தொகுப்பு: அ.ஆஃப்ரின் பானு
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்,
நாடக ஆசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், வீதி நாடகக்
கலைஞர், சொற்பொழிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் போடி மாலன் அவர்களின் இயற்பெயர் மா.லட்சுமணன். இவர்
1957 ஆம்
ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூண்டி கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் மாரியப்பன்,
தாய் சீனியம்மாள். மனைவி லீலாவதி, மகள்கள் -
லலிதாம்பிகை மற்றும் கண்மணி பாரதி,
மகன் - ஆதித்யன்.
போடி மாலனுக்கு மூன்று வயது இருக்கும்
போதே
அவரது குடும்பம் அவர்களது
சொந்த ஊரான போடி அருகிலுள்ள ஜக்கம நாயக்கன்பட்டியை
வந்தடைந்தது.
எம்.ஏ பட்டதாரியான
இவர் எட்டாம் வகுப்பு வரை போடியிலுள்ள மூவேந்தர் நடுநிலைப் பள்ளியில் பயின்றார். ஓராண்டு தந்தையைப் பிரிந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பூண்டி கிராமம் சென்றார்.
பின்னர் மீண்டும்
ஒன்பதாம்
வகுப்பை போடியிலுள்ள ஜமீன் தாரணி காமுலம்மாள்
மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். போடியில் உள்ள ஏல விவசாயிகள் கலைக்கல்லூரியில் பியூசி முடித்த இவர், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ பட்டத்தை பெற்றார். மேல் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் மூலம் எம்.ஏ பட்டத்தை
நிறைவு செய்தார்.
படிக்கும் காலங்களிலேயே வாசிப்பை தனது விருப்பமாகவும், பொழுதுபோக்காகவும் கொண்டிருந்த போடி மாலன் அருப்புக்கோட்டையில் கல்லூரிக்காக தங்கியிருந்த காலங்களில் அந்த வயதிற்கே உண்டான காதல் கவிதை எழுதுவதில்
துவங்கியது இவரின் முதல் எழுத்து முயற்சி. பிஏ முடித்துவிட்டு ஊர் திரும்பிய இவர், மேல் படிப்பை தொலைதூரக்கல்வியில் தொடர்ந்ததால், தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் முழுமையாக நண்பர்களுடன் நூலகங்களில் செலவழித்தார். பல்வேறு நாவல்களையும், தனக்கு விருப்பமான நூல்களையும் தேர்ந்தெடுத்து வாசித்து தனது நேரத்தைப் பயனுள்ளதாகக்
கழித்தார். இதனைத் தொடர்ந்து தனது கவிதை எழுதும் முயற்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயன்றார். இந்த காலகட்டத்தில் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் ஜெகதீஸ்வரன்
அவர்களின் அறிமுகம் கிடைக்க, அவரின் தூண்டுதலின் பேரில் அவர் பரிந்துரைத்த இன்குலாபின் கவிதைத்
தொகுப்புகள், கந்தர்வனின் கவிதைத்
தொகுப்புகள் போன்றவை இவரது வாசிப்பை மேலும் செழுமை படுத்தின. இவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தோழர் ஜெகதீசன்
அவர்கள் இவரை கையெழுத்துப்பிரதி இதழ் ஒன்றை உருவாக்குமாறு ஊக்கப் படுத்தினார். தோழரான கமலக்கண்ணனுடன் இணைந்து தனக்கு விருப்பமான சிலப்பதிகாரத்தின்
பெயரிலேயே என்பதால்
”சிலம்பு”
என்ற கையெழுத்துப் பிரதி ஒன்றை தொடங்கினார் போடி மாலன்.
இதனைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் மத்தியிலும், போடி நகரத்தின் தமுஎகச தோழர்களுக்கு
இடையிலும் இவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. தேனி பொன் விஜயன், பீர் முகமது
அப்பா, மேலூர் மாவேந்தன், தேனி சீருடையான், அல்லி உதயன், வசந்த தீபன் போன்ற எழுத்தாளுமைகளின் அறிமுகமும், காமுத்துரை, சேதுராம் போன்றோர்களுடன் ஏற்பட்ட அனுபவப்பகிர்வும் இவரது படைப்புகளை மென்மேலும் செம்மையாக்கியது.
இலக்கிய உலகிற்கு போடி மாலனை அடையாளப்படுத்தியது
இவரின் கவிதைகள்தான்.
இவர் லட்சுமணன் ஆதித்யா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். மேலூர் மாவேந்தன், புத்தூரான், கந்தர்வன் உட்பட பல ஆளுமைகளின் தலைமையில் பல கவியரங்கம் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் இவர் சிறந்த
பட்டிமன்ற பேச்சாளர். இவர்
தமுஎகச தேனி மாவட்டத்தின் செயலாளராக இருந்தபோது தமுஎகசவும், தமிழ் உயராய்வு மையமும் இணைந்து சங்க இலக்கியத்தை வெகு மக்களிடையே கொண்டு செல்லும்
முயற்சியில் இவர் பெரும் பங்கு வகித்தார். இதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சங்க இலக்கியத்தைக் கொண்டு சேர்த்தார்.
கவிதை மட்டுமல்லாது பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல சிறுகதைகள் செம்மலர், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருடைய சிறுகதைகள் "இன்னும் சில கதைகள்"
தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவரின் ஜமீன் பாண்டி டீக்கடை எனும் சிறுகதை பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு செம்மலர் இதழில் வெளிவந்துள்ளது. மேலும் இச்சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசையும் பெற்றுள்ளது.
இவரின் முதல் நாவல் ”அலையும் காலம்”.
பாலைவனச் சோலை என்னும் படத்தின் தாக்கமாக தன்னையும் தன் நண்பர் குழுவையும் மனதில் கொண்டு, வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் படும் வேதனையை அழுத்தமாக கூறும்
வகையில் இவர் எழுதிய நாவல் இது. 1980 களிலேயே
இந்த நாவலை போடி
மாலன் எழுதி
முடித்திருந்தாலும், வெளியிடப்படாமல்
பரண்
மேல் கிடந்தது. ச.தமிழ்செல்வன், ம.காமுத்துரை
ஆகியோரின்
முயற்சியால் 2008 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் இந்நாவலை
வெளியிட்டது. ”இந்த நாவல் 1980 களில் வெளிவந்திருந்தால் போடி மாலனுக்கான சரியான அங்கீகாரத்தை பெற்றிருக்கும்” என்ற வருத்தம் தனக்கு இருப்பதாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
எழுத்து உலகில் மட்டுமல்லாது வீதி நாடகங்களிலும் சமூக அக்கறையுடன் பெரும் பங்காற்றியவர் போடி மாலன். வீதி நாடகக் கலைஞர் சப்தர்ஹஸ்மி அவர்களின் படுகொலைக்குப்
பிறகு,
நாடெங்கும் எழுந்த போராட்டத்தின் விளைவாக போடி நகரிலும் தனது நண்பர்களுடன் இணைந்து ’பாரதி கலைக்குழு’
என்ற நாடகக்
குழு ஒன்றை உருவாக்கினார். அதில் சமூக அவலங்களையும் முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் நாடகப் பணிக்கு பெரும் உதவி செய்தவர்கள் தோழர் கமலக்கண்ணன் மற்றும் ஓவிய
ஆசிரியர் எல்லோரா அவர்கள். 30 வருடங்களுக்கு முன்னால் இவர் எழுதிய முதலாளித்துவத்தின்
சதிகளை அம்பலப்படுத்தும் ’ஓரடி முன்னால்’ என்ற நாடகம் பரவலான
கவனத்தைப் பெற்றது. அதேபோன்று
சாதியக் கொடுமைகள் தொடர்பாக இவர் எழுதிய ’மாரியாத்தா காளியாத்தா’
என்ற நாடகத்திற்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் 1990 களிலேயே அன்றிருந்த
வீடியோ கேசட் பதிவின் மூலம் ’ஓரடி
முன்னால்’
என்னும் ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.
இவர் தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் போடி நகரின் செயலாளராகவும், தேனி மாவட்டத்தின் செயலாளராகவும், மாநிலத் துணைச் செயலாளராகவும்
பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போடி கிளையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1996 ஆம்
ஆண்டு, போடியின் நகர் மன்றத்
தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று 5 ஆண்டுகள் போடி நகர்
மன்ற உறுப்பினராகவும்
பொறுப்பு வகித்தார்.
இப்படி பல துறைகளிலும் தனது முத்திரை பதித்த எழுத்தாளர் போடி மாலன் அவர்கள், புற்றுநோய் காரணமாக மே 25, 2013 அன்று காலமானார். நோயின் தாக்கம் காரணமாக பத்து நாட்கள் சுயநினைவற்று கண் மூடிக் கிடந்திருந்த நிலையில், அவரைக் காண வந்த எழுத்தாளரும், பிரியமானவருமான ச.தமிழ் செல்வன் அவர்களின் குரல் கேட்டு இறுதியாய் கை அசைத்து இம்மண்ணுலகை விட்டு விடை பெற்றார் போடி மாலன்.
தேனி மாவட்ட தமுஎகச போடி மாலனின் நினைவாக ஆண்டு தோறும்
சிறுகதைப் போட்டியை நடத்தி வருகிறது.
வெளிவந்துள்ள நூல்
1. அலையும் காலம் (நாவல்)
பரிசு
1. சிறந்த சிறுகதைக்கான ’இலக்கியச் சிந்தனை’ பரிசு