தொகுப்பு : நெ.பி.ராஜேஷ்
“கடவுள் ஒரு கற்பனை
உருவாக்கம் தான். நம்பிக்கையின் அடிப்படையில் உயிரூட்டப்பட்டுள்ளன. மனிதனின்
தேவைகள் பூர்த்தி ஆகும் போது படிப்படியாக தேய்ந்து மாய்ந்து போய் விடும்” என்று கடவுளைக் குறித்து கூறும் எழுத்தாளர்
தோழர் கு.சின்னப்ப பாரதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பட்டி
என்னும் கிராமத்தில் மத்தியதர விவசாயக் குடும்பத்தில் குப்பண்ணன் மற்றும் பெருமாயி
அம்மாள் அவர்களுக்கு மகனாக மே 2, 1935 இல் பிறந்தவர். சிறு வயதிலேயே பாரதியாரின்
புத்தகங்களை வாசித்து அவர் மீதான பற்றுதலால் தன்னுடைய பெயரை சின்னப்பபாரதி என மாற்றிக் கொண்டார்.
பொதுவுடமை கட்சித் தலைவர்கள் மற்றும் பாரதியாரின் எழுத்துக்களால் பெரிதும்
கவரப்பட்டு இலக்கிய உலகிற்கு வந்தவர். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே நூல்களை
வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடைய பள்ளி காலத்திலேயே சிறப்பான நூல்
நிலையங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் உலகப்
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கும் வாய்ப்புகள்
பெற்றவர். வகுப்பு வாரியாக வாரம் ஒருமுறை நூலகத்திற்குச் சென்று படிக்க வேண்டிய
கட்டாயமும் அவருக்கு நூல்களைப் படிக்க நல்ல வாய்ப்பாக சிறுவயதிலேயே அமைந்தது.
நாமக்கல்லில் உள்ள கந்தசாமி படையாட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்
கல்வியை முடித்தார். சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார்.
கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்தான் எழுத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.
அவருடைய பேராசிரியராக இருந்த மு.வரதராசன் இதற்கு
முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு
அரசியல் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அந்த காலத்தில் விவசாயிகள் போராட்டம், வரி உயர்வு போராட்டம் போன்றவைகள் நடந்தவண்ணம்
இருந்தன. நில உச்சவரம்பு போராட்டத்திற்காக 650 கிலோ மீட்டர் நடைபயணம் சென்றார். இதுபோன்ற
போராட்ட அனுபவங்கள் அவருக்கு எழுதுவதற்கான எண்ணங்களும் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் மற்றும் குடியுரிமை பற்றிய போராட்ட அனுபவம் குறித்து
எழுதிய சிறுகதைதான் அவருடைய முதல் படைப்பு. அது பிரசுரிக்கப்பட்டது கவிஞர் K.C.S. அருணாச்சலம் நடத்திய பத்திரிகையில் முதன்
முதலில் வெளிவந்தது.
ஏறக்குறைய சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு
எழுதத் தொடங்கிய தோழர் கு.சின்னப்ப பாரதி அவர்கள் இன்றுவரை எழுத்துலகுக்கு அவருடைய
பங்களிப்பை பல்வேறு வழிகளில் தொடர்ந்து வருகிறார். இவருடைய படைப்புகள்
13 க்கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வர்க்கப் போராட்டம், அவர்களின் தினசரி சிரமங்களை வெளிக்கொணர்வதும்
அவர்களது மேம்பாட்டுக்கு வழி தேடுவதும்தான் அவரது எழுத்தின் நோக்கம் என்று கூறுகிறார்.
அதை அவருடைய ஒவ்வொரு படைப்புகளிலும் உணர முடியும்.
கொல்லிமலையில் வாழும் மக்களின் சிரமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட
புதினம் "சங்கம்". பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல்
தமிழ் புதினம் என்ற சிறப்பு இதற்கு உணடு. இதற்காக 1986 இல் சென்னை இலக்கிய சிந்தனை அமைப்பு விருது
வழங்கி கௌரவித்துள்ளது. கிராமங்களில் மழையை எதிர்
நோக்கியுள்ள சாதாரண விவசாயிகளின் வாழ்க்கை, நிலவுடமை சமுதாயத்தில் கொத்தடிமைகள் நிலை
குறித்து எழுதிய புதினம் "தாகம்" இதுவரை ஏழு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கரும்பு விவசாயிகளின் போராட்டம்
பற்றி கூறும் புதினம் "சர்க்கரை". மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுரங்கத்
தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களைப் பற்றி பேசும் புதினம் "சுரங்கம்" 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்காக மேற்கு வங்கத்தில் உள்ள
சுரங்கத் தொழிலாளர்களுடன் தங்கி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து புதினத்தை
எழுதியுள்ளார். பெண்ணடிமைத்தனம் காதல் உள்ளிட்டவற்றை விளக்கும் புதினம் "பவளாயி". இது ஆறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. "தெய்வமாய்
நின்றான்", "கிணத்தோரம்"
காவியத்தையும் எழுதியுள்ளார். இதுமட்டுமல்லாமல்
கவிதைகள், கட்டுரைகள்
என அவருடைய முத்திரையைப் பதித்தவர்.
இவர் திரைத்துறையில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களை நண்பர்களுடன்
இணைந்து எடுத்திருக்கிறார். அந்த காலத்தில் நடிகரும் நண்பருமான டி.கே.பாலச்சந்தர்
கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்க கூடியவர். அவருடன் சேர்ந்து சில நண்பர்களை இணைத்து
முதன்முதலில் ஒரு மலையாளப்படம் அன்றைய மலையாள திரை
நட்சத்திரம் பிரேம் நசீரை வைத்து எடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு 50 ஆயிரம் மானியம் கிடைத்துள்ளது. வெற்றிகரமாக
படத்தையும் வெளியிட்டுள்ளார். அடுத்தபடியாக மேலும் பல நண்பர்களை இணைத்து ஒரு தமிழ்
படம் எடுத்திருக்கிறார். தணிக்கை முடிவடைந்து ஆனால் வணிக ரீதியாக கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது என்பது தமிழ்த் திரைதிரையுலகின்
துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். மலையாள படத்தின் பெயர் "பொய் முகங்கள்" தமிழ் படத்தின் பெயர் "புதிய அடிமைகள்".
இடதுசாரி இயக்கத்தற்கு நம்பிக்கையூட்டும் விதமாக இலக்கியப் பணியாற்றிவரும் "செம்மலர்" பத்திரிக்கையின் வெளியீட்டாளராகவும் முதல்
ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும்
கலைஞர்கள் சங்கத்தின் உதவி தலைவர், செயற்குழு உறுப்பினர், மாநிலக்
குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவர் பல்வேறு விருதுகளையும்
பெற்றிருக்கிறார். மூன்று முறை ஈரோடு மக்கள் சிந்தனையாளர் விருது, இரண்டு முறை இலக்கிய சிந்தனை விருது, தமிழ்ச்சான்றோர் விருது, கலைஞர் விருது, கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது என மேலும் பல்விருதுகளைப்
பெற்றிருக்கிறார். "இந்திய
இலக்கியத்தில் சின்னப்ப பாரதியின் பங்களிப்பு" என்ற புத்தகமே வெளிவந்துள்ளது. அதில்
இந்தியாவிலுள்ள பல புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்களால்
கருத்துரைக்கப்பட்டு பாராட்டப்பட்டவர்.
வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு தேவையான
அறிவுரைகளையும், பாராட்டுக்களையும்
வழங்கி அவருடைய பங்களிப்பை இன்றுவரையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். விருதுகள்
பெரும்பாலும் "வழங்கப்படுவதற்கு" பதிலாக "வாங்கப்படுகிறது" என்று கூறுபவர். "கு.சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு
அறக்கட்டளை" என்னும்
பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி அதன்மூலம் புதினம், கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிற்றிதழ்கள், நாடகம், கவிதை மற்றும் சிறந்த பத்திரிகையாளர்கள் ஆகிய
துறைகளில் துறைக்கு ஒரு பரிசாக ஆண்டுதோறும் "வழங்கி" கௌரவித்தும் வருகிறார்.
தற்போது அவருடைய முதுமைக் காலத்தை அவரின் இணையரின் பெயரிலான “செல்லம்மாள்”
இல்லத்தில் இணையர், மகள்கள்
கல்பனா, பாரதி
மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழ்ந்து இளம் எழுத்தாளர்களுக்கு
முன்னுதாரணமாய் திகழ்கின்றார்.
வெளிவந்துள்ள நூல்களின் பட்டியல்
புதினங்கள்:
# தாகம்
# சர்க்கரை
# பவளாயி
# சுரங்கம்
# சங்கம்
# கௌரவம்
# பாலை நில ரோஜா
மற்ற படைப்புகள்
# தெய்வமாய்
நின்றான்
# கடவுள் இருக்கும்
இடம்
# சொல்லும்
செயலும்
# நீதி
குட்டி கதைகள்
# சேவலும்
மண்புழுவும் குட்டி கதைகள்
# நான்கு
கவிதைத் தொகுப்புகள்
# 1955 இல்
வெளிவந்த நிலவுடமை
#1958ல் கிணத்தோரம் சின்னப்பபாரதியின் கவிதைகள்
# வாழ்க்கை
வரலாறு என் பணியும் போராட்டமும்.
பெற்ற பரிசுகள்/ விருதுகள்
# இரண்டு
முறை இலக்கிய சிந்தனை விருது
# தமிழ்ச்சான்றோர்
விருது
# ஈரோடு
மக்கள் சிந்தனை யாளர் விருது மூன்று முறை
# கலைஞர்
விருது
# கோவை உலகத்
தமிழ் பண்பாட்டு மைய விருது