தொகுப்பு: கு.ஹேமலதா
கலை, இலக்கிய படைப்புத்திறனை பயன்படுத்தி பாட்டு,
இசை, நாடகம், நடனம்
மூலமாக மாணவர்களின் முழுத்திறனையும் மெருகேற்றி, அவர்களை சமூகப் பணிக்கு வித்திட வைக்கும் நல்லாசிரியர் தோழர் கரிச்சிராம் பாரதி அவர்களின்
இயற்பெயர் .க.இராமகிருஷ்ணன். 20.5.1978 ஆம் ஆண்டு சின்னமனூர் அருகில் உள்ள கரிச்சிப்பட்டி என்ற
சிற்றூரில் கருப்பையா - பாப்பா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.
இளங்கலை தமிழ்,
கணிதம் மற்றும் பி.எட். படிப்புகளை நிறைவு செய்துதுள்ள இவர் கணித ஆசிரியராக
பணிபுரிகிறார். மனைவி சொ.கங்கா, கணவர் பணிபுரியும் அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக
பணிபுரிகிறார். கலைமொழி, கவின்மொழி மற்றும் ஹெவந்திகா ஸ்ரீ என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1999
இல் மயிலாடும்பாறை - வாய்க்கால்பாறை அரசு
பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் இணைந்து, தற்போது திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கோடை பண்பலை வானொலியில் ஞாயிறுதோறும்
ஒளிபரப்பாகும் 'செப்புக செந்தமிழ் நோக்கும் போக்கும் - ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் M.Phil பட்டம் பெற்றுள்ளார்.
அதே பல்கலைகழகத்தில் 'தேனி சீருடையானின் படைப்புகள் -ஆய்வு'
என்ற தலைப்பில் ஆய்வு
செய்து, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தனது பள்ளிக்
காலத்திலேயே வாசிப்பின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக,
ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளையில்,
தனது தந்தையின் அறிவுரைப்படி அத்திப்பட்டி நூலகத்தில்
உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு வாசகராகவே படைப்புலகத்திற்கு அறிமுகமான
தோழர் கரிச்சிராம் பாரதி, தொடர் வாசிப்பு
அனுபவத்தில் பத்திரிக்கைகளுக்கு 'வாசகர் கடிதம்' எழுதும் ஆர்வத்தை பெற்றார். தொடர்ந்து பல முன்னணி இதழ்களில்
இவரது வாசகர் கடிதம் இடம்பெற ஆரம்பித்தது. தனது பெயரை பல பத்திரிக்கைகளில் காண
நேர்ந்தபின் அவரது எழுத்தார்வம் மேலும் வலுப்பெற்று கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1997
இல் பன்னிரெண்டாம் வகுப்பு
படித்து கொண்டிருந்த வேளையில் அவரது முதல் ஹைக்கூ கவிதை தினத்தந்தி குடும்ப மலரில்
வெளியானது. பின் இவரது படைப்புகள் பல முன்னணி நாளிதழ்களில் வெளியாயின. பத்திரிக்கைகளில் மட்டுமல்லாது மதுரை
வானொலி,கோடை
பண்பலை வானொலி நிகழ்ச்சிகளிலும் இவரது கவிதைகள் ஒலிபரப்பானது.
1998
- 99 களில் ஆரம்பித்த இவரது வானொலி
பங்களிப்பு, இன்று
வரை தொடர்வது குறிப்பிடத்தக்கது. கோடை பண்பலை வானொலி நிகழ்ச்சிகளில் கவிதை,
கட்டுரைகள் வாசிப்பு மற்றும் நாடகங்களிலும்
பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி இவரது நேர்காணல்களும் ஒலிபரப்பாகியுள்ளன. கோடை பண்பலையின் நேரடி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வானொலியில் ஒலிபரப்பான இவரது முதல்
படைப்பு 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவிதை ஆகும். அதுமட்டுமின்றி பொதிகை தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும் 'காண்போம்
கற்போம்'
நிகழ்ச்சியிலும் ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் பாடங்களை இரண்டு
முறை நடத்தியுள்ளார்.
2002 இல்
தினத்தந்தி நாளிதழில் நிருபரான தனது நெருங்கிய நண்பரின் வழிகாட்டுதலில் தினத்தந்தி
நாளிதழில் கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். தொடர்ந்து இரண்டரை வருடங்களாக, தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் வெளியாகும் இதழில்
இவரது 'தெரிந்த ஊர் தெரியாத சேதி' என்ற கட்டுரை தொடர் வெளியானது. தேனி மாவட்ட ஊர்களின்
வரலாற்றை,ஊரின் பெயர் காரணம், அங்கு பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள்,
இறை வழிபாடு, ஊரின் தோற்றம், அம்மக்களின் சமூகச் சிந்தனை, அவ்வூரில் வாழும் துறை சார்ந்த முன்னோடிகளைப் பற்றிய அறிமுகம் என அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரையாக இது
அமைந்திருந்தது. இக்கட்டுரைகளை தொகுத்து 2006 ஆம் ஆண்டு தனது முதல் நூலை அதே தலைப்பில் வெளியிட்டார்.
கவிதை, கட்டுரைகள் படைப்பது மட்டுமின்றி வீதி நாடகக் கலைஞராகவும் தன்னை பரிணமித்துக் கொண்டவர்.
தமுஎகச தோழர்கள் அய்.தமிழ்மணி மற்றும் சுருளிப்பட்டி சிவாஜி
அவர்களுடன் இணைந்து, தமுஎகச கலை இரவுகளில் வீதி நாடகங்களும், மேலும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார்.
மேலும் மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தும் விதமாக இவர் எடுத்த 'நாங்கள் இல்லையேல்' என்ற ஆவணப்படம் இவரை ஒரு ஆவணப்பட இயக்குனராகவும்
அறிமுகம் செய்தது. தனது பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை
இயக்கியுள்ளார். ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டங்களில் இப்படம் திரையிடப்பட்டு
முதல் பரிசும் பெற்றது.
ஆசிரியப்பணியிலும்,
மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் கற்க பல புதிய உத்திகளை கையாளுகிறார். பாடங்களை
பாடல்களாகவும், நாடகமாகவும் எளிமைப்படுத்தி
மாணவர்களுக்கு போதிப்பது மட்டுமின்றி,தான் பின்பற்றும் முறைகளை ஆசிரியர் பயிற்சி கூட்டங்களில்
மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிக்கிறார். மேலும் கலை இலக்கிய ஆர்வமுள்ள
மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை வழிநடத்தி பல மாணவ நாடகக் கலைஞர்களை உருவாக்கியும் இருக்கிறார்.
தோழர் இதயகீதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி 1999 ஆம் வருடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தோழர் கரிச்சிராம் பாரதி அவர்கள் சின்னமனூர்
தமுஎகச தலைவராகவும், செயலாளராகவும் தொடர்ந்து பதினைந்து வருடங்கள் பொறுப்பில் இருந்துள்ளார். பின்
தேனி மாவட்டக் குழு
உறுப்பினராக இருந்து தற்போது சின்னமனூர் தமுஎகச செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
வெளிவந்துள்ள படைப்புகள்
1. தெரிந்த ஊர்..தெரியாத சேதி.. ! (தேனி மாவட்ட ஊர்களின்
வரலாறு)
2. நாங்கள் இல்லையேல் - குறும்படம்
பெற்ற விருதுகள்
1.மாவட்ட
அளவில் 'சிகரம் தொட்ட ஆசிரியர்' விருது (2006)
2.மாநில
நல்லாசிரியர் விருது (2019)
3.தேனி
கலைஇலக்கிய மையம் வழங்கிய 'நன்னெறி ஆசிரியர் விருது' (2017)
4.தேனி
வைகை அரிமா சங்கம் வழங்கிய விருது (2019)
5.தமுஎகசவின்
'படைப்பாய்வும் பாராட்டுவிழாவும்'
என்ற நிகழ்வில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றதற்காக
பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இணைய இணைப்பு