தொகுப்பு : ஜெயஸ்ரீ
"எழுத்திற்கு காலம் என்பது நாடித்துடிப்பை போன்றது. நவீனத்துவத்தையும் சமகால சமூக நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி எழுதும் எழுத்துக்களே நிலைபெற்று நிற்கும்" எனக்கூறும் வெ. சகுந்தலா என்கிற கவிஞர்.ரத்திகா 1965 இல் ஜூன் மாதம் 22 ஆம் தேதி சந்திரா - வெங்கட்ராமன் ஆகியோருக்கு இளைய மகளாக ஆந்திர மாநிலம் நாகர்ஜுனா சாகரில் பிறந்தார்.
இவர்
தந்தை அணைக்கட்டுகளில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின்னர் துவரங்குறிச்சி
பேருந்து நிலையத்தில் புத்தகக்கடை நடத்தியவர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை
துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலிம், சாவித்திரி வித்யாசாலாவிலும் படித்தவர். கல்லூரிப் படிப்பை இடைவிட்டவர்.
திருமணம் ஆனதால் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆசிரியர் பயிற்சியை
முடித்திருந்தார். இவரின் இணையர் திரு. எஸ். முத்துக்கிருஷ்ணன் சிறைத்துறைதுறையில்
சிறப்பு புலனாய்வு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கவிஞர் ரத்திகா அவர்களின் தாயார் முற்போக்குவாதியாகவும் பெரியார் கொள்கைகளைப் பெரிதும் விரும்புவராகவும் இருந்தமையால் இவருக்கும் முற்போக்கு கருத்துகளின் மீது தீவிரப் பிடிப்பு ஏற்பட்டது. ரத்திகா அவர்களின் தந்தை ஆன்மீகவாதியாக இருந்தது குறிப்பிடத் தகுந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு,, இந்தி மொழிகளை ஓரளவு அறிந்தவர். தந்தை நடத்திய புத்தக்க்கடை மூலமாக வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் சல்மா, கவிஞர் ரத்திகா மூவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஐந்தாம் வகுப்பில் தனது முதல் கவிதை கோகுலம் மாத இதழில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து எட்டாம் வகுப்பில் குமுதம் இதழில் தனது இரண்டாம் படைப்பான சிறுகதை வெளியானது. பத்தாம் வகுப்பில் தினமலர் நாளிதழில் கடைசி பக்கத்தில் இவர் எழுதிய புதுக்கவிதைகள் வெளியாயின. அதன் பிறகு நான்கு வாரங்களுக்கு ஒரு முறை இவரின் புதுக்கவிதைகள் தினமலர் நாளிதழில் வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.
இவருக்கு இரு மகள்கள் பிறந்த பின்னரே ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது. 19 வருடங்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும். 3 மூன்று வருடங்கள் தலைமை ஆசிரியாகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
பள்ளிப்பருவத்தில் இவருடைய தமிழாசிரியர்கள் திரு. அருளாநந்தம், திரு. அண்ணாமலை மற்றும் திரு. மாணிக்கம் ஆகியோரின் ஊக்கம் இவர் எழுதுவதற்கும் தமிழ் மீதான ஆர்வத்திற்கும் தூண்டுகோலாக விளங்கியுள்ளது.
2008 இல் இவரின் முதல் கவிதை நூலான "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து" வெளியானது.
உயிரெழுத்து பத்திரிக்கை ஆசியரான சுதிர் செந்தில் என்பவரால் இவருக்கு 'ரத்திகா' என்ற
புனைப்பெயர் ஏற்பட்டது. இணையர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகள்கள் கிருத்திகா,
திவ்ய பாரதி இவர்களின் பெயர்களிலிருந்து எழுத்துக்கள்
கோர்க்கப்பட்டு 'ரத்திகா' என உருவானது.
2008 இல் திருச்சியில் நடைபெற்ற தமுஎகச கூட்ட விளம்பரம் ஒன்றைப் பார்த்து முதன் முறையாக பங்கேற்றார். பிறகு கவிஞர் இளங்குமரன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு தமுஎகசவில் உறுப்பினராக இணைந்தார்.
2010 ஆம் ஆண்டு மாநில அளவில் சாகித்ய அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவிஞர்கள் இருபது பேரில் இவரும் ஒருவராக மைசூரில் நடைபெற்ற கவியரங்கத்தில் ஐந்து கவிதைகள் வாசித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது தமுஎகச மாநிலக் குழுஉறுப்பினராகவும், பெண்கள் உப குழுவிலும் உள்ளார்.
மேலும் 'கலைஞர் 90' என்ற
நிகழ்விற்காக கலைஞர் அவர்களுடன் ஒருநாள் பிரபல ஐந்து நட்சத்திர நிறுவனமான தாஜ் கோரமண்டலில்
பங்கேற்க அழைக்கப்பட்ட தொண்ணூறு கவிஞர்களில் இவரும் ஒருவர் என்பது
பெருமைக்குரியது. பல திரைப்படங்களுக்கு திரைவிமர்சனங்கள் அளித்து வரும் கவிஞர்
ரத்திகா அவர்கள் இயக்குனர் பாண்டிராஜின் 'கேடி பில்லா
கில்லாடி ரங்கா' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
வெளிவந்துள்ள நூல்கள்
தேய்பிறையின்
முதல் நாளிலிருந்து (கவிதைத் தொகுப்பு - 2008)
ரத்திகா
பவளமல்லியின் படைப்புலகம் (காரைக்குடி அழகப்ப செட்டியாரால் தேர்ந்தெடுத்த பெண் 33
கவிஞர்களின் 100 கேள்வி பதில் தொகுப்பு - 2017)
ஒரு முழம் வெயில்
(தமுஎகச பெண் பாடலரிசியர்கள் 8 பேர்களின் கவிதைகள் கவிஞர் ஏகாதசியால்
தொகுக்கப்பட்டது - 2018)
பெற்றுள்ள விருதுகள்
சாகித்ய அகாடமி
மாநில விருது - 2010
திருப்பூர் சக்தி
விருது 2014
திருச்சி இலக்கிய
பேரவை விருது 2014
கம்போடியா
தமிழ்ச்சங்கத்தின் 'வீரமங்கை வேலு நாச்சியார்' விருது 2019