தொகுப்பு : சே. மல்லிகா பத்மினி, பா.கெஜலட்சுமி
"கல்வி கற்பது மனிதர்களின்
வாழ்நாள் செயல்பாடு. மனித சமூகத்தைப் பிணைத்துள்ள அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு
மேலெழ உதவும் ஏணி - கல்வி" என்று கூறும் எழுத்தாளர் கமலாலயன் அவர்களின் இயற்பெயர் வே.
குணசேகரன். தோழர் கமலாலயன், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு,
பாடநூல்கள், வாழ்க்கை வரலாறு, என பல தளங்களில் தடம் பதித்து, சிறந்த களப்பணியாளராகவும்
இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் திண்டுக்கல் நகரில் 1955 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நாலாம் தேதி பிறந்தார். இவரின் அப்பா
வேலுச்சாமி
- அம்மா தாயாரம்மாள். பெற்றோரின் பூர்வீகம், பொள்ளாச்சியை
அடுத்த சீலக்காம்பட்டி என்ற சிறு கிராமம். அப்பாவும், அவருடைய
மூன்று சகோதரர்களும் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். விளைச்சல் இல்லாமல்
நெருக்கடி ஏற்பட்ட போது பஞ்சு வியாபாரத்தில் கூட்டாக ஈடுபட்டிருக்கின்றனர்.
அனுபவமின்மை காரணமாக நஷ்டம் ஏற்பட, அப்பாவும், அம்மாவும் திண்டுக்கல்லுக்குப் புலம் பெயர்ந்து வந்து, ஒரு டீக்கடை வைத்தனர். அந்த வருமானத்தில்தான் ஆறு குழந்தைகளையும் வளர்த்துள்ளனர்.
கமலாலயன் அவர்களின் ஆரம்பக்கல்வி
திண்டுக்கல் சவுந்ந்தர்ராஜா மில்ஸ் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை
அமைந்தது. முதல், இரண்டாம் வகுப்புகளின்
ஆசிரியர்களான மேரி, ரூபி, மற்றும்
தலைமை ஆசிரியர் தண்டபாணி ஆகியோர் அப்போதே சிறு நூல்களைப் படிக்கச்செய்து
வாசிப்பின் சுவையை அறிமுகம் செய்ததை வாசிப்பின் துவக்கமாகக்
குறிப்பிடுகிறார். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலிருக்கும் நேரு நினைவு உயர்நிலைப் பள்ளியில் இருந்த ஒரு பெரிய நூலகமே தன்னை தீவிர இலக்கிய ஆர்வலனாக மாற்றியது
எனக்கூறும் இவர், அங்கு தீபம், கலைமகள்,
கண்ணன்,மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான மாத, வார இதழ்களையும் நாவல்கள், கதைத்தொகுப்புகளையும்
படித்ததாக நினைவுகூர்கிறார். மணவை முஸ்தபா ஆசிரியராக இருந்த யுனெஸ்கோ கூரியர்,
தி.க.சி. ஆசிரியப்பொறுப்பில் வெளியான சோவியத் நாடு போன்ற முக்கியமான
பத்திரிகைகளையும் அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கண்ணன் இதழில்
தொடர்ந்து அப்போது கதைகள் எழுதி வந்தவரும், குழந்தை இலக்கிய
நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான மா.கமலவேலன் தான், எழுத்தாளனாக தான் ஆனதற்கு முதல் ஆசிரியராக அமைந்தார் என்று குறிப்பிடுகிறார் கமலாலயன்.
அன்றைய பதினோராம் வகுப்பு
வரை, திண்டுக்கல் நேரு நினைவு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில்
படித்து, தொழிற்பயிற்சி மையத்தில் டூல் அண்ட் டை மேக்கிங் பட்டயப்
படிப்பை நிறைவு செய்தார்.
காட்பாடி தொழிற்சாலை ஒன்றில் கருவியாக்குனராகப் பணியாற்றினார். அங்கு தொழிற்சங்கங்களில் இணைந்து
தீவிரப் பணியாற்றி, போராட்டங்களில் பங்கேற்றார். 65 நாட்கள் கதவடைப்பிற்குப் பின்னர்
நடைபெற்ற 15 நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதை முன்னிட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட
பதினேழு தலைவர்களில் கமலாலயனும் ஒருவர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாநில செயற்குழுக்களில் பொறுப்புகள் வகித்து எழுத்து, வீதி நாடகம், இசைப்பாடல் என பல்வேறு வடிவங்களில் சமூகப்பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் களப்பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார். த.மு.எ.க.ச. மாநிலத் துணை செயலாளராக மூண்றாண்டுகள் பொறுப்பு வகித்தவர். அப்போதுதான் எழுத்தறிவுப்பணிக்காக அறிவொளியில் இணைந்து தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் அதிலேயே வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பணி செய்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில அலுவலகத்தில் நான்கு ஆண்டுகள் முழுநேர ஊழியர். மாநில பள்ளி சாராக்கல்விக் கருவூலம், மகளிர் மேம்பாட்டுதிட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பயிற்சியாளராகப் பணி செய்து, பல கையேடுகளையும் உருவாக்கியவர். சமச்சீர்க்கல்வித் திட்டப் பாடநூல்கள், திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.தலைமையில் புதிய பாடநூல்கள் உருவாக்கம் ஆகியவற்றில் ஒன்றரை ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் மொழிபெயர்ப்பாளராக நான்கு ஆண்டுகள் பணி. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத்திட்ட இயக்குனராக இரண்டு ஆண்டுகள் பணி.
"என்னுடைய எழுத்து வாழ்க்கை, இலக்கிய ஆர்வம், படைப்பு முயற்சி தொடங்கியது குழந்தை இலக்கியத்திலிருந்து தான். பள்ளிக்கூட
நூலகம் எப்படி ஒரு மாணவனை குழந்தை இலக்கியத்தின் பால் ஆர்வம் உள்ளவனாக மாற்றும் என்பதற்கு
நானும் என் தலைமுறை எழுத்தாளர்களுமே சாட்சி" என ஓர் இலக்கிய கூட்டத்தில் பகிர்ந்து
கொண்ட தோழர் கமலாலயன், 1970 ஆம் ஆண்டு மத்தாப்பு என்ற சிறுவர்
இதழில் வெளியான முதல் கதையின் மூலம் எழுத்துலகில் அறிமுகமானார். 'பார்வைகள் மாறும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அன்னம்
பதிப்பக வெளியீடாக 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது. கல்கி,
குங்குமம், இதயம் பேசுகிறது, தினமணிக்கதிர், சுபமங்களா, தீபம்,
கணையாழி, புதியபார்வை, செம்மலர்,
புதிய புத்தகம் பேசுது, உங்கள் நூலகம்,
மேன்மை, இந்து தமிழ் திசை, இளைஞர் முழக்கம், சிகரம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில்
இவரின் ஏராளமான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
வெளியாகியுள்ளன.
"உண்மையில் கமலாலயன்
தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு மிகப்பெரும் கொடையைக் கொடுத்திருக்கிறார். அப்படியொரு
ஆற்றொழுக்கான தமிழில் ஒரு இயற்கையியலாளரைப் பற்றிய வரலாற்று நூலை அதன் நுட்பமும்,
தகவல்களும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார்" என எழுத்தாளர்
உதயசங்கர் "பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் என்னும் நூல்
குறித்து தன் பாராட்டைப் பதிவு செய்துள்ளார்.
இவரது இரண்டு சிறுகதை தொகுதிகள்,
ஐந்து கட்டுரை தொகுதிகள், நான்கு வாழ்க்கை வரலாற்று
நூல்கள், பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள்,
சிறார் கதை நூல்கள் இரண்டு என்று மொத்தம் 27
நூல்கள் இதுவரை பல பதிப்பகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன.
வெளிவந்துள்ள படைப்புகள்
சிறுகதைத் தொகுதிகள்1. பார்வைகள் மாறும்-1990
2. தட்டுப்படாத காலடிகள் –2016
கட்டுரைத் தொகுப்புகள்
1. நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி –2005
2. நூலகங்களுக்குள் ஒரு பயணம்-2005
3. மானுட வீதி-2008
4. இசை நிறை வாழ்க்கை-2013
வாழ்க்கை வரலாற்று
நூல்கள்
1. கோதாவரி பாருலேகர் சுயசரிதை-2008
2. அமெரிக்க கறுப்பினப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யூன்-2011
3. சக்கர நாற்காலியில் ஒரு பேரறிஞர் –சிடீபன்
ஆகிங் –2013
4. நிலவோடு வான்முகில்- பின்னணிப்பாடகி ஏ.பி.கோமளாவின் வரலாறு -2018
மொழிபெயர்ப்ப்பு நூல்கள்
1. மார்க்சியமும்,கலாச்சாரப்பணியும்
–நாராயண் சூர்வே -2005
2. புவிமுழுமைக்குமான நீதி –சே-கு-வேரா
கட்டுரைகள் –2006
3. எதார்த்தத்தை வாசித்தாலும்,எழுதுதலும்-
பாவ்லோ பிரையிரே-2012
4. மிச்சம் மீதி- முனைவர் ஆனந்த் பாண்டியன்,எம்.பி.
மாரியப்பன் –2012
5. தமிழகத்தில் தேவதாசிகள்-கே.சதாசிவம் –2014
6. என்,ஜி,ஒ,க்களின் உண்மைச் சுயரூபம் –பி,ஜே.ஜேம்சு
-2016
7. திரையகம்- முனைவர் ஆனந்த் பாண்டியன்-2017
8. சோமநாதர்-வரலாற்றின் பல குரல்கள்-ரொமிலா தாபர் –2017
9. மஹத்-முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்-ஆனந்த் டெல்டும்டே -2018
10. துணிவின் பாடகன் பாந்த்சிங்-நிருபமா ராவ்-2019
11. 'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் -
வாழ்க்கைப் பயணம் -2020
விருதுகள்
1. மாநில அளவில் சிறந்த
களப்பணியாளர் - மால்கம் ஆதிசேஷையா விருது.
2. நமது கிராமம் திட்டத்தின்
சிறந்த மாநில பயிற்சி ஒருங்கிணைப்பாளர் விருது.
3. தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற விருது
4. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்
சங்க விருது
5. நல்லி திசை எட்டும் விருது