தொகுப்பு : சத்யா சம்பத் குமார்
தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் அருகில் விக்ரமம் என்ற
கிராமத்தில் மு.சந்திரன் - க.பாக்கியம் என்ற பெற்றோருக்கு
பிறந்த நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்தவர் எழுத்தாளர் மதுக்கூர்
ராமலிங்கம் அவர்கள்.
இவரது
தாயாரும், மூத்த அண்ணனும் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு வாசிப்பு என்பது சிறு வயது முதலே இயல்பாக இருந்தது.
இவரது பள்ளி வாழ்க்கை முழுவதும் மதுக்கூரிலேயே அமைந்தது. அப்பொழுது
நூல் நிலையத்தில் சேர்ந்து தனது வாசிப்பு பழக்கத்தை மேலும் மேம்படுத்திக்
கொண்டார். இவர் எழுத்து, பேச்சு மட்டுமின்றி பாடுவதிலும் ஆர்வம் மிக்கவர். எட்டாம் வகுப்பில்
பாட்டுப் போட்டியில் சேர்ந்து முதல் பரிசு பெற்றவர். முறைப்படி
சங்கீதம் பயிலாமலேயே அந்த முதல் இடத்தை தொடர்ந்து வந்த வருடங்களிலும் தக்க
வைத்துக் கொண்டார்.
மதுக்கூரில் நிறைய இலக்கிய விழாக்கள் நடைபெறும். அதில் கம்ப
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் பிரசங்கங்களும் நடைபெறும். இதைத்
தொடர்ந்து கேட்கும் பொழுது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
1980
இல் A.V.C கல்லூரி மயிலாடுதுறையில் தனக்கு விருப்பம் மிக்க தமிழ்
பாடம் இல்லை என்பதால், பொருளாதாரம் தேர்ந்தெடுத்து இளங்கலை, முதுகலை என்ற
ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையை
நிறைவு செய்தார்.
1980 - 85 வரையிலான கல்லூரி வாழ்க்கை இவருக்கு பல வாய்ப்புகளை
அள்ளிக் கொடுத்திருக்கிறது. நிறைய பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
சொ.சிங்காரவேலன் என்ற பேராசிரியர் இவருக்கு கவிதை எழுதத்
தூண்டுகோலாக அமைகிறார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இறந்தபோது நடைபெற்ற இரங்கற்பா
அரங்கத்தில் இவரது முதல் கவிதையை அரங்கேற்றினார்.
1983 இல் இளங்கலை படிக்கும் பொழுது "புள்ளியில்லா கோலங்கள்" என்ற கவிதைத்
தொகுப்பு கவிஞர் வைரமுத்து முன்னுரையுடன் குருவிக்கரம்பை சண்முகம் (திரைப்பட
பாடலாசிரியர்) வெளியிட்டார். 1985 - இல் முதுகலை இறுதியாண்டு படிக்கும் பொழுது "காய்க்கத் தெரியாத காகிதப் பூக்கள்" என்ற கவிதைத்
தொகுப்பு எஸ் அறிவுமணி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வெளியீட்டு
விழாவையும் கல்லூரி நிர்வாகமே நடத்தியது. கல்லூரி நாட்களில் வானொலியில் பேசும்
வாய்ப்பும் கிடைத்து இவரை மேலும் மெருகேற்றியது.
1986 இல் MPhil படிப்பதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு
வந்தபொழுது நந்தலாலா, முகில் ,போன்ற கவிஞர்களின் தொடர்பு கிடைக்கிறது. அவர்களின் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார். இதன் காரணமாக இலக்கியம் குறித்த இவரது பார்வைகளில்
முற்போக்கு சிந்தனை மிளிரத் தொடங்கியது.
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராஹிம்
பூங்காவில் மாதம் ஒருமுறை "சோலை குயில்கள்" என்ற நிகழ்ச்சி
நடைபெறும். அதில் நிறைய கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசிப்பார்கள்.
அதில் பங்கேற்று கவிதை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்று தன்னை மேலும்
மெருகேற்றிக் கொண்டார். 1986-இல் அறிவியல் இயக்கம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் "கிழக்குக்
கடற்கரை சாலைப் பயணம்" என்ற நாடகச் செயல்பாட்டினை பிரளயன் அவர்கள் துவக்கினார். அதில்
இணைந்து தமிழ்நாடு முழுவதிலும் பல பயணங்கள் மேற்கொண்டு நாடகங்களில் நடித்துள்ளார்
மதுக்கூர்.
நந்தலாலா,
முத்துநிலவன், ஜீவி இவர்களுடன் சேர்ந்து பட்டிமன்றத்தில் பங்கேற்கும்
வாய்ப்பு கிடைக்கப்பெற்றார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின பொன்விழாவில் லியோனி அவர்கள்
நடுவராக இருக்க "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா இல்லையா" என்ற
தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனை ஆடியோ கேசட்டாகவும் வெளியிட்டனர். விஜய்
தொலைக்காட்சியில் லியோனியுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம் "குடும்பத்தின்
மகிழ்ச்சிக்கு காரணம் மகனா, மகளா" குறிப்பிடத்தக்கது. மேலும்
தொலைக்காட்சியில் இதுவே முதல் பட்டிமன்றமும். இதன்
தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பட்டிமன்றங்களில்
கலந்து கொண்டுள்ளார். பட்டிமன்ற பேச்சாளராக பல வருட பயணத்திற்குப் பிறகு, தற்போது
பட்டிமன்ற நடுவராகத் திகழ்கின்றார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா
காலத்திலும் இணையவழி பட்டிமன்றங்கள் பலவற்றை இந்திய மற்றும் பல வெளிநாடுகளில்
நடத்தி வருகிறார். கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நான்கு முறை பேசும் வாய்ப்பு கிடைக்கப்பெற்று, அவரின் பாராட்டுதலையும் பெற்றவர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்.
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்குச்
சென்று இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் என பல நிகழ்வுகளில்
பங்கெடுத்துள்ளார். சென்னையில் இயங்கிவரும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நற்பணி மன்றத்தின் சார்பாக "மக்கள்
நாவலர்" என்ற விருது
2015 இல் தொல்.திருமாவளவன்
அவர்களின் மூலம் வழங்கப்பட்டது.
“அவை அறிவோம்” [மேடை பேச்சாளர்களுக்கான வழிகாட்டி] செம்மலரில்
தொடராக வந்தது. தற்போது தொகுத்து நூலாக வெளிவர உள்ளது. இவரது
அரசியல், பொருளாதாரம் ,சமூகம், பண்பாடு குறித்த கட்டுரைகள் அதிகமாக தீக்கதிர்,
செம்மலர் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளது.
முதலில்
தீர்க்கதிர் ஆசிரிய்ர் குழுவில் பணியாற்றியவர், தற்போது முதன்மை ஆசிரியராக பொறுப்பு வகிக்கிறார். மேலும் செம்மலர்
ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்
செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். தமுஎகச-வில் மாநில பொறுப்புத தலைவராகவும்
பணியாற்றுகிறார்.
இவரது துணைவியார் K.V. மீனாம்பிகை அரசு பள்ளி ஆசிரியர். இவர்களின் இரண்டு புதல்வர்கள் - பாரதி வசந்த் மருத்துவராகவும், தமிழ் அமுதன் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது வாழ்ந்து வருவது தூங்கா நகரமாகிய மதுரையில்.
வெளிவந்துள்ள நூல்கள்
1.
புள்ளியில்லா கோலங்கள் - 1983
2.
காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள்- 1985
3.
திண்ணை பேச்சு - 2002.
4.
இடது பக்கம் செல்லவும் - 2004
5.
விந்தை மனிதர்கள - 2005
6.
கையளவு கடல்
- 2018
7
தமிழகத்தில் சமூக சீர்திருத்த
இயக்கம் -
2019