தொகுப்பு: இதயநிலவன்
கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனும் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் கு. நிருபன் குமார் அவர்கள் 06.11. 1983 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்தார். பெற்றோர் சி.குணசேகரன், கு.லீலாவதி.
தனது பள்ளிப் படிப்பை தேனி மாவட்டம் கூடலூர் N.S.K.P மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அதன் பின் இளங்கலை தமிழ் இலக்கியத்தை (2004) புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் முடித்தார். அதன் பின் முதுகலைத் தமிழை (2006) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார். 2007 ஆம் ஆண்டு தமிழ் பண்டிட் பயிற்சியை தஞ்சை ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பயின்று, ஒரு பிரபல பத்திரிகையில் உதவி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அதன் பின் தன் சொந்த ஊரில் உள்ள திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய இவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012) தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி தமிழாசிரியராக பணி புரிந்து வருகிறார்.
2013 சரண்யா என்பவருடன் திருமணமாகி, பிரணவ், அன்வித் என இரு மகன்கள் உள்ளனர்.
கல்லூரிக் காலங்களில் கவிதைப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை என்பது என்ன? அதை எவ்வாறு சிந்திப்பது? கவிதைக் கருவை எவ்வாறு எழுதுவது? எனும் பயிற்சி பெற்று கடந்த 19 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் தனது கவிதைக்கான குருவாக த.பழமலய் அவர்களைக் கொண்டாடுகிறார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - கம்பம் கிளையின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். எழுத்தின் வேரை இங்கு இவர் கண்டார் எனலாம். தோழர் அய். தமிழ்மணியை இலக்கிய வழிகாட்டியாகக் கொண்டுள்ளார். அனுபவம் கை கொடுத்தாலும் தொடர் வாசிப்பு தான் ஒருவரை நல்ல எழுத்தாளனாக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நிருபன் குமார், கல்லூரி காலத்திலிருந்தே தொடர்ந்து வாசித்து வருகிறார்.
கல்லூரி கால கட்டங்களில் எழுத்துலக ஜாம்பவான்களான ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், அசோகமித்திரனின் 18 ஆவது அட்சக்கோடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, க.நா.சு.வின் பொய்த் தேவு, சு.வேணுகோபாலின் கூந்தப்பனை போன்ற படைப்புகள் இவரை சாதாரண ஜனங்களின் வாழ்க்கை குறித்த புரிதலுக்கு இட்டுச் சென்றன.
கவிஞர் நிருபன் குமார் கவிதைகள் மட்டுமல்லாமல், பல இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார். இவருடைய பாடல்களில் உதிரக் காடே , தேனி தெக்க, வேலுநாச்சியார் உள்ளிட்ட பல பாடல்கள் சிறப்பானவைகளாகக் குறிப்பிடலாம்.
எழுத்தாளர் நிருபன் குமார் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு 2019 ஆம் ஆண்டு “இறகின் வெளி” என்ற தலைப்பில் நண்பர்கள் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த கவிதை நூல்களும் வெளிவந்தன. மேடை ஏறி கவிதை வாசித்தலில் தான் என்னாலும் எழுத முடியும் எனும் தன்னம்பிக்கையை இவர் வளர்த்துக் கொண்டார். அதை இவருக்கு தமுஎகச மேடை அமைத்துக் கொடுத்தது எனலாம்.
வெளிவந்துள்ள நூல்கள்
1. இறகின்
வெளி
2. நிறப்பிரிகை
3. காத்தாடி
கனவுகள்
4. நான் நீ ஒரு ஆகாயம்.
பெற்ற பரிசுகள்
1. பொதிகைத்தமிழ்ச் சங்கம்- திருநெல்வேலி - 2019 நடத்திய உலகக் கவிதை நூல் போட்டியில் இவரின் இறகின் வெளி எனும் கவிதை நூல் முதல் பரிசு பெற்றுள்ளது.