தொகுப்பு : செ.ஹரிஹரன்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள
கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் 3.9.1962 இல் சே.சு ஆரிமுத்து – சாவித்திரி
அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த ஆரிசன் அவர்களின் இயற்பெயர் பெருமாள்.
இவருடைய தந்தையின் பெயரின் இரு
எழுத்துகளோடு, "சன்"(son) என்பதை இணைத்து "ஆரிசன்" என்று மாற்றிக் கொண்டார். இவருடைய
கல்வித்தகுதி எம்.ஏ தமிழ் இலக்கியம் மற்றும் இளம் முனைவர் பட்டத்தை தொடர்பு
மற்றும் பத்திரிகை துறையிலும் பெற்றுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (தமிவா), மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் முதுநிலைகணக்கீட்டு அலுவலராக
பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற கொள்கையோடு 34
ஆண்டுகால பெருமைக்குரிய மின்வாரிய பணியை செய்து கொண்டிருக்கிறார். தொழிற்சங்க
இயக்கத்தோடு இணைந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளார்.
இவருடைய இணையர் .ந.
அமுதா வந்தவாசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக
பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெ.கோபி சிவராமன் மற்றும் பெ.மோகனசெல்வ சுர்ஜித். இருவருமே எம்.இ. முடித்தவர்கள்..
இவர்கள் இருவரையும் தாய்வழிக் கல்வியில் அரசுப் பள்ளியிலேயே படிக்க
வைத்த பெருமை கவிஞர் ஆரிசன்-அமுதா தம்பதியருக்கு உண்டு.
ஆரிசன் அவர்களுடைய வாசிப்பு 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது பொது நூலகத்திலிருந்து துவங்கிய
து. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்களில், நாளிதழ்களில்
இருந்துதான் இவருடைய வாசிப்பு இருந்திருக்கிறது. பள்ளிப்படிப்பை
கீழ்க்கொடுங்காலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அதைத்தொடர்ந்து
செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் படிப்பை
விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சீனியர் மாணவர்களுடன்
வாசிப்பில் இணைந்தது இன்னும் இவருடைய வாசிப்பை செழுமைப்படுத்தியது.
தினமணி, துக்ளக் போன்ற
நாளிதழ்களில் வாசகர் கடிதம் அதிகம் எழுதிக்கொண்டிருந்தார். இந்த வாசகர் கடிதங்களை தனியாக
ஒரு நூலாகவே தொகுக்கும் அளவிற்கு எழுதி இருக்கிறார். பள்ளி மற்றும்
கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார்.
கல்லூரியின் தமிழ் மாணவர்கள் மன்றம் நடத்தக்கூடிய
பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றிருக்கிறார், மாத இலக்கியக் கூட்டத்தில் கல்லூரிக்கான ஆண்டு மலரில் இவருடைய கவிதைகளும்
இடம் பெற்றிருக்கின்றன.
இதைத்தொடர்ந்து வந்தவாசி தமுஎகசவின் திண்ணை சந்திப்பின் மூலமும், மு.முருகேஷ்
நட்பின் மூலமும் இவருடைய எழுத்துகள் இன்னும் மேம்படத்
தொடங்கின. இவருடைய எழுத்துகளை நூலாக மாற்றுவதில் தூண்டுகோலாக
இருந்ததில் மு.முருகேஷின் பங்கு அதிகம். இதைத்தொடர்ந்து இவருடைய முதல் நூலாக "குளத்தில் மிதக்கும்
தீபங்கள்" ஹைக்கூ கவிதை நூல் 2002 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதத்தில் அகநி வெளியீடு மூலம் வெளிவந்தது. அழகியல் சார்ந்தவை
மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த எல்லா விஷயங்களையும் அவருடைய ஹைக்கூ
கவிதைகள் பிரதிபலித்தன.
"குளத்தில்
மிதக்கும் தீபங்கள்" ஹைக்கூ கவிதை நூல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்
இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டுக்கு பாடநூலாக இடம் பெற்றுள்ளது (2013-2018). இதே நூலுக்கு ”கவிஞாயிறு தாராபாரதி குறும்பா விருது” கிடைத்துள்ளது.
இவருடைய கவிதைகளை சென்னை பல்கலைக்கழகம்
மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து இளமுனைவர் பட்டம்
பெற்றுள்ளார். முனைவர் பட்ட ஆய்வுக்காக இவரது நூல்களை திருவள்ளுவர் பல்கலைக்கழக
மாணவர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
எழுத்தாளர் ஆரிசன் கல்வெட்டியல், ஊர் வரலாறுகள், ஜோதிட நம்பிக்கை, இயற்கை மருத்துவம் குறித்த பல ஆய்வுகளைச் செய்து வருகிறார். வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர்
என்று தளங்களில் இயக்கிவரும் இவர் அக்குபங்சர்
மருத்துவத்தை முறையாகப் பயின்றவர் ஆவார்.
2012 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தொடர்ந்து தனது குறும்பா
கவிதையினை காலையில் குறுஞ்செய்தி மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களுக்கு
தொடர்ந்து அனுப்பியவர். இது உழைப்பின் நிறம் கருப்பு என்ற ஹைக்கூ தொகுப்பாக வெளிவந்து
பரிசுகள் பெற்றுள்ளது.
கணக்கீட்டு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின்
மாநில ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு மின்
ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு
உறுப்பினராகவும், மின் இலக்கியப்பூங்கா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராகவும், பொருளாளராகவும் பணியாற்றி, தற்போது மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளார். தொடர்ந்து வந்தவாசியில்
திண்ணை அமைப்பிலும் கீழ்க்கொடுங்காலூரில் "சுற்றம்" அமைப்பிலும் இணைந்து
இலக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
சாகித்ய அகாடமி கவியரங்குகள், தொலைக்காட்சி நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய
அரங்குகளில் பங்கேற்று அனுபவம் இவருக்கு உண்டு. இவருடைய கவிதைகள் சாகித்ய அகாடமி
தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.
நூலாசிரியர்கள் வரிசையில் "ஆரிசன்"
என்ற தலைப்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனி நூலாக வெளியிட்டுள்ளது.
34 ஆண்டுகள் மின்வாரியப் பணியோடு, 32 ஆண்டுகள் தொழிற்சங்க பணியும் அதோடு 20
ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இலக்கிய பயணம் இவருடைய தொடர்
உழைப்பையும் இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது.
வெளிவந்துள்ள கவிதை நூல்கள்
1) குளத்தில் மிதக்கும் தீபங்கள் (குறும்பா)
2) நட்சத்திர தாகம் (குறும்பா)
3) உயிர் நிலம் (புதுக்கவிதை)
4) பாடும் சின்னப் பறவைகளே (குழந்தை பாடல்கள்)
5) புல்வெளியின் ரகசியம் (குறும்பா)
6) காற்றில் மிதந்த மொழி (பாடல்)
7) மின்சாரப் பூக்கள் (புதுக்கவிதை)
8) வேட்கையின் நிழல் (புதுக்கவிதை)
9) பள்ளிக்கூட மைனார்க்கள் (குழந்தை பாடல்கள்)
10) மயிலிறகின் முத்தம் (குறும்பா)
11) உழைப்பின் நிறம் கருப்பு (ஹைக்கூ)
12) கனவற்றவர்களின் வாழ்க்கை (புதுக்கவிதை)
13) மூங்கில் தவம் (ஹைக்கூ 1000) தொகுப்பு நூல்.
விருதுகளும்,
பரிசுகளும்
கவிஞாயிறு தாராபாரதி குறும்பா விருது
(குளத்தில் மிதக்கும் தீபங்கள்) (2003) (வேட்கையின்
நிழல்)
மின் இலக்கிய பூங்கா பரிசு (மின்சாரம்
பூக்கள்)
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்
விருது (பள்ளிக்கூட மைனாக்ள்)
சென்னை குடும்ப நண்பர்கள் நற்பணி மன்ற
விருது.
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்க
விருது. (வேட்கையின் நிழல்)
சிகரம் சிற்றிதழ் விருது (வேட்கையின்
நிழல்)
புதுச்சேரி-அய்யாமாரியப்பனார்-
சுந்தராம்பாள் அறக்கட்டளை நினைவு பரிசு (புல்வெளியின் ரகசியம்).
கவி ஓவியா மாத இதழின் சிறந்த நூலுக்கான
விருது (மயிலிறகின் முத்தம்)
கவிஞாயிறுதாராபாரதி விருது (2014)
(கவிதை இலக்கியம் தன்னம்பிக்கைக்கான விருது).
அன்னைதெரேசா விருது (சென்னை)
மனிதநேயமுரசுப்பட்டம் (புதுச்சேரி)
மூங்கில் தவம்-கவிஓவிய விருது
எழுத்துச் சிற்பி-கவிஓவியா விருந்து (2019)
கலைமாமணி கவிஞர் பொன்னடியார் இலக்கிய பொன்விழாவில் வழங்கிய "பொன்னொளிக் கவிஞர்" பட்டம்
இணைய இணைப்புகள்
கவிஞர் ஆரிசன் படைப்புகள் குறித்த கட்டுரை