Jun 7, 2021

எழுத்தாளர் அ.பீர்முகமது அப்பா

தொகுப்பு : .காமுத்துரை

            தேனிமாவட்டம் பெருமை கொள்ளத்தக்கவொரு இலக்கியவாதி. இயக்கவாதிபீர்முகமது அப்பா.

            இயல்பில் இவர் ஒரு தொழிற்சங்கவாதி. மின்வாரியத்தில் இளமின்பொறியாளராக பணிபுரிந்த இவர் கமபம் நகரில் பிறந்தவர். டி (பட்டயப் பொறியாளர்) முடித்த இவர் நேரடியாய் தேர்வெழுதி மின்வரியத்தில் பணியாற்றத் துவங்கினார். துறையில் தொழிற்சங்கத்திலும் நல்ல ஈடுபாடு கொண்டவர். இடதுசாரி தொழிற்சங்கவாதியான து.ஜானகிராமன் அவர்களால் ஈர்க்கப்பட்டு களப்பணியாற்றியவர். வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோரின்  மார்க்சீய வகுப்பில் வர்க்ககல்வி பயின்றதன் விளைவாய் தனது வாழ்க்கையினையும் அதன் வழி கொண்டுசென்றவர். தனது இணையர் ரதியாம்மளை ராகுகாலத்தில் திருமணம் செய்தார். உடன்பிறந்த தம்பி ஒருவர்- பஷீர்முகமது. இவருக்கு, முகமது மீரான், நஜிமா எனும் இரண்டு குழந்தைகள்.

            தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக சேர்ந்த இவர் தனது படிப்பின் காரணமாக பதவி உயர்வு பெற்றார். ஏர்வாடி ராசிங்காபுரம், சுருளியாறு மின்நிலையம், தேனி கம்பம் போன்ற இடங்களில் இவர் பணிநிமித்தம் திரிந்தாலும். தேனிநகரம் இவருக்குள்ளிருந்த இலக்கியவாதியை வெளிக்கொணர்ந்தது. அல்லது தேனியில்தான் தனது இலக்கிய ஒளியை இவர் கண்டுகொண்டார். தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த தமுஎசவின் மாதாந்தர இலக்கியக்கூட்டங்கள் அவரது இன்னுமொரு பகுதியை இனங்காட்டியது.

            அப்போதெல்லாம் தேனிஅல்லிநகரம் கிளையின் மாதாந்திரக்கூட்டத்தில் படைப்பரங்கம் என்பது தவறாது இடம்பெறும். ஒவ்வொரு கூட்டத்திலும் உறுப்பினர்கள் தங்களது கவிதை மற்றும் சிறுகதைப் படைப்புகளை கூட்டத்தில் வாசித்துக்காட்டுவது வழக்கம். கூட்டத்துக்கு வந்திருக்கும் ஒவ்வொரு தோழரும் அதன்மீது தமது கருத்துகளைச் சொல்லி படைப்பினை மெருகேற்றிக் கொடுப்பார்கள். இந்தவிதமாக வளர்ந்தவர்களில் முக்கியமான படைப்பாளிகள் அல்லிஉதயன், தேனிசீருடையான், .காமுத்துரை, மற்றும் ஜோதிபாரதி, திண்டுக்கல் மேகதாசன், தேனிபாலன், கவிஞர் கலைதாசன், பாஸ்கர்சக்தி, பாலுசத்யா என ஒருபடையே உண்டு.

            இதில் மற்றவர்களைவிட பீர்முகமது அப்பாவின் பங்கு தனித்துவமாய் இருக்கும். வாசிக்கும் படைப்பை வரிவிடாமல் உள்வாங்கி விமர்சிப்பார். எந்த மாச்சர்யங்களும் இருக்காது. மாறாக மார்க்சீய அழகியல் பார்வையில் விமர்சனம் அமையும். அழகியல் படைப்பிற்கு முக்கியத்துவம் என சாதிப்பார்.

            படைப்பின் அழகு அதன் ஜீவத் துடிதுடிப்பில் இருக்கிறதுஎனும் புதுமைப்பித்தனின வரிகளை அவரது ஆயுள்வரை கடைப்பிடித்தவர். மாதாந்திரக் கூட்டங்கள் அல்லாமல் தினசரி அவரது பணிமுடிந்த ஓய்வு நேரத்திலும் இலக்கிய விவாதத்திற்கு இடமளித்தார். எப்போது ஒரு படைப்பு எழுதி முடித்தாலும் அவரிடம் கொண்டு செல்லலாம். எந்தவிதமான மனச்சிக்கலுமின்றி நேரம் ஒதுக்கி வாசித்துப் பேசுவார். சிலநேரம் விமர்சனத்தை எழுத்தாக்கித் தருவார்.

            எழுத்தாளனைக் கொண்டாடிய தோழர் என்றால் அது பீர்முகமது அப்பாதான். யாருடைய படைப்பும் அச்சில் வந்துவிட்டாலோ பரிசினைப் பெற்றுவிட்டாலோ எழுதியவரைக்காட்டிலும் அதிகமாக சந்தோசப்படும் நபர். அன்றாடங்களை இலக்கியமாக்கும் கலையினை முதன்முதலாய் மாவட்டத்தில் வலியுறுத்தியவர். எதேச்சையாய் அவரது அலுவலகத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அவர் விவரித்தபோது அல்லிஉதயன், “இத நீங்க அப்பிடியே எழுதிட்டு வாங்க பாப்பம்அப்படி எழுதிய ஒரு விபத்தில்தான் அவரும் ஒரு கதாசிரியரானார்.

            நல்ல வாசகன் நல்ல எழுத்தாளனாவான் என்பதற்கு முழு உதாரணம் பீர்முகமதுஅப்பா தான்.

            அதிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது கதைகள்வரை எழுதினார்.  அவருக்கு தான் கதை எழுதுவது என்பதைவிட நல்ல படைப்புகள் வெளிவருவதுதான் நோக்கம். அதனடிப்படையில் தொன்னூறு காலகட்டத்தில் பிரபலமாய் இயங்கிக்கொண்டிருந்த கதாசிரியர்கள் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர்ப்பூ, .தமிழ்செல்வன் எழுதிய வாளின் தனிமை, ஜெயந்தன், தனுஷ்கோடி ராமசாமியின் நாரணம்மா, தோப்பில் முகமதுமீரானின் நாவல்கள் குறித்த அவரது இலக்கியவிவாதம் முக்கியத்துவமிக்கது. இன்றைக்கும் தமிழ்செல்வன் பீர்முகமது அப்பாவின் கூர்மையான விமர்சனப்பாங்கினை பல இடங்களில் பகிரத் தவறுவதில்லை.


            பீர்முகமது அப்பாவின் இன்னுமொரு அதிமுக்கியமான பணி, இளம் படைப்பாளர்களை வளர்த்தெடுப்பது.  தேனி அல்லிநகரத்தில் இருக்குமட்டும் இலக்கிய விவாதங்களுக்கு இணையாக மார்க்சீய தத்துவ நூல்கள் மற்றும் அழகியல் குறித்தான புத்தகங்களைத் தருவித்து அவற்றை கூட்டுவாசிப்பிற்கு உட்படுத்தி தத்துவ தெளிவுபெற உதவுவதனை தலையாய பணியாக மேற்கொண்டவர். அதேபோல கம்பம் பகுதியில் வாழ்ந்தபோது இன்றைக்கு தமுஎகசவில் முக்கியப்பொறுப்பு வகிக்கும் .உமர்பாரூக், அய். தமிழ்மணி போன்ற பலதோழர்களுக்கு வகுப்பெடுத்து வளர்த்தெடுத்த பெருமையும் உண்டு.

            இத்தனை பெருமைமிகு தோழர், எழுத்தாளர் .பீர்முகமதுஅப்பா இன்னும் சில கதைகள்எனும் ஒரேஒரு சிறுகதைத் தொகுப்பில் தனது கதைகளை அச்சேற்றிப் பார்த்திருந்தார்.

            1948 இல் கம்பத்தில் அப்துல் காசிம் குடும்பத்தில் பிறந்த பீர்முகமது அப்பா தனது ஐம்பதாவது வயதில் செப்டம்பர் முதல் தேதியில் 1998  ஆம் வருடம் திடுமென உண்டான மாரடைப்பில் தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டது, தேனிமாவட்ட இலக்கிய உலகம் செய்த துரதிர்ஷ்டம். அவரது மறைவுக்குப் பின்னால் தமுஎகசவின் விருநகரில் நடந்த மாநிலமாநாட்டில் அவரது மொத்த கதைகளையும் .காமுத்துரை.உமர்பாரூக் தொகுக்க, அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது..

            இன்னும் அவரது தொகுக்கப்படாத கதைகளும், கடிதங்களும், படைப்பு விமர்சனங்களும் அவரது அன்புமிக்க மனைவி ரதியாம்மாளும் மகன்  மீரான் முகமதுவும் மகள் நஜீமாவும் பொக்கிசமாய் பாதுகாத்து வருகிறார்கள். 

வெளிவந்த படைப்புகள்

1.       இன்னும் சில கதைகள் (கூட்டு சிறுகதைத் தொகுப்பு)                                                                              

2.       பீர் முகமது அப்பா கதைகள்

இணைய இணப்பு