தொகுப்பு : கு.ஹேமலதா
"தேசிய இனங்கள் மற்றும் மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டவும்,மெய்யான சமத்துவ பார்வையை உருவாக்கவும் சோஷியலிச சிந்தனை வழியாகவே சாத்தியமாகும்.அந்த மாற்றத்தை நோக்கிய பாதையை இடதுசாரிகளே முன்னெடுப்பார்கள்" என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் கவிஞர் இரா.தெ.முத்து அவர்கள் 7.3.1961 இல் இசக்கியம்மாள் - இராமையா தம்பதியருக்கு மூத்த மகனாக, கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் பிறந்தார்.
இராமையா தென்கரைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட தோழர் இரா.தெ.முத்து அவர்கள் கவிஞர், எழுத்தாளர், கலை இலக்கிய விமர்சகர், அரசியல் பண்பாட்டு செயற்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர், புத்தகம் பேசுது ஆசிரியர் குழு உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர். மனைவி பாக்கியலட்சுமி, இரு மகள்கள் சிந்து மற்றும் இலக்கியா ஆவர்.
எழுத்தாளர் பொன்னீலனை வகுப்பாசிரியராகவும் துணைத்தலைமை ஆசிரியராகவும் கொண்ட அவரது பள்ளி காலத்தில் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக பல தமிழ் போட்டிகளில் பங்கேற்றும்,பல கவிதைகள் எழுதியும் பரிசுபெற்றுள்ளார்.அச்சிறுவயதிலேயே 'சங்க இலக்கிய' நூல்களை வாசிக்கும் ஆர்வம் மேலோங்கி,உள்ளூர் நூலகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
பல அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள்,சமூக நாடகங்களின் தாக்கத்தினால் தன்னுடைய பதினான்காவது வயதில் 'தாயின் மடியில்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார். பல உள்ளூர் நாடக குழுக்களுக்கும் நாடகங்கள் எழுதித் தரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டவர்.
தனது குடும்ப வாழ்வாதாரம் நிமித்தமாக தங்கள் சொந்த ஊரிலிருந்து குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறும் சூழல் ஏற்பட்டு,தனது மேற்படிப்பை சென்னையில் தொடர்ந்தார்.சென்னை பல்கலைகழகத்தில் தொலைநிலைக்கல்விசார் நேர்முக வகுப்பில் கவிஞர் அக்னிப்புத்திரனிடம் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த வேளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மேல் உள்ள ஈடுபாட்டில் படிப்பை பாதியில் விட்டு கட்சியின் முழுநேர பண்பாட்டுப் பணிக்கு வந்துவிட்டார்.
1982 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து நாற்பதாண்டுகளாக அதன் பண்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.தமுஎகசவின் உறுப்பினராக ஆரம்பித்த அவரது பயணம் ஒன்றுபட்ட சென்னை மாவட்டப் பொருளாளர், வடசென்னையின் முதல் மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாநில துணைப்பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், மாநில துணைத்தலைவர் என பல பொறுப்புகளில் அவரது பணி தொடர்கிறது. தமுஎகசவின் பல மாநில நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
1982-84 ஆண்டுகளில் தன் சொந்த ஊரான ஆரல்வாய்மொழியில் தமுஎகச கிளை
இல்லாத அவ்வூரில் இவரது பொறுப்பில் கிளை ஆரம்பிக்கப்பட்டு அதன் கிளை செயலாளராக
பொறுப்பேற்று வழிநடத்தியுள்ளார்.அங்கு இருந்த அறிஞர் அண்ணா கல்லூரி பேராசிரியர்கள்
சிலர் தமுஎகசவின் கிளை உறுப்பினர்களாக இருந்தமையால்,உள்ளூர் இளைஞர்களின் இலக்கிய சிந்தனையை ஊக்குவிக்கும்
பொருட்டு ஆரம்பித்த 'சிற்பம்' கையெழுத்து
இதழின் ஆசிரியராக சில காலம் பொறுப்பேற்றுள்ளார்.அதே காலகட்டத்தில் இலங்கையில்,
தமிழ் போராளிகளை சுட்டுக்கொன்ற இலங்கை அரசை கண்டித்து
தமிழகத்தில் பல தமிழ் எழுச்சி பேரணிகள் நடந்தது.அதில் ஆரல்வாய்மொழியில் நடந்த
மாபெரும் பேரணியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தியவர்களுள் ஒருவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த தமுஎகச மாவட்ட மாநாட்டில் இவர் வாசித்த கவிதையினால் ஈர்க்கப்பட்ட அன்றைய தமுஎச வை உருவாக்கிய முதல்பொதுச்செயலாளர் கே.முத்தையா அவர்கள் அக்கவிதையை 'பூமியே புல்லரிக்க' என்ற தலைப்பில் செம்மலர் இதழில் வெளியிட்டார். இதுவே கவிஞர் இரா.தெ.முத்து அவர்களின் பிரசுரமான முதல் கவிதையாகும். இந்நிகழ்வு அவரை தொடர்ந்து பல கவிதைகள் புனைய பெரும் உந்துசக்தியாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து இவரது படைப்புகள் தீக்கதிர், செம்மலர், இளைஞர்முழக்கம், மகளிர்சிந்தனை, சுபமங்களா, தினத்தந்தி, புத்தகம் பேசுது, இந்து தமிழ்திசை, நக்கீரன், கணையாழி போன்ற முன்னணி ஏடுகளில் வெளிவர ஆரம்பித்தது.படைப்புகள் மட்டுமின்றி இவர் பங்கேற்ற கலந்துரையாடல்களும் பிரசுரமாகி உள்ளன.
இவரது முதல் கவிதை தொகுப்பு நூல் 'மாநகர மனிதன்' 2003 ஆம் ஆண்டு சந்தியா பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளிவந்தது.
மகாகவி பாரதியின் அதிகம் அறியப்படாத ஆன்மீக கதைகளின் உள்ளீடான அரசியல்,வரலாறு போன்ற செய்திகளை ஆய்வு ரீதியாக 'பேசாப் பொருளை பேசிய பாரதி'என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேட்டில் 2011 ஆம் ஆண்டு 16 வாரங்கள் தொடர்ந்து எழுதியுள்ளார் கவிஞர் இரா.தெ.முத்து அவர்கள்.அவரின் இரண்டாவது நூலாக இத்தொடரை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது.
அன்றைய முன்னணி எழுத்தாளுமைகள் முதல் இன்றைய சமகால எழுத்தாளர்கள் வரை, அவர்களது முதல் படைப்பு பிரசுரமான அனுபவங்களை 'முதல் பிரவேசம்' என்ற பெயரில் தொடராக புத்தகம் பேசுது மாத இதழிற்காக ஒருங்கிணைத்து இயங்கியவர். மேலும் செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சாகித்யஅகாடமி ,சென்னைப் பல்கலைக்கழகம்,பாரதி புத்தகாலயம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், இயல் இசை நாடக மன்றம், சிகரம் அறக்கட்டளை ,கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு போன்ற பல அமைப்புகள் முன்னெடுக்கும் ஆய்வு அமர்வுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், கவிதைகள் முன் வைத்து பங்களிப்பு செய்து வருகிறார். ஜெயா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர், புதியதலைமுறை, வின் தொலைக்காட்சிகளிலும், சரிநிகர் யூடியூப் சேனலிலும் இவரது நேர்காணல்கள் பல ஒளிபரப்பாகியுள்ளன.
'சூடும் சுடரும்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதைகளை பிரசுரித்த 'தாய்' வார இதழின் ஆசிரியர் வலம்புரிஜான் மற்றும் சென்னை
தொலைக்காட்சியின் இளையபாரதம் நிகழ்வில் கவிதை வாசிக்க உதவிய நிலையப் பொறியாளர்
இராமசாமி ஆகியோரை தொடக்ககாலத்தில் தன்
கவிதைகளுக்கு உத்வேகமும் ஆதரவும் தந்தவர்கள் என நினைவு கூர்கிறார்.
வெளிவந்துள்ள நூல்
# மாநகர மனிதன் (2003)
விருதுகளும் பரிசுகளும்
# மதுரை தமிழ்ச் சங்கம் மாணவர்களுக்காக நடத்திய தமிழ்ப் போட்டியில் முதல் வகுப்பில் வென்று நற்சான்றிதழ் (1977)
# தமிழுக்கு நீதி கேட்டு தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கான தமுஎகச பாராட்டுச் சான்றிதழ் (2000)
# 'முகம்'மாமணி அவர்களின் இலக்கிய வட்டத்தின் சார்பில் 'இலக்கியப் புரவலர்' விருது (2005)