‘நெல்சன் மண்டேலா’ சிறையில் இருந்த பொழுது கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய இக்கவிதை மிகவும் பிரபலமாகி இலக்கிய வட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
“கருப்பு ஆட்சிக்கு வரும்
இன்று அந்தியிலும்
நாளை ஆப்பிரிக்காவிலும்”
திரு. தங்கம் மூர்த்தி அவர்கள் கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், கல்வியியல் விமர்சகர், இலக்கியவாதி, சொற்பொழிவாளர், நிறுவனர், மற்றும் சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
புதுக்கோட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கல்வி
மற்றும் சமூக அறக்கட்டளையின் அங்கமான “ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி”யின் தாளாளர் மற்றும் முதல்வராகவும் தங்கம் மூர்த்தி
அவர்கள் பணியாற்றி வருகிறார். கல்வியாளரான தங்கம் மூர்த்தி அவர்களுக்கு இயல்பிலேயே
இலக்கியம் மீதிருந்த ஆர்வத்தைத் தொடர்ந்து கவிதைகள், குறிப்பாக ஹைக்கூக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு தனது முதல் நூலான “முதலில் பூத்த ரோஜா” என்ற ஹைக்கூக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
இவர் கவிதைகளில் வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி
இருக்கும். மனிதர்களின் பல முகங்களை எழுத்தோவியமாய்
கவிநடையில் அனுபவிக்கத் தரும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இமைக்கா இரவுகளின் தூங்கா நினைவுகள் தரும் பாடங்களை
கவிதைகளாய் வடித்து நூலாய் வெளியிட்டுள்ளார். தனது ஹைக்கூக் கவிதைகளை “மழையின் கையெழுத்து – “சைன் ஆப் ரெயின்” என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும்
வெளியிட்டுள்ளார்.
கவிஞர் கந்தர்வன் தலைமையேற்ற கவியரங்கில் இவர்
முதன் முதலில் அறிமுகமாகி தன் வாய்ப்பினை நிறைவு செய்தவுடன் அரங்கம் அதிர பலத்த
கைத்தட்டல்களோடு கவிஞர் கந்தர்வனின் பாராட்டையும் பெற்றார். அந்நிகழ்வு தங்கம் மூர்த்தி அவர்களுக்கு தந்த
ஊக்கத்தினைத் தொடர்ந்து கவிஞர் சுரதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் பாலா, கவிஞர் சிற்பி, கவிஞர் மு.மேத்தா, பேராசிரியர் அப்துல் காதர், கவிச்சுடர் கவிதைப்பித்தன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், பிச்சினிக்காடு இளங்கோ, மணலி சோமன், மரபின் மைந்தன் முத்தையா, நெல்லை ஜெயந்தா என அனைவரது கவியரங்கங்களிலும்
பங்கேற்றுள்ளார். பின்னர் ஏராளமான கவியரங்கங்களைத் தலைமையேற்று
சிறப்பாக நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு கவியரங்க மேடைகளில் ஆற்றிய கவிதைகளைத் தொகுத்து “கவிதையில் நனைந்த காற்று” என்ற நூலை 2012 இல் வெளியிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி தமிழ்ப் பிரிவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பாற்றியுள்ளார். திரு. தங்கம் மூர்த்தி அவர்களின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகள், ‘மதுரை காமராஜர்’ பல்கலைக்கழகம் மற்றும் ‘மனோன்மணீயம் சுந்தரனார்’ பல்கலைக்கழக பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
மொழியின் சாத்தியங்களை மட்டும் சார்ந்து நகராமல் தனது தனிப்பட்ட, தெளிவும் அழகிய எளிமையும் மிக்க மொழியில் நவீன தமிழ் கவிதையின் வெகு மக்களுக்கான வடிவத்தைத் தன் கவிதைகளில் வழங்கி வருகிறார் திரு. தங்கம் மூர்த்தி அவர்கள். கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இலக்கிய விழாக்கள், தனிச்சொற்பொழிவு, தொலைக்காட்சி மற்றும் இணைய வழி நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்றும் வருகிறார்.
நேர்படப் பேசுகிற இவரின் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, மலாய் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை இயற்றியுள்ளார். இவரின் கவிதைகள் தனிமனிதனின் தாகத்தை
வளர்ப்பதைவிட சமுதாயத்தின் அறிவுத் தாகத்தை வளர்க்கும் விதமாகப் புனையப்பட்டுள்ளது
தனிச் சிறப்பு.
வெளிவந்துள்ள நூல்கள்
1. முதலில் பூத்த ரோஜா, ஹைக்கூ கவிதைகள், 1994
2. தங்கம் மூர்த்தி கவிதைகள், 2004
3. பொய்யெனப் பெய்யும் மழை, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், 2005
4. என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து, 2010
5. கல்வி கரையில, கல்வி பற்றிய கவிதைகள், 2010
6. கவிதை வெளியினிலே, 2011
7. மழையின் கையெழுத்து, 2016
8. கவிதையில் நனைந்த காற்று, 2016
9. ஹைக்கூ 100, மேன்மை வெளியிடு,
2017
10. தேவதைகளால் தேடப்படுபவன், 2017
11. அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள், 2017
12. கூடு திரும்புதல் எளிதன்று, 2021
விருதுகள்
v தேசிய நல்லாசிரியர் விருது, 2013
v மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 2008
v தமிழக முதலமைச்சர் அவர்களால் “தமிழ்ச் செம்மல்” விருது, 2017
v தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - “தேவதைகளால் தேடப்படுபவன்”, 2017
v கவிமுகில் அறக்கட்டளையின் விருது – “தேவதைகளால் தேடப்படுபவன்”, 2021
v கவிக்கோ விருது
v செல்வன் காக்கி விருது
v கவிஞர் சிற்பி விருது
v ‘கவிதை உறவு’ வழங்கிய விக்கிரமன் விருது
v காரைக்குடி தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது
v பெஸ்ட் மேன் ஆப் பொயட்ரி அப்ரோச்சஸ் அவார்டு, 2003
v சாதனையாளர் விருது, 2005
v சிறந்த சமூக சேவகர் விருது
v “மக்கள் நல கவிஞர்” என புதுக்கோட்டை இலக்கியப்பேரவை வழங்கிய பட்டம்