Jun 9, 2021

எழுத்தாளர் களப்பிரன்

தொகுப்பு: பா.கலைச்செல்வி

            கவிஞர், சினிமா விமர்சகர், கட்டுரையாளர், களப்பணியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் களப்பிரன் அவர்களின் இயற்பெயர் செ.ராஜன்.

            எழுத்தாளர் களப்பிரன் தஞ்சாவூரில் செல்வராஜ்- சந்திரா ஆகிய தம்பதியருக்கு 13/03/1983 அன்று மூத்த மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஒரு இளைய சகோதரி மட்டும். அவரும் தஞ்சையிலேயே வசித்து வருகிறார்.

            களப்பிரன் தனது பள்ளிப்படிப்பை செயின்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். டிப்ளமோ இன் பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு, சென்னையில் உள்ள மினிஸ்ட்ரி ஆஃப் டெக்னாலஜியில் ஆறுமாத தொழிற்கல்வி பயின்றார்.

            சிறுவயதிலிருந்தே இவருக்கு இருந்த வாசிப்பு ஆர்வமும், சமூக அக்கறையும் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் மலர்ந்திருக்கிறது. மலர்வதற்கான தளத்தை தஞ்சை பெரிய கோவில் புல்வெளி வழங்கியது. அங்கு நடந்த தஞ்சை பிரகாஷின் இலக்கிய வட்டத்தில் தான், முதலில் கலந்து கொண்டிருக்கிறார்.

            சிறுவயதிலேயே இவரது முற்போக்கு சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட எழுத்துக்களை பார்த்துவிட்டு, அங்கிருந்த தோழர்கள் தமுஎகச கூட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 1998 இல் தனது பதினைந்தாவது வயதில் தமுஎகச வில் இணைந்த இவர், அன்றிலிருந்து இன்று வரை பல நிலைகளிலுமிருந்து களப்பணியாற்றி வருகிறார்.

            சென்னையில் பணிபுரிந்த சூழலில் தந்தை காலமானதால், எல்ஐசியில் தந்தையின் பணியை 2003 ல் இவர் ஏற்றுக்கொண்டார். எல்ஐசியிலும் இடதுசாரி தொழிற்சங்கத்தில் இணைந்து, பொதுமக்களின் நிறுவனமான எல்ஐசியை பாதுகாப்பதிலும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். உலகமய கொள்கைகளை தோற்கடிக்கத்துடிக்கும் பாட்டாளிகளின் வரிசையில் இவரின் நாடித்துடிப்பு எப்போதும் வெளிப்படும்.

            தன்னால் இயன்றதை இச்சமூகத்திற்கு திருப்பி தரும் பொருட்டு பேரிடர் காலங்களில், மக்களின் துயர்துடைக்க  களப்பணியாற்றுவதில் முன்னணியில் இருப்பவர் கவிஞர் களப்பிரன்.

            இவருடைய கவிதைகளும், கட்டுரைகளும் இலக்கிய இதழ்களிலும், தினசரிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின். இதுவரை இவருடைய மூன்று நூல்கள் வெளிவந்துள்ள.

            எழுத்தாளர் களப்பிரனின் இணையர் - தேவி யசோதா. இவர் தமிழ்ப் பல்கல்கலைக் கழகத்தின் இசைத்துறை மாணவி. இவரை இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண அழைப்பிதழை, பெண் சுதந்திரம், சாதி விடுதலை பற்றிய நூலாகவே தொகுத்து அனைவருக்கும் வழங்கினார். இவருக்கு யாழினி, குழல் இனியன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.


            இந்த காலத்து இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை குறித்தும் ஜாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு பற்றியும் பல மேடைகளிலும்,விஜய் டிவி யின் "நீயா நானா" போன்ற நிகழ்ச்சிகளிலும் பேசிவருகிறார். மேலும் சாதி மறுப்பு கொள்கையை நம் சொந்தங்களிடமிருந்தே துவங்குங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.

            சமூக வலைதளங்களில் சமூக அக்கறை கொண்ட பல பதிவுகளை இட்டு வருகிறார். தற்போதைய சமூகத்தின் முற்போக்கு மரபுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தேரின் சக்கரங்களுக்கு தன்னால் முடிந்த விசையை முன்னோக்கி நகர்த்த துடித்துக் கொண்டிருக்கும் இவர், அதற்கான களமாக தமுஎகச எனும் இலக்கிய அமைப்பின் மாநில துணைப் பொது செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து செயல்படுகிறார். தமுஎகச மாநில திரை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1. *வரலாற்றில் தஞ்சை நகரம்* - தற்போதைய தஞ்சை நகரின் அடையாளங்களை வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டும் நூல்.

2. *செல்லுலாய்டின் மாபூமி* மிக முக்கியமான உலக திரைப்படங்களின்  சுருக்கமான அறிமுகத் தொகுப்பு நூல்.

3. *ஆதலினால் காதல் செய்வீர்.* இந்நூல் உலகிலுள்ள புகழ்பெற்ற காதலர்களின், அவர்களது உணர்வுகளின் காவியத் தொகுப்பு.

இணைய இணைப்புகள்