தொகுப்பு: சுகன்யா. இரா
“என் முன் வாழும் சமூகத்தில் எற்படும் அதிர்வுகளுக்கு
உடனடி வினையாக உணர்வுகளை வெளிப்படுத்துவதா அல்லது உரையாடல் நிகழ்த்துவதா என்ற ஒரே கேள்விதான்.
உணர்வுகளை வெளிப்படுத்துவது என்றால் கவிதை. உரையாடல்
நிகழ்த்துவது என்றால் கட்டுரை. கவிதைக்கு மிகை மெய்யழகு.
கட்டுரைக்கு உண்மை அழகு.” என்று கூறும் எழுத்தாளர்
மு. ஆனந்தன் தனது கட்டுரைகளில் ஊடாடும் சங்கதிகளை உண்மைத்தன்மையுடன்,
ஆதாரங்களுடன், தரவுகளுடன் படைக்கிறார்.
அதே வேளையில் தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் கவிதை மனமே தன்னை இயக்கிக்
கொண்டிருக்கிறது என்றும், தான் கவிதை எழுதிய பொழுதுகளை தன் வாழ்வின்
அர்த்தம் பொதிந்த பொழுதுகளாக உணர்வதாகவும் கூறுகிறார்.
கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை
எழுத்தாளர், வழக்கறிஞர், சமூக
செயல்பாட்டாளர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமை மு. ஆனந்தன்
அவர்கள். ஈரோடு மாவட்டம் பவானியில் மார்ச் 20, 1970 ஆம் ஆண்டு, மாரம்மாள் - PP முருகன்
தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தனது பன்னிரண்டாம் வகுப்பு வரை
பவானி அரசு மேல் நிலை பள்ளியில் பயின்றார். பின் மதுரை சட்டக்
கல்லூரியில் படித்து சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்று வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இணையர் – ரதி, மகன்
– அகழ் முருகன் மற்றும் மகள் – அமுத நிலாவுடன்
தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
பள்ளி காலங்களில் எழுத்தாளர் கி.ரா எழுதிய ‘கதவு’ சிறுகதை தன்னை மிகவும் பாதித்தாகவும், அதைத் தொடர்ந்து கி.ரா எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘கோபல்லபுரத்து மக்கள்’ வாசிப்பு அனுபவம் தன்னை இலக்கியத்தின் பால் ஈர்த்தாகவும் கூறுகிறார்.
பள்ளி காலங்கள் முதலே நூலகம் சென்று வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்த
இவர், தனது நண்பர்களுடன் இணைந்து பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்
பொழுது, ‘யாழ்’ என்ற கை எழுத்து பிரதியை
கொண்டுவந்தார். பள்ளி கல்லூரி காலங்களில் இலக்கிய போட்டிகள் ஒருங்கிணைப்பது,
தாமே எழுதி நாடகங்கள் அரங்கேற்றுவது, கல்லூரி பத்திரிக்கைகளில்
கவிதை எழுதுவது என்று படிப்படியாக தனது இலக்கிய ஆர்வம் எழுத்தாக உருமாறியதாக உணர்கிறார்.
‘சமத்துப் பிள்ளை’ என்ற கவிதை வண்ணக்கதிரில் வெளிவந்த
தனது முதல் பிரசுரமாக நினைவுகூறும் இவர், தற்போது தீக்கதிர்,
தி இந்து தமிழ் திசை, புத்தகம் பேசுது,
செம்மலர், கல்கி, புதுவிசை,
கீற்று டாட்காம், வாசகசாலை டாட்காம், மின்னம்பலம் டாட்காம் உட்பட பிரபல அச்சு மற்றும் மின் இதழ்களில் நூற்றுக்கும்
அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பல்வேறு
பொதுப் பிரச்சனைகளைப் பேசினாலும், சமூக நீதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் பாதுகாப்பு, சுற்று சூழல்
பாதுகாப்பு ஆகிய கருபொருட்கள் இவரது கட்டுரைகளில் மட்டுமல்லாது இவரது சமூக செயல்பாடுகளிலும்
மையமாக திகழ்கிறது.
அரசு, அதிகாரம் மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக,
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தனது பெரும்பான்மையான படைப்புகள் மட்டுமின்றி
தானும் களத்தில் ஒலிக்கிறார். வீரப்பன் தேடுதல் அதிரடிப்படை
வீரர்களால் பாதிக்கப்பட்ட சின்னாம்பதி மலை கிராம மக்களுக்கு 1994 ஆம் ஆண்டில் வழக்கு நடத்தி, நிவாரணம் பெற்று தந்தார்.
காணுயிர் பாதைகள், நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு,
சட்ட விரோத கட்டுமானங்கள், பழங்குடி மற்றும்
பட்டியலின மக்களின் நிலங்கள் அபகரிப்பு, பண மோசடி என்று நீளும்
ஈஷா யோகா மையத்தின் மீதான புகார்களுக்கு தன் கட்டுரைகள் மூலம் குரல் கொடுத்து வெளி
உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய முன்னோடிகளில் ஒருவர் மு ஆனந்தன். கோவை மாவட்ட நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும்
ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகளை நடத்தி வருகிறார்.
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள்
தடுப்பு) சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகள், மாதர் சங்கத்துடன் இணைந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர்களுக்கான
வழக்குகள் மற்றும் சமூக நீதி தொடர்பான வழக்குகள், பொது நல வழக்குகள்
பல, தானே முன்னின்று நடத்தியும் வழிகாட்டுதல் வழங்கியும் ஒரு
சமூக செயல்பாட்டாளராக தொடர் பணியாற்றி வருகிறார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர், கோவை மாவட்ட தலைவர் மற்றும் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது கோவை மாவட்ட கௌரவ தலைவராகவும் தேசிய குழு உறுப்பினராகவும் இயங்கி
வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கத்தின் (தமுஎகச) கோவை மாவட்டச்
செயலாளராகவும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
1000 பங்கேற்பாளர்களுடன், 111 கவிஞர்களின் கவிதை வாசிப்பு
அரங்கேறிய, 10 அமர்வுகள் கொண்ட 9 மணி நேர
தொடர் நிகழ்ச்சியாக 2001 ஆம் ஆண்டு – ‘மஹா
கவி அரங்கம்’, மு ஆனந்தன் அவர்களின் பொறுப்பு காலத்தில்,
கோவை மாவட்ட தமுஎகசவின் ஏற்பாட்டில், சாதனை நிகழ்வாக
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்று
கிழமைகளில் இலக்கிய சந்திப்பு நடைபெற்று வருகிறது. கரோனா பொதுமுடக்க
காலத்திலும் இணைய வழி சந்திப்புகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த இந்நிகழ்வுகள்,
தற்போது 220 சந்திப்புகளைத் தாண்டி வெற்றிகரமாக
மீண்டும் நேரடி சந்திப்புகளாக தொடர்கிறது.
சமரசமற்ற கட்டுரைகளை கட்டமைக்கும் எழுத்தாளர் மு ஆனந்தன் அவர்களின்
‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ கவிதைத் தொகுப்பு 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. இயற்கை, சமூகம் மற்றும் அரசியல் அத்துமீறல்களையும் அவலங்களையும், கவிதைக்கே உரிய அழகியலின் உச்சியிலிருந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்நூல் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவரால்
ஆய்வியல் நிறைஞர் (M. Phil) பட்ட படிப்பிற்காக ஆய்வு செய்யப்பட்டது.
இவரது முதல் நூல் ‘தேசமே சிறைச்சாலை ஆகும்’ –
கட்டுரைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது.
சமகாலச் சமூக, அரசியல், பண்பாட்டு
அதிர்வுகளின் பதிவுகளாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு
- ‘பூஜ்ஜிய நேரம்’. இந்நூல் மார்ச்
2021 இல் இராண்டாம் பதிப்பு கண்டது. ஆங்கிலத்தில்
எழுத்தாளர் பி.எஸ். கிருஷ்ணன் எழுதிய ‘சமூக நீதிக்கான
அறப்போர் - நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’
என்ற நூலை தமிழிலில் மு ஆனந்தன் மொழிபெயர்த்து 2019 ஆம் ஆண்டு சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டது. செம்மலர்
மற்றும் மின் இதழ்களில் பல திரைவிமர்சனங்கள் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாலினம் பேசுபொருளாக கொண்ட 9 சிறுகதைகள் உட்பட
14 சிறுகதைகள் எழுதியுள்ளார். விரைவில் இவரது சிறுகதை
தொகுப்பு வெளிவரவுள்ளது.
வெளிவந்துள்ள நூல்கள்
’தேசமே சிறைச்சாலை ஆகும்’ – கட்டுரைத் தொகுப்பு – 2004
2.
‘யுகங்களின்
புளிப்பு நாவுகள்’ கவிதைத் தொகுப்பு - 2017 – அகநி வெளியீடு
3. ‘பூஜ்ஜிய நேரம்’ - கட்டுரைத் தொகுப்பு – 2019 – பாரதி புத்தகாலயம்
’சமூக நீதிக்கான அறப்போர்’ – மொழிபெயர்ப்பு – 2019 – சவுத் விஷன்
பரிசுகள், விருதுகள்
வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2017 , சிறந்த கவிதை தொகுப்பு – ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’
திருப்பூர் இலக்கிய விருது – சிறந்த கவிதை தொகுப்பு – ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’
புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது - 2019 ஆண்டுக்கான சிறந்த கட்டுரைத் தொகுப்பு - ‘பூஜ்ஜிய நேரம்’
திருநங்கையர் ஆவண மையம் நடத்திய சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டியில் (2021) ‘ஜாட்ளா’ சிறுகதைக்கு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது.
இணைய இணைப்புகள்
வாசகசாலை - சிறந்த கவிதைத் தொகுப்பு விருது காணொளி