தொகுப்பு : சி.பி. மல்லிகா பத்மினி
”உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது” என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஜா.மாதவராஜ் ஒரு சிறந்த எழுத்தாளர். வாசகனை தனது எழுத்துகளோடு இறுகக் கட்டிப் போடும் மாயவித்தை படைத்த மாதவராஜ் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்லாது, தொழிற்சங்க செயற்பாட்டாளர், கவிஞர், ஓவியர், மேடை பேச்சாளர் என பன்முகத்திறமை படைத்தவர்.
ஜானகிராம்- தெய்வ ஜோதி தம்பதியினருக்கு 1.11.1961 அன்று மூன்றாவது குழந்தையாக பிறந்தார் மாதவராஜ். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. இவரது பூர்வீகம் திருச்செந்தூர் அருகே உள்ள செங்குழி என்கிற சிற்றூர். இவர் பிபிஏ பட்டப்படிப்பை திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரியில் முடித்தார். காதல் மணம் புரிந்தவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றும் இவரின் இணையர் காதம்பரி, ஞானபீட விருது பெற்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மூத்த மகளாவார். இவர்களது மகள் ஜோதிஷ்னா விஜய் டிவியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர். மகன் நிகில் குமார் அனிமேஷன் படித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு கிராம வங்கியில் (முன்பு பாண்டியன் கிராம வங்கி) பணிபுரிந்து ஏப்ரல் 2021 இல் ஓய்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
அப்பாவைப் பெற்ற ஆச்சியிடம் கேட்ட மகாபாரதக் கதைகள் சிறுவயதில் மாதவராஜை பெரிதும் ஈர்த்தன. தினத்தந்தியின் கன்னித்தீவு, அம்புலிமாமா, காமிக்ஸ் என நீண்டு கதை படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. கல்கண்டு பத்திரிகையில் வெளிவந்த தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் தொடங்கி சாண்டில்யன், ஜெகசிற்பியன் ஆகியோரின் வரலாற்று கதைகள் மீதும் நாட்டம் கொண்டு, சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, பாலகுமாரன் போன்றோரின் தொடர் கதைகளின் வழியே வாசிப்பின் வேகமும், தாகமும் கூடியது. தொடர்ந்து மு.மேத்தா, அப்துல் ரகுமான், நா. காமராசன், வைரமுத்து போன்றோரின் வரிகளில், எழுத்துக்களின் வீரியத்தையும் அடர்த்தியையும் சுகித்துள்ளார்.
கல்லூரி நூலகத்தில் படித்த இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப்புனல்" இவரை தகிக்க வைத்து எழுதத் தூண்டியது. 1980 இல் கல்லூரி மலர்களில் எழுதத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தீபம், கணையாழி பத்திரிகைகளில் இவரின் கவிதைகள் வெளிவந்தன.
பாண்டியன் கிராம வங்கியில் ஊழியராகச் சேர்ந்து, பின்னர் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு எழுத்து மீதான ஆர்வம் அதிகமானது. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, எஸ்.ஏ.பெருமாள் போன்றவர்கள் மூலம் நிறைய புத்தகங்கள், சோவியத் இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாசிப்பு இவரின் எழுதும் ஆர்வத்தை மேலும் ஆழப்படுத்தியது.
1985 ஆம் ஆண்டு செம்மலரில் வெளிவந்த "மண்குடம்" என்கிற இவரது முதல் சிறுகதை படைப்பே "இலக்கிய சிந்தனை" பரிசை தட்டிச் சென்றது. தாகத்துக்கு எப்போதும் விக்கி கொண்டிருப்பதாய் அடி குழாய்களின் சத்தம் கேட்கும் சாத்தூர் தான் 'மண்குடம்' சிறுகதையாய் வெளிப்பட்டது என்கிறார். எழுத்தாளர் கந்தர்வன் சாத்தூர் வந்தபோது, கையை பிடித்து முத்தம் கொடுத்ததையும்,. கோவில்பட்டிக்கு போயிருந்தபோது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தேடிவந்து 'நீங்கதான் மாதவராஜா?' எனக் கேட்டு தட்டிக் கொடுத்ததையும், கணையாழியின் கடைசிப் பக்கத்தில் மண்குடம் கதை குறித்து சுஜாதா சிலாகித்து எழுதியதையும் தமக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரங்களாகக் கருதுகிறார். தொடர்ந்து இவருடைய படைப்புகள் செம்மலர், குமுதம், இதயம் பேசுகிறது, விழுது , விசை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
இவரின் முதல் சிறுகதை தொகுப்பு "இராஜகுமாரன்" 1993 இல் வெளியானது. ஜெயகாந்தன் அவர்கள் அடுத்தவரின் படைப்புக்கு முன்னுரை எழுதிய ஒரே நூல் இதுவாகும். தற்போதுவரை இவரது 12 நூல்கள் வெளியாகி விட்டன. எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் இவரின் எழுத்துக்களை பின்வருமாறு சிலாகிக்கிறார். "மாதவராஜ் எழுத்துக்கள் கிறங்க வைக்கும் மெட்டில் ஒலிக்கும் ஓர் இசைப் பாடல் மாதிரி இருக்கும். சேகுவேரா, மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள், உடன் சென்று பயணம் செய்த உயிர்த்தோழன் எழுதிய எழுத்துகள் போல் சிறகடிக்கும்".
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்களையும் மாதவராஜ் தயாரித்துள்ளார். சாலை பணியாளர்களின் பாடுகளைப் பற்றிய "இரவுகள் உடையும்" ஆவணப்படம் 2007 இல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய விருதுக்கான ஆவணப்பட குறும்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. "இது வேறு இதிகாசம்" என்கிற ஆவணப்படம், கீரிப்பட்டி தனித் தொகுதியில் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஊருக்குள் செல்கையில் இழிவு படுத்த பட்டதை பதிவு செய்கிறது. சாதியத்தை பாதுகாக்கும் வேலையை சமூகம் நுட்பமாக பெண்களின் தலையில் சுமத்தியிருப்பதையும் ஆவணப்படுத்துகிறார்.
"உலகை புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற, வலி, கோபம், சந்தோஷம் மற்றும் கனவுகளை சுமந்த ஒரு மனிதனின் பக்கங்கள் இவை; புரட்டலாம் வாருங்கள்" என்கிற கோட்பாட்டுடன் "தீராத பக்கங்கள்" என்ற பெயரில் வலைப்பூ ஒன்றினை 2008 இல் இவர் துவங்கினார். அதில் அவரின் இடுகைகளுக்கு வந்த சுவாரசியமான பின்னூட்டங்களை தொகுத்தாலே அது ஒரு புதிய இலக்கியமாக இருக்கும் என்று மறைந்த தோழர் காஸ்யபன் சிலாகித்துள்ளார்.
மாதவராஜ் அவர்கள் சிறந்த தொழிற்சங்கவாதி ஆவார். அவரின் பணி ஓய்வினை ஒட்டி தொழிற்சங்கவாதியும், நெருங்கிய நண்பருமான சி.பி. கிருஷ்ணன் இவ்வாறு பாராட்டுகிறார்: "மாதவராஜ் அவர்களின் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரின் எழுத்தும், பேச்சும் படிப்பவர்களை, கேட்பவர்களை அப்படியே கட்டிப் போட்டு விடும். மேலும் "இளம் தோழர்களுக்கு நல்ல பயிற்சி வகுப்புகள் எடுத்து சங்கத்தின் தலைமைக்கு தயார் செய்ததில் அவரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது" என்றும் கூறுகிறார். "மார்க்சிய சிந்தனை மற்றும் செயல்பாடு அவரின் உணர்வில் ஒன்றிப் போனவை. அவரின் சித்தாந்த ரீதியிலான அணுகுமுறை வித்தியாசமாகவும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியும் அமையும்" என்றும் பாராட்டுகிறார்.
மாதவராஜ் "பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி" என்ற வங்கி ஊழியர்களின் இதழுக்கு மாதாமாதம் அட்டைப்படம் தயாரித்து கொடுத்துள்ளார். அட்டைப் படங்களின் கருப்பொருளை தனது பாணியில் நறுக் என்ற கவிதை வரிகளோடு தயாரிப்பார்.
"இருட்டிலிருந்து" தொடரில், கிராம வங்கி ஊழியரின் தொழிற்சங்க அனுபவத்தை ஒர் இலக்கியப் பிரதியாக வடித்தார். தொடராக வெளிவந்த பொழுது, அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும் என்று வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் திறமையாக வடிவமைத்தார்.
பிரபல எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் மாதவராஜ் குறித்து இவ்வாறு பெருமைப்படுகிறார். "மாதவராஜ் தத்துவத்தைப் புத்தகங்கள் வழியல்ல, இயங்குவதன் வழி, அப்படி இயங்கும் போது உடனியங்கும் மனிதர் வழியாக அறிந்தவர். அப்பாவும், அண்ணனும், அம்மாவும், தங்கையும், மனைவியும், மகளும், மகனும் என்ற குடும்ப மனிதர்கள் அவருடைய சமூக மனிதர் போலவே அவருக்கு முக்கியமானவர்கள். "
எழுத்தாளர் மாதவராஜ் அவர்கள் தமுஎகச வின் மாவட்டப் பொறுப்பிலும், மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிள்ளார்.
வெளிவந்த நூல்கள்
1) இராஜகுமாரன் – சிறுகதை தொகுப்பு
(1993) .
2) வீரசுதந்திரம் வேண்டி (1997) – இந்திய
விடுதலை போராட்டம் குறித்த முக்கிய தகவல்கலோடு
கூடிய தொகுப்பு. எழுத்தாளர் தமிழ்செல்வன், உதயசங்கர் போன்றோர் பலரின் பங்களிப்புடன் வெளிவந்த
நூல்.
3) காந்தி புன்னகைக்கிறார் (2003) – காந்தியின் படுகொலை குறித்த வரலாற்றின்
மறுவாசிப்பு.
4) மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2003) – உலகமயமாக்கல் குறித்த
நூல். எழுத்தாளர் சு.வெங்கடேசனோடு இணைந்து எழுதியது.
5) என்றென்றும் மார்க்ஸ் (2004) – மார்க்ஸ்
வாழ்க்கைச் சுருக்கம்
6) சேகுவேரா(2004)– சி.ஐ.ஏ குறிப்புகளின்
பின்னணியில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு.
7) ஆதலினால் காதல் செய்வீர் (2005) – காதல்
குறித்த ஒரு சமூக வரலாற்று பார்வை.
8) போதி நிலா (2005) – சிறுகதை
தொகுப்பு
9) குருவிகள் பறந்து விட்டன (2010) – சொற்சித்திரங்கள்
தொகுப்பு
10) இருட்டிலிருந்து… (2016) – தொழிற்சங்க
அனுபவங்கள்.
11) உடைந்த முட்டையும், தலை எட்டிப்
பார்க்கும் டயனோசரும் (2020) இந்துத்துவாவின்
அரசியல் பரிணாமம் குறித்த கட்டுரை. அமேசானில் வெளியிடப்பட்டு
இருக்கும் இ-புத்தகம்.
12) புத்தரைப் பார்த்தேன் (2021) – சொற்சொத்திரங்கள் தொகுப்பு. அமேசானில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
தயாரித்த ஆவணப்படங்கள்
1) பள்ளம்
2) இரவுகள் உடையும்
3) இது வேறு இதிகாசம்
பெற்ற விருது, பரிசு
முதல் சிறுகதை இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது.