Jul 7, 2021

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா

தொகுப்பு - நேயா புதுராஜா

            "தொடர் வாசிப்பின் வழியே நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து" என்று கூறும் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா அவர்கள் தமிழகத்தில் முக்கிய மொழிப் பெயர்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர், இவர் பிறப்பதற்கு முன்பே இவரது குடும்பம் தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தது. ஐந்து மாத குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்த இவர் தாய்மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். தனது அம்மாவின் தீவிர வாசிப்பும், சித்தி வீட்டு நூலகமும் இவரை வாசிப்பின் பக்கம் நகர்த்தியதாகக் குறிப்பிடுகிறார்.

            கேரளத்தின் புகழ்பெற்ற கவிஞரான திரு.பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் "சிதம்பர ஸ்மரண" என்ற புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்க்க, மலையாளத்தில் பேச மட்டுமே தெரிந்த இவர் தனது அக்காவின் ஐந்து வயது மகளிடம் மலையாளம் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அதன் வழியே "சிதம்பர ஸ்மரண" என்ற நூல் "சிதம்பர நினைவுகள்" என்றானது. ஷைலஜா அவர்கள் அதன் பின் எத்தனையோ புத்தகங்களை எழுதிவிட்டாலும் இன்று வரை அவர் "சிதம்பர நினைவுகள் ஷைலஜா" என்றே அறியப்படுகிறார். அந்த புத்தகம் அத்தகைய தாக்கத்தை வாசகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இவரது இணையர் எழுத்தாளர் பவா செல்லத்துரை  தமிழகம் அறிந்த சிறந்த எழுத்தாளர், கதைசொல்லி. இவர்களுக்கு வம்சி என்ற மகனும், மானசி என்ற மகளும் உள்ளனர். இவர்களது  மகளான மானசி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தமிழில் இரா.நடராசன் எழுதிய ஆயிஷா" என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். ஷைலஜா அவர்களின் மூத்த சகோதரி கே.வி.ஜெயஶ்ரீ சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் பணியாற்றிய ஷைலஜா அவர்கள் சிறந்த புத்தக பதிப்பாளரும் கூட. தனது வம்சி பதிப்பகத்தின் வாயிலாக நானூற்றிற்கும் அதிகமான புத்தகங்களை பதிப்பித்திருக்கிறார். இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதினை ஐந்து முறை பெற்றிருக்கிறார். "பூவுலகின் நண்பர்கள்" என்ற அமைப்பினருடன் சேர்ந்து எட்டு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறார். வணிகவியல் (எம்.காம்.) பட்டதாரியான இவர், எழுத வருவதற்கு முன்பு தேசிய அளவில் புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியராகவும் பின்பு கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணி செய்தவர். இவரை தங்களின் ஆதர்ச பிம்பமாக அவரிடம் படித்தவர்கள் இன்றுவரை நினைவுகூர்கிறார்கள்.

            திருவண்ணாமலை என்றாலே கலைத்துறையில் உள்ளோர் பலருக்கு ஷைலஜா அவர்களின் இல்லம் நினைவிற்கு வரும் அளவிற்கு, கலை தாகம் கொண்டோர் கூடுமிடமாக அவர்களின் வீடும் , நிலமும் உள்ளது. பெரிய ஆளுமைகள் முதல் இன்று எழுதத் தொடங்கும் எவருக்கும் ஆதரவளிப்பவர்கள் என்றே இந்த தம்பதியினர் அறியப்படுகிறார்கள். தமிழக கலைஞர்கள் மட்டுமல்லாது பிற மாநில ஆளுமைகளும் இதில் அடக்கம். திரைக்கலைஞர் பாலுமகேந்திரா, ஷைலஜா அவர்களை தனது சொந்த மகளாகவே பாவித்துக்கொண்டவர் (பாலு மகேந்திரா மறைவிற்கு பிறகு அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஷைலஜா அவர்களிடம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). இதே போல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கே.எஸ்.சுப்ரமணியமும் இவரை தனது மகள் என்றே குறிப்பிட்டவர், கவிஞர்.நா.முத்துக்குமார் இவரை தன் சொந்த சகோதரியாக, தோழர்களாக இயக்குனர் மிஷ்கின், நடிகர் பிரகாஷ் ராஜ் என்று இந்த பட்டியல் நீளும். . அது மொழிகடந்த பட்டியல்.

            மொழிபெயர்ப்பு என்பது எளிதான வேலை அல்ல, அது இயல்பாக எழுதுவதை விட பல மடங்கு உழைப்பைக் கோருகிற ஒன்று. மொழிப்பெயர்ப்பாளர்  எவ்வளவு தான் இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தாலும் வட்டார வழக்குகளில் வெளியாகும் நூல்கள் மிகுந்த சவால்களைக் கொடுக்கும். மேலும், அந்த மொழியின் ஆன்மாவை சிதறடித்துவிடாமலும், வாசகர்களுக்கு மூலப்பிரதியின் அதே உணர்வை கடத்தும்  விதத்திலும் மிகப்பெரும் உழைப்பு மொழிப்பெயர்ப்பிற்கு அவசியம். இவற்றை மிகச்சிறப்பாக செய்வதாக பல்வேறு ஆளுமைகளின் பாராட்டைப் பெற்ற ஷைலஜா அவர்கள் எழுத்தாளர், பதிப்பாளர், கலை இரவுகள், முற்றம் போன்ற நிகழ்வுகளால் அறியப்பட்டாலும் அதையும் தாண்டி இயற்கை விவசாயம், நவீன கட்டுமானங்களில் இருந்து விடுவித்துகொண்டு மரபு சார்ந்த கல் வீடுகளைக் கட்டுவதில் அவர் இணையரோடு சேர்ந்து செயல்படுதல் என தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்.  இவரின் சிதம்பர நினைவுகள் நூலில் இருந்து ஒரு பகுதி பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டதில் சேர்கப்பட்டுள்ளது

வெளிவந்துள்ள நூல்கள்

தமிழ் கட்டுரைகள்

1) முத்தியம்மா

2) உருவமற்ற என் முதல் ஆண்

மொழிபெயர்ப்பு நூல்கள் (மலையாளத்திலிருந்து தமிழில்)

கட்டுரைகள்

1)சிதம்பர நினைவுகள்- பாலசந்திரன் சுள்ளிக்காடு.

2)மூன்றாம் பிறை - மம்முட்டி( வாழ்வனுபவங்கள்).

சிறுகதைகள்

1)சர்மிஷ்டா-என்.எஸ்.மாதவன்.

2)சூர்ப்பனகை-கெ.ஆர்.மீரா.

3)யாருக்கும் வேண்டாத கண்- சிஹாபுதின் பொய்த்தும்கடவு.

நாவல்கள்

1) சுமித்ரா-கல்பட்டா நாராயணன்.

2)இறுதியாத்திரை-எம்.டி.வாசாதேவநாயர்.

3)ஸ்வரபேதங்கள்-பாக்யலஷ்மி.

4)கதை கேட்கும் சுவர்கள்-ஷாபு கிளித்தட்டில்.

தொகுப்பு நூல்கள்

1) பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன் (தமிழ்-மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு)

2) தென்னிந்திய சிறுகதைகள்- (தமிழ்-மலையாள-கன்னட-தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு)

பெற்ற விருதுகள், பரிசுகள்

1) கலை இலக்கியப் பேரவை விருது.

2) திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.

3) கனடா தோட்ட விருது.

4) பெண் படைப்பாளர்களுக்கான சக்தி விருது.

5) ஐந்து முறை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த பதிப்பாளருக்கான விருது

இணைய இணைப்புகள்