தொகுப்பு : கு.ஹேமலதா
'சக மனிதனைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தோடு இணைந்து நிற்கவும் வேகமாகத் தகவமைக்கிற மனம் அவசியம். அதனை வாசிப்பும், சமூகச் செயல்பாடுகளுமே உருவாக்கும்' என்ற கருத்தை வலியுறுத்தும் தோழர் அ.உமர் பாரூக் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் 1978 இல் கே.எஸ்.அப்துல் கரீம் - சர்புநிஷா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஒரு சகோதரர் தமீம் அன்சாரி. எளிய பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிக் கல்வியை கம்பத்திலும், மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பப் படிப்பினை தேனி மாவட்டம் போடியில் 'பாரத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்' நிறுவனத்திலும் முடித்துள்ளார். மருத்துவ ஆய்வுக்கூட நுட்பநராகவும், இரத்தவியல் பணியாளராகவும் கம்பத்திலும், கேரளா மாநிலம் கொல்லத்திலும் மருத்துவமனைகளில் சில ஆண்டுகள் பணியாற்றினார். மருத்துவப் பணியில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அலோபதி மருத்துவத் துறையை விட்டு வெளியேறி, சிலகாலம் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அலோபதி மருத்துவச் சிக்கல்கள் பற்றிய புரிதலுக்குப் பிறகு, மரபு வழி மருத்துவங்களின் மீது ஆர்வம் கொண்டார். ஹோமியோபதி, பயோகெமிஸ்ட்ரி, மலர் மருத்துவம், காந்த சிகிச்சை, ரெய்கி, இயற்கை மருத்துவம் என்று பல மருத்துவ முறைகளில் பயிற்சி பெற்றார். 2002 ஆம் ஆண்டின் இறுதியில் அக்கு ஹீலர் போஸ் அவர்களுடனான சந்திப்பால் அக்குபங்சர் மருத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. போஸ் அவர்களை ஆசானாக ஏற்று, அக்குபங்சர் கற்றுக் கொண்டார். மாற்று மருத்துவத்தில் பத்திற்கும் மேற்பட்ட பட்டயப் படிப்புகளை நிறைவு செய்துள்ள இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் அக்குபங்சர் பட்டயமும், சி.வி.ராமன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டமும், கர்நாடகப் பல்கலைகழகத்தில் அக்குபங்சர் பட்ட மேற்படிப்பும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உளவியலில் பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு 'கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர்' என்ற நிறுவனத்தை அக்கு ஹீலர் போஸ் அவர்களோடு இணைந்து உருவாக்கினார். தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தக் கல்லூரியாக இயங்கும் கம்பம் அகாடமியின் முதல்வராகப் பணியாற்றுகிறார். தற்போது முழுநேர அக்குபங்சர் மருத்துவராகவும், பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், அக்குபங்சர் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். மனைவி மு.அராபத் உமர். அக்குபங்சர் மருத்துவராக பணியாற்றுகிறார். அணுஷா, கவின், மீரா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே வாசிப்பின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக, அவரது நண்பர்கள் அய்.தமிழ்மணி, மு.ஜெய்கணேஷ் மற்றும் கி.ஜெயபால் ஆகியோரோடு நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு அவர் கண்ட கையெழுத்து பிரதிகளே அவரை எழுதத் தூண்டுகோலாக அமைந்தன. அவைகளை உதாரணமாக வைத்து நண்பர்களோடு இணைந்து கட்டுரை, கவிதை என எழுதத் துவங்கினார். நண்பர்கள் இணைந்து கையெழுத்து பத்திரிகையைத் தயாரித்தனர். நூலகரிடம் கொடுக்கத் தயங்கி, நூலகம் அடைத்த பின் கதவுக்கடியில் போட்டு விட்டு வந்துவிடும் அவர்களது கையெழுத்து பிரதிகள் மறுநாள் நூலக மேஜையில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. தொடர்ந்து 2 வருடங்களாக கையெழுத்து பிரதிகள் எழுதிய அனுபவத்தால் பல புதிய இளம் எழுத்தாளர்களின் தொடர்பு கிடைத்தது.
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட அவர், அங்கு சேர்ந்த பின்பே எழுத்து, வாசிப்பு பற்றிய பல புரிதல்களை அடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பதினொன்றாம் வகுப்பு இறுதியில் தன் நண்பர்களோடு இணைந்து 'உங்கள் நண்பன்' என்ற கையெழுத்து பத்திரிகையை அச்சிதழாக கொண்டு வந்து, பின் சிறிது காலத்திலேயே பொருளாதார நெருக்கடி காரணாமாக இதழைத் தொடர முடியாமல் கைவிட்டார். அதைத் தொடர்ந்து கவிஞர் இதயகீதன் அவர்களின் 'அக்கினிக்குஞ்சு' இலக்கிய இதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். பள்ளி வாழ்க்கை முடிந்து, சார்பு மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டே 'யுகம்' என்ற சிற்றிதழைத் துவங்கி, மாத இதழாக சில ஆண்டுகள் நடத்திவந்தார். அவருடைய கவிதைகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்து கொண்டிருந்தன.
1997 ஆம் ஆண்டு தோழர் உமர் பாரூக் – நண்பர் அய்.தமிழ் மணியோடு இணைந்து எழுதிய ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்டு முதல் நூலான 'சுவடி' வெளிவந்தது. தொடர்ந்து இருவரும் இணைந்து எழுதிய 'மனிதச் சுவடுகள்', 'வீதி' என கவிதை நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. 2000 ஆம் ஆண்டு அய்.தமிழ்மணியுடன் இணைந்து 'விழி' எனும் மாத ஏட்டினை கொண்டு வந்தார். முதல் இதழிலேயே காவல்துறையுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணாமாக 'விழி'யின் போஸ்டர்களை காவல்துறை தடை செய்தது.
2004 - 2006 வரை வாசிப்பு, எழுத்தில் இருந்து விலகி, அக்குபங்சர் மருத்துவத்தில் முழு நேரச் சிந்தனையோடு பயணப்பட்டார். 2007 ஆம் ஆண்டு மறுபடியும் கவிதைகள் எழுதத் துவங்கி, ”வானவில்” என்ற தொகுப்பு வெளியானது. அதன் பிறகு, மருத்துவக் கட்டுரைகள் பல முன்னணி இதழ்களில் தொடராக வெளிவர ஆரம்பித்தன. அவரது மருத்துவக் கட்டுரைகள் இன்று வரை 31 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அக்குபங்சர் பாடத் திட்டக் குழுக்களில் பணியற்றியுள்ளார். இவரின் பத்திற்கும் மேற்பட்ட மருத்துவ நூல்கள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
விகடன் குழுமமும், நடிகர் ராகவா லாரன்ஸும் இணைந்து நடத்திய 'அறம் செய விரும்பு' என்ற திட்டம் கீழ் 100 தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து, ஒரு கோடி ரூபாயை மக்கள் பணிக்குச் செலவிட தீர்மானித்தது. அத்திட்டதில் அவர்கள் தேர்ந்தெடுத்த 100 நபர்களில் தோழர் உமர் பாரூக்கும் ஒருவர். இத்திட்டத்தின் கீழ், அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மேகமலை, பளியங்குடி, இரவங்கலார் போன்ற மலைக்கிராம பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும், விண்வெளிக் கல்வி பெறுவதற்காக மாணவி உதயகீர்த்திகாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அறம் எனும் பெயரில் அறக்கட்டளையை நிறுவி சாதி, மத, இன, மதிப்பெண் பேதங்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்லூரிக் கனவினை நிறைவேற்றி வருகிறார். நான்கு ஆண்டுகளில் அறம் அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் முந்நூறு. கஜா புயல், கேரள வெள்ளம், சென்னை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அறம் அறக்கட்டளை களப்பணிகளிலும், நிதியிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறது.
மருத்துவம், இலக்கியம் எனப் பயணப்பட்ட தோழர் உமர் பாரூக் அவர்கள், தொல்லியல் துறையிலும் தன் தடத்தை பதிவு செய்து, தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகளை ஒருங்கிணைத்து, கள ஆய்வு செய்து, 'அழநாடு' என்ற நூலை 2020 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
எழுத்து, வாசிப்பு ஆர்வம் கொண்ட அக்குபங்சர் மருத்துவர்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கதின் 'அறம்” கிளையை 2018 ஆம் ஆண்டு உருவாக்கினார். அங்கு 'அகவிழி' என்ற வாசிப்புத் தளத்தை தொடங்கி பல எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்து, கிளை உறுப்பினர்களின் வாசிப்பு ஆர்வத்தை மேலும் தூண்டி, பல புதிய எழுத்தாளர்களையும் உருவாக துணைபுரிந்தார். இளம் எழுத்தாளர்களை உத்வேகப் படுத்தும் விதத்தில் அவர்கள் படைத்த 'ஹைக்கூ கவிதைகள்' மற்றும் 'சிறுகதை'களை கிளை சார்பில் நூல்களாக வெளியிடப்பட்டன. மேலும் , 11 எழுத்தாளுமைகளின் பேட்டியை குறுநூல்களாக அறம் கிளை வெளியிட்டது.
செம்பவளம் ஆய்வுத் தளத்தின் ஆய்வாளர் தோழர் செந்தீ நடராஜன் அவர்களுடன் இணைந்து அவர் நடத்திய 'தொல் எழுத்து பயிற்சி' யில் ஆதி எழுத்து வடிவமான தமிழி மற்றும் வட்டெழுத்து வாசிக்க, எழுத தமுஎகச அறம் கிளை உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 'வரலாற்று வேர்களைத் தேடி' என்ற தொல்லியல் பயண நிகழ்வுகளை நடத்தி நேரடியாக கல்வெட்டு எழுத்துகளை படிக்கும் வாய்ப்பையும் அமைத்துக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் விதம் 'தமிழி' எழுத்துருவை எழுத, வாசிக்க சுமார் 2000 குழந்தைகளுக்கு கற்றுத் தரப்பட்டது. தனது குழுவினரின் ஒத்துழைப்போடு சங்க இலக்கியங்களில் பலவற்றை தொல் எழுத்து வடிவங்களான தமிழியிலும், வட்டெழுத்திலும் எழுதி தொகுத்துள்ளார்.
“ஆல்ட்ராமைண்ட்” எனும் சமூக உளவியல் குழுவை உருவாக்கி, தனி மனித - சமூக மேம்பாட்டிற்கான உயர்நிலை உளவியல் பயிற்சிகளை வழங்கி வருகிறார். மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் நடத்தியுள்ளார். சிறுகதைகளுக்கென்றே துவங்கப்பட்டுள்ள “சிறுகதை” காலாண்டிதழின் நிர்வாகியாகப் பணியைத் தொடர்கிறார்.
தன் இலக்கியப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தோழர் உமர் பாரூக் தமுஎகச உறுப்பினராக, கம்பம் கிளை செயலாளராக, தேனி மாவட்டச் செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அறம் கிளையின் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இளம் வயதில் 44 நூல்களை எழுதியதற்காக சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) இடம்பெற்றுள்ளார்.
விருதுகளும், பரிசுகளும்
1.
நேதாஜி
விருது(2014)
2.
செம்மை
மரபுக்கல்வி ஆசான் விருது (2014)
3.
பாரதி
தமிழ் இலக்கிய பேரவையின் தேனி மாவட்ட எழுத்தாளருக்கான விருது
4.
அரியலூர்
மக்கள் சேவை இயக்கம் வழங்கிய 'இளம் இயற்கை ஆர்வலர்' விருது
5.
அக்குபங்சர்
ஹீலர்கள் பெடெரேஷன் வழங்கிய 'படைப்பூக்க விருது'
6.
அரசு
உயர்நிலைப் பள்ளி கே.கே.பட்டி வழங்கிய “கல்விப் புரவலர்’ விருது
7.
தமிழ்நாடு
அரசு பொதுநூலகத்துறை -தேனி மாவட்டம் வழங்கிய 'கலை இலக்கிய சாதனையாளர்' விருது
8.
'சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்' நாவலுக்காக கலை இலக்கியப் பெருமன்ற விருது.(2015)
9.
உலகத்
தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த நூலுக்கான விருது
10.
பாரதி
தமிழ் இலக்கிய பேரவையின் சிறந்த நாவலுக்கான விருது’2020
(ஆதுரசாலை)
11. இளம் வயதில் 44 நூல்களை எழுதியதற்காக “சர்வதேச சாதனைப் புத்தகத்தின்” (International Book of Records) பதிவு.
வெளிவந்துள்ள நூல்கள்
இலக்கிய நூல்கள்
(அய்.தமிழ்மணியோடு இணைந்து)
1.
சுவடி (கவிதைகள்) -
நிழல்கள் வெளியீட்டகம்
2.
மனிதச் சுவடுகள் -
மணிமேகலைப் பிரசுரம்
3.
வீதி (கவிதைகள்) - நிழல்கள் வெளியீட்டகம்
4.
நல்லாப்புரியும் நவீன கவிதைகள் - அகநி வெளியீடு
5. வானவில் (கவிதைகள்) - நிழல்கள் வெளியீட்டகம்
இலக்கிய நூல்கள்
6.
சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் (குறுநூல்) -
நிழல்கள் வெளியீட்டகம்
7.
ஏழாம் அறிவு (சிறுகதைகள்) -
நிழல்கள் வெளியீட்டகம்
8.
பாலை வயல் (கவிதைகள்) -
நிழல்கள் வெளியீட்டகம்
9.
சவுண்ட் சிட்டியும், சைலண்ட் கோட்டும் (நாவல்) -
எதிர் வெளியீடு
10.
மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர் (கட்டுரை) -
கருப்புப் பிரதிகள்
11. ஆதுர சாலை (நாவல்) - டிஸ்கவரி புக் பேலஸ்
12. அழ நாடு – தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள் -
டிஸ்கவரி புக் பேலஸ்
13. கோடிக்கால் பூதம் (நாவல்) - டிஸ்கவரி புக் பேலஸ்
உணவு குறித்த நூல்கள்
1.
உணவோடு உரையாடு - எதிர் வெளியீடு
2.
உண்ணுவதெல்லாம் உணவல்ல - மல்லிகை பிரசுரம்
3.
கிச்சன் டூ கிளினிக் - குங்குமம் வெளியீடு
4.
உணவின்றி அமையாது உலகு - விகடன் பிரசுரம்
5.
பால் ஏன் வேண்டாம்? - எதிர் வெளியீடு
6.
பேலியோ சிக்கல்கள் - எதிர் வெளியீடு
அக்குபங்சர் நூல்கள்
1.
மரபுமுறை அக்குபங்சர்
-
மரபுமுறை அக்குபங்சர் கவுன்சில்
2,
இந்திய அக்குபங்சர் -
புத்துயிர் பதிப்பகம்
3.
உடல்நலம் உங்கள் கையில் -
எதிர் வெளியீடு
4.
அக்குபங்சர் அறிவோம் -
எதிர் வெளியீடு
5.
இந்தியாவில் அக்குபங்சர்
-
பாரதி புத்தகாலயம்
6.
அக்குபங்சர் சட்டக் கையேடு -
எதிர் வெளியீடு
7.
தொடுசிகிச்சை கற்போம்
-
எதிர் வெளியீடு
8.
அக்குபங்சர் சட்டம்சொல்வதென்ன?
- எதிர் வெளியீடு
9.
நோய் முதல் நாடி -
எதிர் வெளியீடு
மருத்துவ அரசியல் குறித்த நூல்கள்
1.
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் -
எதிர் வெளியீடு
2.
மருத்துவத்தின் அரசியல்
-
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
3.
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
- எதிர் வெளியீடு
4.
உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம்
-
புதிய வாழ்வியல்
5.
உயிர்க்கொல்லி நோய்கள் – மீண்டும் வருகிறதா ஆபத்து? - எதிர் வெளியீடு
உடல்நலம், வாழ்வியல், மருத்துவம் குறித்த நூல்கள்
1.
உடலின் மொழி -
எதிர் வெளியீடு
2.
வீட்டுக்கு ஒரு மருத்துவர்
-
எதிர் வெளியீடு
3.
உங்களுக்குள் ஒரு மருத்துவர் -
எதிர் வெளியீடு
4.
குணமாக்கும் கலை -
புத்துயிர் பதிப்பகம்
5.
நோயின்றி வாழ நான்கு வழிகள்
-
எதிர் வெளியீடு
6.
நோய்களில் இருந்து விடுதலை
-
எதிர் வெளியீடு
7.
உடலோடு பேசுவோம் -
புதிய வாழ்வியல்
8.
மனமென்னும் மாமருந்து
-
மல்லிகை பிரசுரம்
9.
கிருமிகள் உலகில் மனிதர்கள்
-
எதிர் வெளியீடு
10.
வீட்டுப்பிரசவம் எளிது
-
புதிய வாழ்வியல்
11.
அடிப்படை உடலியல் -
எதிர் வெளியீடு
பல்கலைக்கழகப் பாடநூல்கள்
1.
அக்குபங்சர் உடலியல் -
தமிழ்ப் பல்கலைக்கழகம்
2.
அக்குபங்சர் வரலாறும் தத்துவங்களும்
-
தமிழ்ப் பல்கலைக்கழகம்
3.
அக்குபங்சர்
பயன்பாட்டியல் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
4. உயர்நிலை உடலியல் மற்றும் நோயியல்
-
தமிழ்ப் பல்கலைக்கழகம்
5. இயற்கை நிவாரணக்கலை -
தமிழ்ப் பல்கலைக்கழகம்
6. உடல் அமைப்பியலும், உடற்செயலியலும் -
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
7. அக்குபங்சர் அடிப்படைகள்
-
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
8. அக்குபங்சர் சக்திந்நாளங்கள் - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தொகுப்பு நூல்கள்
1.
குயில்தோப்பு (அய்.தமிழ்மணி – அ.உமர் பாரூக்) - நிழல்கள் பதிப்பகம்
2. மார்க்சியம் ஓர் அறிமுகம் – இதயகீதன் நினைவாக (அய்.தமிழ்மணி – அ.உமர் பாரூக்) - நிழல்கள் பதிப்பகம்
3.
பீர்முகமது அப்பா கதைகள் (ம.காமுத்துரை
– அ.உமர் பாரூக்)
- பாரதி புத்தகாலயம்
4.
தமிழி எழுத்துப்
பயிற்சி நூல் (மு.ஜெய்கணேஷ் – அ.உமர் பாரூக்) - அறம் அறக்கட்டளை
5. பேரிருளின் புதுச்சுடர்கள் (சிறுகதைகள்) – அ.உமர் பாரூக் - பாரதி புத்தகாலயம்
பிற
1.
மேலெழும் கீழடி ( ஆவணப்படம்) -
தமுஎகச, அறம் கிளை
2.
அழ நாடு – வாழ்வியல் விளையாட்டு -
ஆல்ட்ராமைண்ட்