Jul 31, 2021

எழுத்தாளர் அப்பணசாமி

 தொகுப்பு: பிரேமாவதி நீலமேகம்

            ”12 வயதிலேயே வாசிப்பு பழக்கம் ஏற்பட்டு விட்டாலும் நான் ஒரு எழுத்தாளன் ஆவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் எழுதுவது ஒன்னும் பிரம்ம சூத்திரம் இல்ல... எழுதுங்கோ....’  என்று நைனா கி. ராஜநாராயணன் அவர்கள் கூறியதுதான் எழுதும் துணிச்சலை எனக்கு அளித்தது” என்கிறார் ’கொடக்கோனார் கொலை வழக்கு’  நாவலாசிரியர் மூ. அப்பணசாமி.

            27-5-1961இல் எட்டையபுரத்தில் மாரியம்மாள் - மூக்கையா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த அப்பணசாமி அவர்கள் குடும்பம் அவரது நாலாவது வயதில் கோவில்பட்டி நகருக்கு இடம் பெயர்ந்தது. சிறுவயதிலேயே குடும்பத்தில் அதிக வறுமை தாண்டவமாடியது. பள்ளி முடிந்து வந்ததும் அம்மாவுக்கு உதவியாக தீப்பெட்டிக் கட்டு ஒட்ட உதவி செய்ய வேண்டும். தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடிய அந்தக் காலத்தில் மணியாச்சி, மந்தித்தோப்பு என பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் சுமந்துவரவேண்டும். பல நாள்களில் ஒட்டிய தீப்பெட்டிகளை தீப்பெட்டி ஆபீசுகளுக்கு எடுத்துச் சென்று அளந்து கொடுத்த பிறகே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. மற்ற பையன்கள் விளையாடிக்கொண்டிருக்க அவர் மட்டும் தீப்பெட்டிக் கட்டு ஒட்ட வேண்டும். அந்த பசையின் நாற்றம் சகிக்க முடியாது.  இதனால் தப்பித்து தஞ்சம் அடைந்த இடம்தான் அவரின் வீட்டின் அருகில் ஒரு பழைய பிரமாண்டமான கட்டடத்தில் இயங்கி வந்த பொது நூலகம்.

            குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து நாள் முழுவதும் வாசிக்கத் தொடங்கியுள்ளார். கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், கல்கி, வல்லிக்கண்ணன் என பெயர் தெரியாமலேயே முக்கிய ஆளுமைகளின் படைப்புகளை வாசித்திருக்கிறார். இப்படி 12 வயதில் தொடங்கிய தீவிர வாசிப்புப் பழக்கம் தனது சுவாசமாகவே மாறி விட்டது என்கிறார் அப்பணசாமி.

            உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, முத்துசாமி, ஓவியர் மாரீஸ், இளங்கோ (கோணங்கி) ஆகியோர் நண்பர்கள். நாறும்பூநாதன் வீட்டில் செம்மலர், தாமரை போன்ற இதழ்களும், ரஷ்ய இலக்கியங்களும் இருக்கும். நாறும்பூநாதன் மூலமாக இப்புத்தகங்களை நண்பர்கள் வாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

            மாணவர்களாக தீவிர இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டதைக் கண்ட கோவில்பட்டி மூத்த எழுத்தாளர்கள் பூமணி கிருஷி, தாமிரன் (பால்வண்ணம்), தேவதச்சன், கௌரிசங்கர், அப்பாஸ், ஜோதிவிநாயகம் ஆகியோர் இளைஞர்களை படைப்பிலக்கியத்தில் ஈடுபட ஊக்கப்படுத்தினர். இவர்கள் மூலம் கி. ராஜநாராயணன் அறிமுகம் கிடைத்தது. அப்போது கி.ரா. கொடுத்த ஊக்கத்தால் அப்பணசாமி எழுதிய முதல் சிறுகதை செம்மலர் மே 1981 இதழில் வெளியானது.

            இக் காலகட்டத்துக்கு சற்று முன்னர்தான் ராணுவத்தில் இருந்து திரும்பிய ச. தமிழ்ச்செல்வன் கோவில்பட்டி அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்திருந்தார். அவர் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை தொடங்கப்பட்டது. இது இலக்கியம், நாடகம், அரசியல் செயல்பாடுகள் என விரிவடைந்தது.

            குடும்ப சூழல் காரணமாக கல்லூரிக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது நடைபாதை வியாபாரம் செய்து வந்த அப்பாவுக்கு உதவுவதற்காக படிப்பைக் கைவிட வேண்டி இருந்தது. ஆனாலும் வாசிக்கும் பழக்கத்தையோ தோழர்களுடனான நட்பையோ விட முடியவில்லை. வியாபாரமாஇலக்கியமா இரண்டில் ஒன்றை முடிவு செய்வதற்கிடையில் பெரும் போராட்டம்.

            குடும்பத்தில் இருந்து விலகி அவ்வப்போது ஏதாவது வேலை பார்ப்பது, ஊர் சுற்றுவது என சில ஆண்டுகள் அலைந்துள்ளார். அப்போது  பேக்கரி, மிலிட்டரி ஹோட்டல், செருப்புக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, கிளினிக் கம்புவுண்டர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

      தலையில் ஜவுளிமூட்டை சுமந்து, ஊர் ஊராக சென்று விற்பது, நகர் மன்றம் சார்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, பசி தாளாத காலத்தில் சுமை கூலி, லாட்டரிச் சீட்டுக்களை விற்பது போன்ற வேலைகளையும் செய்துள்ளார்.

       இறுதியில் 1986இல் சென்னையில் பட்டணம் பிழைக்கக் குடியேறினார். ஊடகவியலாளராக விகடன் குழுமம், தினமணி, முரசொலி, தீக்கதிர், சன் தொலைக்காட்சி செய்திப்பிரிவு, ராஜ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஆறாம் தினை இணைய இதழ் போன்றவை குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

            கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறையில் பங்கெடுத்து வருகிறார்.  2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் பிரிவு ஆலோசகராக பணியாற்றுகிறார். அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.

            ஏற்கனவே நாடக அனுபவம் இருந்ததால் சென்னையிலும் சென்னைக் கலைக் குழு, பல்கலை அரங்கம், ஆடுகளம், கோலம் போன்ற அரங்க அமைப்புகளிலும் பங்கெடுத்துள்ளார். தூக்கிலிடப் பட்டதாலேயே நாங்கள் மரணிக்கவில்லை’, ‘தயாபோன்ற நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.

            ஊடகவியலாளராக ஃப்ரண்ட்லைன் உள்ளிட்ட இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வி, சமூகம், அறிவியல், கலை – இலக்கியம், வரலாறு, மனித உரிமைகள், சூழலியல் குறித்து 500க்கும் அதிகமான கட்டுரைகள், தொடர்கள் எழுதியுள்ளார். தவிர சுமார் 30 புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

            ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை அடிமை முறையைத் தகர்க்க சீனிவாசராவ் தலைமையில் அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த வாய்மொழி வரலாறு தென்பறை முதல் வெண்மணி வரைஎன்ற நூலாக வெளியானது (2004). இதுவே அவரின் முதல் நூலாகும்.

            இலக்கியவாதியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினாலும் வாழ்க்கைச்சூழல் காரணமாக புனைவுகளில் ஈடுபடமுடியவில்லை. இவரது முதல் நாவல் ‘கொடக் கோனார் கொலை வழக்கு’ 2016 இல் வெளியாகி புதிய தலைமுறை வாசகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் கவனம் பெற்றுள்ளது.

            2010 இல் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இணைய இதழானஆறாம் திணையில் ஆசிரியராகப் பணியாற்றி, பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மின்னம்பலம் இணைய இதழில் காபி எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.

            இவரது வாழ்வும் பணியும் குறித்த ஆவணப்படம் ஒன்றை ‘காற்றின் திசை வழி பறந்தலையும் கலைஞன் (2016)’ எனும் பெயரில் எழுத்தாளர் உதயசங்கர் இயக்கி தயாரித்துள்ளார்.

    இவரது இணையர் பா. ஜீவ சுந்தரி ஓர் ஊடகவியலாளர், எழுத்தாளர், பெண் மைய ஆய்வாளர், பெண்ணியச் செயல்பாட்டாளார்.

பெற்ற பரிசுகளும், விருதுகளும்

·         SRV குழும சமயபுரம் பள்ளி சார்பில் முதல் படைப்பூக்க விருது (2010)

·         கொடக்கோனார் கொலை வழக்கு நாவலுக்கு கலை இலக்கிய மேடை விருது (2016)

·         பயங்கரவாதி என புனையப்பட்டேன் மொழியாக்க நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில குழு விருது (2017)

·         பேர் சொல்லும் நெல்லைச் சீமை - உள்ளூர் அரசியல் வரலாற்று நூலுக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழு விருது (2016)

வெளிவந்துள்ள நூல்கள்

கல்வி

1) கல்வி காவி மயமாகும் அபாயம். (இந்திய மாணவர் சங்கம், 2016)

சிறுவர் இலக்கியம்

1) மிக்சர் வண்டி (தொகுப்பு), வெளியீடு: எய்ட் இந்தியா, 2006

2) அதிசய அன்னப் பறவை, எய்ட் இந்தியா வெளியீடு:, 2008

வரலாறு

1) பரம்பரை- வெளியீடு: பாரதி புத்தகாலயம், 2005

2) பேர் சொல்லும் நெல்லைச் சீமை - வெளியீடு: நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம், 2015

3) கோசம்பி : இந்திய வரலாற்றாசிரியர்களின் ஆசிரியர் (Reader) – அச்சில்

வாய்மொழி வரலாறு

1) தென்பறை முதல் வெண்மணி வரை, வெளியீடு: பாரதி புத்தகாலயம், 2005

நேர்காணல்

1) பதில்களில் மட்டும் இல்லை விடை, வெளியீடு: போதிவனம் பதிப்பகம், 2009

நாவல்

1) கொடக்கோனார் கொலை வழக்கு, எதிர் வெளியீடு (2016)

சிறுகதை தொகுப்புகள்

1) அனாந்தரம் - வெளியீடு: அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர், 2004

2) பேனா தொலைந்து போனது - வெளியீடு : பாரதி பதிப்பகம், 2009

நாடகம்

1) தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் கொல்லப்படவில்லை, (பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் வாழ்வும் பணியும் குறித்த ஓராள் நாடகம்) புதுவிடை 2012

2) கூத்தாடிகள் ஊரில் கோமாளி ராஜா (தொகுப்பு), அப்பணசாமி, 2017 (வெளிவரவில்லை)

3) தயா சிறுவர் நாடகம் (எம். டி. வாசுதேவன் நாயர் சிறார் நாவல்  அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடகம்) (வெளிவரவில்லை)

4) சங்கராச்சாரி யார்? (வெளிவரவில்லை)

மொழிபெயர்ப்பு நூல்கள்

கல்வி

1) எவ்வாறு குழந்தைகள் கற்கிறார்கள்? ஜான் ஹோல்ட் 

2) டேஞ்சர்: ஸ்கூல்

3) கல்வி: சமூக மாற்றத்துக்கான கருவி - சுசேதா மஹாஜன்

சிறுவர் இலக்கியம்

1) காற்றின் அற்புத உலகம், வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், 2010

2) காட்டிலே ஒரு குளம் - உமா ஆனந்த், வெளியீடு நேஷனல் புக் டிரஸ்ட்

3) ரகசியப் பயணி - மெலானி செக்யூயிரா, வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், 2010

4) ராஜாவும் ஜிம்மியும், வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், 2010

மானுடவியல்


1)  கொங்கு குடியானவர் வாழ்க்கை, பிரண்டா ஈ.எஃப் பெக், அடையாளம் வெளியீடு, 2017 


அரசியல்


1) பகத் சிங்: இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய முதல் போராளி - பி.எம்.எஸ்.க்ரேவால், வெளியீடு: வ.உ.சி. நூலகம், 2008.


2) வகுப்புவாதம்: ஓர் அறிமுக நூல் - பிபன் சந்திரா, வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், 2011

3)  பாபர் மசூதி இடிக்கப்பட்டது சரியா?, வெளியீடு: நக்கீரன் பதிப்பகம், 2004


4) ஏகாதிபத்தியம் - லெனின் - வெளியீடு: பாரதி புத்தகாலயம், 2005


5) தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து - கார்ல் மார்க்ஸ், ஃப்ரடரிக் ஏங்கல்ஸ் எழுத்துகள் - தொகுப்பு: இஜாஸ் அகமது, வெளியீடு: பாரதி புத்தகாலயம்,


6) நாமசூத்திரர் இயக்கம் – சேகர் பந்தோபாத்தியாயா, வெளியீடு : புலம், 2014


7) பயங்கரவாதி என புனையப்பட்டேன் – மொகமது ஆமீர் கான், நந்திதா ஹஸ்கர், எதிர் வெளியீடு, (2016)


மேற்பார்வை


1) ஜோதிராவ் பூலே எழுத்துகள் - தொகுப்பு: ஜி. பி. தேஷ்பாண்டே - மொழிபெயர்ப்பு : மேற்பார்வை: அப்பணசாமி