தொகுப்பு: கீதா பத்மநாபன்
“ஆசிரியன்
என்னும் பாத்திரம் என்னை ஆண்டது. தன் ஆணை வழி என்னை நடக்கச் செய்தது. அது என்னை அடிமைப்படுத்தியது. ஊனோடு, உயிரோடு, நாடி நரம்போடு, என் ஆன்மாவோடு, அகத்தின் அகத்தோடு, பின்னிப்பிணைந்து, இரண்டறக் கலந்து என்னை ஆட்டி வைத்தது” எனக் கூறும் புலவர் பாலசுப்பிரமணியன்
என்கிற சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 15.08.1934 இல் உசிலம்பட்டியில், முத்து மாயாண்டி பிள்ளை அவர்களுக்கும், செல்லம்மாள் அவர்களுக்கும் இரண்டாவது
மகனாகப் பிறந்தார். அவரது ஆரம்பக்
கல்வி சின்னமனூர் முஸ்லிம் ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, உசிலம்பட்டி, உத்தமபாளையம் மற்றும் புதுக்கோட்டை
வரை நீண்டது.
இவரது மனைவியின் பெயர் தனலெட்சுமி. 2021 ஆம் ஆண்டில் 76 வது வயதில் இயற்கை எய்தினார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்தவர் திருவள்ளுவன் பல் மருத்துவராக சின்னமனூரில் வசித்து வருகிறார். இளையவர் அண்ணாதுரை ஆர்க்கிடெக்ட் படித்து, தற்பொழுது கனடாவில் வசித்து வருகிறார்.
புலவர் அவர்கள் 25 வருடம் தமிழாசிரியராகவும் 5 வருடம் தலைமையாசிரியராகவும், மேலக்கால், குச்சனூர், கன்னிவாடி மற்றும் உத்தமபாளையம் போன்ற
இடங்களில் தம் ஆசிரியப் பணியை சீரிய முறையில் சிறப்பாகச் செய்து 1992ஆம் வருடம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சின்னமனூர் பாலசுப்பிரமணியன் அவர்கள் பெரிய ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் கூறும் புராணக் கதைகளைக் கேட்டு
வளர்ந்தார். ஐந்தாம்
வகுப்பு படிக்கும் பொழுதே பாலர் மலர், டம்டம், டமாரம், அணில் மற்றும் கல்கண்டு போன்ற சிறுவர் இதழ்கள் படிப்பதில் ஆர்வம்
கொண்டார். உயர்நிலைக் கல்வி பயிலும்பொழுது ஆரணி
குப்புசாமி முதலியார், வடுவூர்
துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் துப்பறியும் நாவல்களை விழுந்து விழுந்து படிப்பாராம்.
ஒருமுறை SSLC தமிழ் வகுப்பில் பாடநூலின் உள்ளே கதைப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கும்
பொழுது, நகைச்சுவைக்
காட்சி ஒன்றைப் படித்து, அவரையும் அறியாமல் உரத்த சத்தமிட்டு சிரித்து ஆசிரியரிடம் பிரம்படி
வாங்கிய அனுபவம் அவருக்கு உண்டு. அந்தளவுக்கு அவர் புத்தகம் வாசிப்பதில்
மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.
தனக்கு கிடைக்கும் பணத்தை வேறு எதற்கும் செலவு செய்யாமல் புத்தகம் வாங்கவே
செலவு செய்துள்ளார். அண்ணாவின் ஆரியமாயை
(தடை செய்யப்பட்ட புத்தகம்), விடுதலைப்போர், இலட்சிய வரலாறு, கலைஞர் கருணாநிதியின்
தூக்குமேடை, கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை,
மோகினித்தீவு போன்ற புத்தகங்களை வாங்கிக் குட்டி நூலகம் ஆக்கி நண்பர்கள்,
தெரிந்தவர் இல்லங்களுக்குச் சென்று விநியோகித்துள்ளார்.
பிறகு அவரது வாசிப்புலகில் அகிலனும், டாக்டர் மு.வ.வும் இடம் பிடித்தனர். மு.வ.
அவர்களின் நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்துள்ளார். இவ்வாறாக இளமையிலிருந்தே அவரின் புத்தக
வாசிப்பு அவரை ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக
பரிணமிக்கச் செய்தது.
இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிகளில் மாணவர்களிடம் புத்தக வாசிப்பில்
ஆர்வத்தை தூண்டியதோடு மட்டுமல்லாமல்,
செயலில் இறங்கி, வகுப்பு நூலகம் என்ற திட்டத்தைப் பள்ளியில்
அறிமுகப்படுத்தி மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளார்.
புத்தகம் வாங்குவது ஒரு செலவு அல்ல அது அறிவுக்கும், பண்புக்கும், மகத்தான
எதிர்கால வளர்ச்சிக்குமான ஒரு ஒப்பற்ற
முதலீடு என்னும் உண்மையை மாணவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் அறிவு,
பண்பு, சிந்தனை, பேச்சு அனைத்தும் நலன் பெற்று விளங்க தூண்டுகோலாய் இருந்துள்ளார்.
ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சின்னமனூர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, சொந்தச் செலவில் சிறுவர் நூல்கள் வாங்கி, சின்னமனூரில் உள்ள அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார். சின்னமனூரில் ரோட்டரிக்குச் சொந்தமான
கட்டிடத்தை மராமத்து செய்து, “அப்துல் கலாம் ரோட்டரி நூலகமாக” மாற்றி தன் வாழ்நாளில் தான் சேர்த்த
அத்தனை நூல்களையும் அந்நூலகத்திற்கு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்னமனூரில் உள்ள
அரசு நூலகக் கட்டிடம் சிதலமடைந்து இருந்தது.
அதைச் சீர் செய்ய நிதி உதவியையும் மனமுவந்து
அளித்துள்ளார்.
புலவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுத ஆரம்பித்தது தன்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னரே.
இவருடைய 'அறிவியல்
நோக்கில் அமையட்டும் வாழ்க்கை' என்ற முதல் புத்தகம் 2000 ஆவது ஆண்டு வெளியானது. இப்புத்தகத்தில் ஜாதகம், ஜோசியம், ஆரூடம் இவையெல்லாம் அறிவியல் நோக்கில்
இல்லை என வெவ்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
இவருடைய "தமிழ் நம் மொழி செம்மொழி", “அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள்” மற்றும் "தமிழ் மண்ணே அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு" என்ற புத்தகங்கள் 2008 இல் வெளிவந்தன.
‘தமிழ் நம்
மொழி செம்மொழி, என்ற நூலில் 3500 ஆண்டுக்கால இலக்கண மரபையும், 2500 ஆண்டுக்கால இலக்கிய மரபையும் கொண்டது
தமிழ் மொழி எனவும் 'ஈராயிரம்
ஆண்டுகளாக லத்தீன், கிரேக்கம், அரபு, சீனம், பிரெஞ்சு, இந்தி, சமற்கிருதம், உருது, ஆங்கிலம் உள்ளிட்ட 27 மொழிகள் தொடர்ந்து தாக்கிய போதும், அவற்றை எல்லாம் உட்கொண்டு செரிப்புற்று, உயிர்ப்புற்று, இன்னும் தன்னிலையில் மாறாது நிலைத்து
நிற்பதுமானதும், வளர்ந்து
வரும் அறிவியல் உலகிற்கு ஏற்றவாறு தன்னை வளப்படுத்திக் கொள்வதுமான மொழி, பிறமொழிக் கலப்பின்றி தானே தனித்து
இயங்கவல்லதுமானது தமிழே' என ஐயம் திரிபர எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவித்திடக் கோரி, 2000 ஆவது ஆண்டு தில்லியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டவுடன் தமுஎசவும்,
நடுவண் அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து 2008 பிப்ரவரி 17 முதல் 24 வரை சங்க இலக்கிய வாரம் என அறிவித்து, மக்களிடம் சங்க இலக்கியத்தைக் கொண்டு
சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தமுஎசவுடன் இணைந்து, தனது 73 வயதிலும் புலவர் பாலசுப்பிரமணியன் அவர்கள்
களத்தில் இறங்கி உழைத்தார். அத்தோடு மட்டுமல்லாமல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
அமைய ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.
‘தமிழ் மண்ணே
அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு’ என்ற புத்தகத்தில் இந்து மதத்தில் பின்பற்றப்படும் வர்ணாசிரமத்தையும், மனு நீதியையும் எதிர்க்கிறார். மதத்தின் உள்ளே இருந்து கொண்டு அதன்
கொடுமையான சட்டதிட்டங்களை கேள்வி கேட்கிறார்.
மனுநீதியால் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளான பெண் சிசுக்கொலை, நரபலி, குழந்தை மணம், சதி, கைம்மை, தேவதாசி முறை போன்றவைகளால் அவர்கள்
அனுபவித்த கொடுமைகளை அடுக்கியுள்ளார். இந்து மதம் மட்டுமல்லாது கிறித்துவ
மதத்திலும், மத பீடங்களால்
ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் கலிலியோ இவர்கள் பட்ட பாட்டையும் எடுத்துரைத்துள்ளார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூலம் மொழி ஆதிக்கம், பெண்ணடிமை மற்றும் வர்ணாசிரமத்தை அறுவைச்
சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்கிறார். மேலும் மதத்தின் பெயரால் நடந்த அத்தனை
கொடுமைகளுக்கும், போப்பாண்டவர்
போல் இந்து மதம் பகிரங்கமாக உலகறிய மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
புதுக்கோட்டை தமுஎச நடத்திய கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு வந்த 400 சிறுகதைகளில் புலவர் எழுதிய "நீயுமா.......ராமா" என்ற கதை இரண்டாம் பரிசு பெற்றது. ”சமத்துவபுரம்” என்ற சிறுகதை சின்ன பாலு என்ற பெயரில்
தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்தது.
‘அண்ணாவைச்
செதுக்கிய அரிய தருணங்கள்’ புத்தகத்தில், அண்ணாவின் வாழ்வில் 1935 முதல் 1967 வரை அவரது வாழ்வில் நடந்த சுவாரசியமான
சம்பவங்கள் சுவைபட அழகுத் தமிழில் கோர்க்கப்பட்டுள்ளது.
தன் வாழ்நாள் முழுதும் மாணவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்துவதையே முதன்மை
பணியாகக் கொண்டு, தான் பணி ஓய்வு பெறும் நாளன்று, ஒரு சிறு தொகையை இந்தியன்
வங்கியில் பள்ளியின் பெயரில் வைப்புத்தொகை வைத்து அவ்வட்டியிலிருந்து வகுப்பு
நூலகத்திற்கு நூல்கள் வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த வயதிலும் பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், ரோட்டரி
நண்பர்களுடன் சேர்ந்து தாய் மெட்ரிகுலேசன் பள்ளியையும் திறம்பட நடத்தி, வயது
எண்ணிக்கையில் இல்லை மனதில் என நிரூபித்து வருகிறார்.
வெளிவந்துள்ள படைப்புகள்
·
அறிவியல் நோக்கில் அமையட்டும் வாழ்க்கை
– 2000வது ஆண்டு – மணிமேகலைப் பிரசுரம்
·
அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் – 2008 வது ஆண்டு – செவீ
பதிப்பகம்
·
தமிழ் நம்மொழி செம்மொழி – 2008 வது ஆண்டு – செவீ பதிப்பகம்
· தமிழ் மண்ணே அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு – 2008 வது ஆண்டு – செவீ பதிப்பகம்
பெற்ற பரிசுகள்
·
கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில்
இரண்டாம் பரிசு