தொகுப்பு: சாந்தி சரவணன்
ஒருங்கிணைந்த இராாமநாாதபுரம் மாவட்டத்தின் விருதுநகர் சத்திரரெட்டிப்பட்டியில் ஒரு விவசாாயக் குடும்பத்தை சேர்ந்தவர் எழுத்தாளர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்கள். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தோழர் ஜீவா அவர்களின் உரையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து படிப்படியாக தன்னை ஒரு கம்யூனிஸ்டாக உயர்த்திக் கொண்டவர். அந்தப் பகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் இயக்கம் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் முன்னிலையில் இருப்பார். தன்னியல்பாக மக்களின் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியில் சங்கரப்பன்
– இராமலக்ஷிமி தம்பதியருக்கு மகனாக பிப்ரவரி 13 ஆம் நாள் 1944 ஆம் ஆண்டு பிறந்தார். செந்தில் குமார் நாடார் கல்லூரியில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார். மனைவி பெயர்
வசந்தா. ஒரு மகள் சுகாஷினி தேவி.
1967 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். 1968 இல் சாத்தூர் தாலுகா செயலாளராகவும், 1973 இல் மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1977 இல் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு முகவை மாவட்டம் உருவானபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகளும், பின்னர் விருதுநகர் மாவட்ட செயலாளராக 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். இந்த மாவட்டங்களில் இவரது காலடி படாத கிராமங்களே இல்லை. இயக்கப் பணிகளுக்காக தென் மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் அலைந்து திரிந்து பணியாற்றியவர். இயக்கத்திற்கு பலநூறு ஊழியர்களை உருவாக்கியவர்.
அவசர நிலை காலத்தின்போது 19 மாத காலம் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். 1994 இல் மதுரை தீக்கதிர் நாளிதழில் பொது மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார். கே.முத்தையா மறைவுக்கு பிறகு செம்மலர் ஆசிரியராக 12 வருடங்கள் பணியாற்றி தற்போது ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியராக உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், தொடர்ந்து அமைப்பை வழிநடத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
அதிகாரத்தைத் தட்டிக் கேட்கும் அஞ்சாத நெஞ்சம் இவரின் அடையாளம். எந்த அளவிற்கு களப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ, அதே அளவிற்கு கலை இலக்கியத்திலும், கல்வி இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இலக்கியம், நாட்டார் கலைகள், பண்பாட்டு ஆய்வுகள், பொதுவுடைமை சித்தாந்தம் என்ற பரந்த தளத்தில் எழுதியும் இயங்கியும் வரும் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர். இலக்கியத் திறனாய்வாளர். அரசியல் தத்துவ வகுப்பாசிரியர். சிறந்த பேச்சாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர், பாப்லோநெரூடா, கலீல், ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100க்கும் மேலான கவிதைகளைத் தமிழில் தந்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் தந்துள்ளார் 27 நூல்கள் எழுதியுள்ளார்.
இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவர். இவரது வசீகரமான சொல், செயல், வாழ்க்கை, இயக்கப்பணிகளால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், மத்தியதரவர்க்கத்தினர், எளிய மக்கள் ஏராளம். கட்சி அரசியல் கடந்த சமூகத்தின் மீதான இவரது அக்கறை காரணமாக மருத்துவம், உணவுப் பண்பாடு, தனிநபர் ஆளுமை மேம்பாடு, கலை இலக்கியம், சினிமா, நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் ஒரு படைப்பாளியாகவும் கலைஞனாகவும் பன்முகத்தன்மைகளோடு பரிணமித்தவர். ஏராளமான எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியவர்.
கே.ஏ.குணசேகரன், கோட்டைச்சாமி போன்ற கலைஞர்களை மேடைக்கு கொண்டு வந்து .தமிழ்நாடு முழுவதும் அவர்களின் குரலை ஒலிக்க வைத்தவர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள். தமிழ் இலக்கிய மேடைகளில் உலா வரும் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனாகியோர் எஸ்.ஏ.பி. அவர்களை தங்களது முன்னோடியாகக் குறிப்பிடுகின்றனர்.
சிறந்த பாடலாசிரியர். தேர்தல் காலங்களில் தேர்தலுக்கான பாடல்களை தயார் செய்து தருவது இவரது சிறப்பான பணிகளில் ஒன்று. பெரும்பாலான மேடைகளிலும் நிகழ்ச்சி துவங்குமுன் இவரது பாடல் தான் அங்கு ஒலிக்கும். குறிப்பாக “அக்கா குருவி பாட்டு” அவர் பாடத் தொடங்கினால்.அரங்கமே நெகிழ்ந்துவிடும்.
ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் வரக்கூடிய கட்டுரைகள், கவிதைகளை மொழிபெயர்த்து, தீக்கதிர் மற்றும் செம்மலர் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார், வண்ணக்கதிர் பத்திரிக்கையில் இந்திய தத்துவ ஞானத்தைப் பற்றி தொடர்ந்து எழுதியுள்ளார்
தோழர் வி.பி.சிந்தன் போன்றவர்களால் வார்த்து எடுக்கப்பட்டவர். எஸ்.ஏ.பி. அவர்களின் தத்துவ வகுப்புகள் அரசியல் மாணவர்களை உருவாக்கும் பணியைச் செய்வதில் தனித்துவமானவை. உலக தத்துவங்களில் துவங்கி, இந்திய மதங்களின் கோட்பாடுகள் வரை அவர் வகுப்புகளில் அடங்காதவை இல்லை என்றே சொல்லலாம். மார்க்சிய பொருளாதாரம், மார்க்சிய தத்துவம், மனித குல வரலாறு, வேத காலமும் – நவீன காலமும் போன்ற தலைப்புகளில் எஸ்.ஏ.பி. அவர்களின் வகுப்புகள் ஆகச்சிறந்தவைகளாக விளங்குகின்றன.
வெளிவந்துள்ள நூல்கள்
- கலீல்
ஜிப்ரானின் கண்ணீரும் சிரிப்பும் – (தமிழில்)
- மனிதகுல
வரலாறு (2001)
- பகத்சிங்
கடிதங்கள் - (2004)
- மார்க்சீய
தத்துவம் ஒர் அறிமுகம் (2004)
- அடிமைப்
சமூகம் (2005)
- தேசமென்பது
மண்ணல்ல -(2005)
- சுதந்திரப்
போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் (2005)
- காவிப்படை
(2005)
- ஆதி
பொதுவுடைமைச் சமூகம் (2005)
- கடவுள்
பிறந்த கதை (2005)
- தத்துவங்களின்
தேரோட்டம் (2007)
- உலக
நாடோடிக் கதைகள் (2008)
- உலகைக்
குலுக்கிய விஞ்ஞானிகள் (2011)
- மாக்சிம்
கார்க்கி வாழ்வும் இலக்கியமும்.(2012)
- எஸ்.ராமகிருஷ்ணனின்
எழுத்துலகம் (2012)
- பகத்சிங்
மற்றும் தோழர்கள் (2015)
- பழங்குடி
மக்களின் வீரப் போராட்டங்கள் (2009)
- வாஸ்து
சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும் (2016)
- காலமெனும் பெருநதி