர்கள். இருவருமே இவருக்கு ஆசிரியராக இருந்து பயிற்றுவித்ததுஎனக்குக் கிடைத்த பெரும்பேறுஎன்கிறார் தங்கப் பாண்டியன்.


            1986ஆம் ஆண்டு திருவண்ணாமலையிலிருந்து மாற்றலாகிக் கடமலைக் குண்டு அரசுப் பள்ளிக்கு வருகிறார் கவிஞர் வெண்மணி. இளைஞர்களைத் தேடித் தேடிக் கண்டெடுத்துப் பண்பாட்டுப் பயிற்சியுடன் கூடிய பொதுமைச் சிந்தனையை ஊட்டுகிறார். வர்க்கப் பார்வையுடன் கூடிய கவிதைகள் மூலம் ஏற்கனவே புகழ் பெற்றிருந்தார் வெண்மணி. தமது ஆசிரியர்கள் மூலம் தங்கப்பாண்டியன் முதலில் கற்றுக்கொண்ட்து கவிதை. இவரின் முதல் கவிதை கவிஞர். இதயகீதன் நடத்தியஅக்னிக்குஞ்சுஇதழில் பிரசுரமானது.

            1980களிலிருந்து 2000 ஆண்டு வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமுஎகச) பொற்காலம் என்றே சொல்லவேண்டும். பொற்காலம் என்று சொல்வதற்குக் காரணம் அந்த அமைப்புக்குள் புதிய இளைஞர்களும் புதிய படைப்பாளிகளும் வீர்யமாக நுழைந்து வலுவான அமைப்பை உருவாக்கினார்கள் என்பதால்தான். அவர்களில் மிக முக்கியமானவர் தங்கப்பாண்டியன்.

            அப்போது மதுரை மாவட்ட்த்தின் பொறுப்புச் செயலாளராக தோழர் இதயகீதனும் துணைத் தலைவராக தேனி சீருடையானும் இயங்கிக் கொண்டிருந்தனர். மாவட்டம் முழுக்க கிளைகளை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுப்ட்டிருந்தனர். மேலூர் திருப்பரங்குன்றம் முதல் கூடலூர் வரையிலான நிலப் பரப்பில் கண்டெடுக்கப்பட்ட படைப்பாளிகளால் கிளை அமைப்புகள் உருவாயின. ஆசிரியர் சுதந்திரனும் கவிஞர் வெண்மணியும் இனம் காட்ட தோழர்கள் தங்கப் பாண்டியன், டீக்கடை ராஜா, அழகர்சாமி, உதயக்குமார் உள்ளிட்ட மேலும் சில படைப்பாளிகள் மற்றும் வாசகர்களைக் கொண்டு கடமலைக்குண்டு கிளை உருவானது. மாதாந்திர இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்டதில் எல்லாருடைய படைப்புகளும் விவாதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. அனைவரையும் முந்தி வீறிட்டு எழுந்தார் தங்கப்பாண்டியன். அவரின் படைப்புகள் கிராமிய மணம் கமழ உள்காட்டு வாழ்க்கையைப் பதிவு செய்தன.

    கவிஞர் வெண்மணி, சுதந்திரன், தங்கப்பாண்டியன் ஆகியவர்களை ஆசிரியர் குழுவாகக்கொண்டுவைகைஎன்ற மாதாந்திர இலக்கிய ஏடு கிளை சார்பாக வெளிவந்தது. தங்கப்பாண்டியனை வளர்த்தெடுத்ததில் வைகைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அந்த இதழின் பதிப்பாக்கத்தில்தான் அவருடைய முதல் கவிதைத் தொகுப்பானசின்னச்சின்னக் கோபங்கள்பிரசுரமானது. அவரின் திறமையைக் கண்டு , தோழர் இதயகீதன் தனதுஅக்னிக்குஞ்சுஇதழின் ஆசிரியர் குழுவில் அவரை இணைத்துக்கொண்டார்.

            எல்லா முற்போக்குப் படைப்பாளிகளையும் போலவே கவிதை என்ற வாய்க்காலில் இருந்து சிறுகதை என்ற தோட்ட்த்துக்குள் நுழைந்தார். நெடுநீளமாய் ஓடும் நீர்ப் பரப்பு கவிதை என்றால் பன்முக விளைச்சல் தரும் தோட்டம் சிறுகதை. செம்மலர், கணையாழி, காமதேனு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் பிரசுரமாயின. இவரதுகதையுதிர்காலம்என்ற சிறுகதைத் தொகுப்பு வந்தபோது பலரும் இவரை ஆச்சர்யத்தோடு பார்த்தனர். மிகச்சிறந்த இலக்கிய ஆளுமையும் திரைக்கலைஞருமான பாஸ்கர் சக்தி எழுதிய முன்னுரையில்மண்ணின் மைந்தன் அசலான மண்ணின் கதையைப் பதிவு செய்துள்ளார்என்று பாராட்டினார்.

            இவர் படித்து முடித்து சிலகாலம் மதுரையில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்தார். நாட்டுப்புறக் கலைகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்வதே அந்த நிறுவனத்தின் நோக்கம். பின்னாளில் அரசு வேலை கிடைத்த பிறகு, தனக்குக் கிடைத்த அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுகோமாளிகள் வாழ்வும் இல்க்கியமும்என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். இந்நூல் அவரின் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வேட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. “கோமாளிகள் பற்றி ஆய்வு செய்த முதல் தமிழ் நூல்என்று இலக்கிய மேதை பிரபஞ்சன் பாராட்டி இருக்கிறார். அதோடு இந்த நூலை வைத்தே ஒரு தனிக்கட்டுரையைத் தமிழ் இந்துவில் தீட்டியிருக்கிறார். இந்த நூல் ஆய்வாளர்களாலும் நாட்டுப்புறக் கலைஞர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்ட்து.

            நாடக நடிகராகவும் இயங்கியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. “சுருளிப்பட்டி சிவாஜியும், அய். தமிழ்மணியும் தங்கள் நாடகங்களில் என்னை இணைத்துக்கொண்டு தமிழகமெங்கும் அழைத்துச் சென்று நடிக்கவைத்தார்கள் என்பது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுஎன்கிறார்.

            ஆசிரியர் சுதந்திரன், கவிஞர் வெண்மணி, கவிஞர் இதயகீதன், எழுத்தாளர் தேனி சீருடையான், மேலாண்மை பொன்னுச்சாமி, மு. முருகேஷ் ஆகியோரை தனது இலக்கிய வளர்ச்சிக்கு உத்வேகம் தந்தவர்களாகக் குறிப்பிடுகிறார் தங்கப்பாண்டியன்.

 என் மலையிலிருந்தும் ஓடையிலிருந்தும் செவக்காட்டு மண்ணிலிருந்தும் கிடைக்கிற வாழ்வியல் தரவுகளை உள்வாங்கி, எழுத்தாக்கி அங்கு வாழும் மக்களுக்குத் திருப்பித் தருகிற யதார்த்தவாதப் படிமமே எனது இலக்கியக் கொள்கைஎன்கிற தங்கப்பாண்டியன், இப்போது தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மகளிர் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலராகப் பணியாற்றுகிறார். மனைவி ஜெயசீலா, மகன் அரவிந்த பாண்டியன், மகள் மனோபாரதி.

            கடுமையான பணிச் சுமைக்கு மத்தியிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

சின்னச்சின்னக் கோபங்கள். (கவிதை)

நீயின்றி நடக்கும் நிழல். (கவிதை.)

கதையுதிர் காலம். (சிறுகதை)

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும். (ஆய்வுநூல்)

பெற்ற பரிசுகள்

புஷ்கின் இலக்கியப் பேரவை மாநில அளவிலான முதல் பரிசு 1990

அக்னிக்குஞ்சு கவிதைப்போட்டி முதல் பரிசு 1991

சுப்ரமணிய சிவா மாத இதழ் கவிதைப்போட்டிப் பரிசு 1996

கல்கி சிறுகதைப் போட்டி மூன்றாம் பரிசு 2010

இன்குலாப் இலக்கிய விருது 2017

பயணம் சிறந்த ஆய்வு நூலுக்கான இலக்கியப் பரிசு 2018

சிறந்த கவிதை நூலுக்கான பயணம் இலக்கியப் பரிசு 2019

சிறந்த சிறுகதை நூலுக்கான இலக்கியக் குழுமம் இலக்கிய விருது

இணைய இணைப்புகள்